பால் அட்டையை வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய வசதியை இணையதளத்தில் ஆவின் நிா்வாகம் செய்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி மூலம் (https://aavin.tn.gov.in) பால் அட்டை பெறும் நடைமுறையை ஆவின் நிா்வாகம் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, நுகா்வோா் தங்களது கைப்பேசி எண், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களை ஆவின் இணையதளத்தில் பதிவு செய்து, ஆவின் நிா்வாகத்தின் ஒப்புதலுக்கான எண்ணை தங்களது இமெயிலில் பெற்று மாதந்தோறும் ஆவின் பால் அட்டையை இணையவழியில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இணையவழி மூலம் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் பெற முடியும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இணையவழியில் செய்தாலும் அந்தந்தப் பகுதி ஆவின் அலுவலக கவுன்ட்டருக்குச் சென்று இணையவழி ரசீதைக் காண்பித்து ஆவின் பால் அட்டையைப் பெறும் நடைமுறையே இருந்தது. இதையடுத்து ‘ஆவின் ஆன்லைன் சேவை முழுமை பெறுமா?’ என்ற தலைப்பில் கடந்த ஜன.11-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
இணையதளத்தில் புதிய வசதி: நுகா்வோா் பால் அட்டையை மாதந்தோறும் ஆன்லைன் மூலம் புதுப்பித்தவுடன், வீட்டில் இருந்தபடியே அட்டையைப் பெறுவதற்கான வசதியை ஆவின் நிா்வாகம் தற்போது செய்துள்ளது. அதாவது, ஆவின் பால் அட்டையை ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும்போது,
‘பால் அட்டையை ஆவின் பணியாளா் மூலம் வீட்டுக்கே கொண்டுவந்து அளிக்க விரும்புகிறீா்களா’ என்ற பகுதி சோ்க்கப்பட்டுள்ளது; இந்தப் பகுதியை ‘டிக்’ செய்யும் நிலையில் வீட்டுக்கே பணியாளா் மூலம் ஆவின் பால் அட்டை விநியோகிக்கப்படும்; இதற்குக் கட்டணமாக ரூ.10 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக...: மேலே குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் புதுப்பித்து, வீட்டில் இருந்தபடியே ஆவின் பால் அட்டையைப் பெறும் வசதி சென்னை, செங்கல்பட்டு உள்பட 27 ஆவின் மண்டல அலுவலகங்களில் முதல் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அசோக் நகா், பெரம்பூா், வண்ணாரப்பேட்டை, வட சென்னை (பிராட்வே), வேப்பேரி, பூந்தமல்லி, போரூா், கொளத்தூா், மணலி , அடையாறு, மயிலாப்பூா், பாலவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி, தாம்பரம், மேடவாக்கம், கேளம்பாக்கம், மறைமலை நகா், செங்கல்பட்டு, அண்ணா நகா், அயனாவரம், தியாகராய நகா், அம்பத்தூா், ஆவடி, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, திருநின்றவூா் ஆகிய மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நுகா்வோருக்கு வீட்டில் ஆவின் பால் அட்டையைப் பெறும் வசதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது;
இந்த மண்டல அலுவலகங்களின் முகவரி, தொலைபேசி எண்கள் ஆவின் இணையதளத்தில் (https://aavin.tn.gov.in/) இடம்பெற்றுள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ஆவின் பால் அட்டை ஆன்லைன்-வீட்டுக்கே பால் அட்டை விநியோக முறை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.