கடிகாரச் சுற்றுப்படி - ஸ்வாதி கொண்டே, கேப்ரியல்லா, பார்வதி, நிமிஷிகா படங்கள் | எக்ஸ்
சிறப்புக் கட்டுரைகள்

2024 - சின்ன திரையில் கொடி கட்டிப் பறக்கும் கதாநாயகிகள்!

Year Ender 2024 - இந்த ஆண்டில் தொடங்கிய, நிறைவடைந்த சின்ன திரை தொடர்கள் குறித்து...

எஸ். மணிவண்ணன்

சின்ன திரை தொடர்கள் மீது காலங்காலமாக விமர்சனங்கள் தொடர்ந்துவந்தாலும், அதற்கான ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை. அவ்வாறு குறைந்திருந்தால், தொலைக்காட்சிகளில் தொடர்களின் எண்ணிக்கையைவிட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையே கூடியிருக்கும். இப்போது நிலைமையே வேறு.

வாரம் முழுக்க தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு, வாரத்தின் இறுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். ஆனால், இந்த ஆண்டில் ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாள்களிலும் தொடர்களே ஒளிபரப்பாகின. காரணம், தொடருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புதான்.

குடும்பத்திலுள்ள பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த தொடர்களின் காலம் மலையேறிவிட்டதாகத் தோன்றுகிறது. இப்போது இளம் தலைமுறையினரையும் கவரும் வகையிலான தொடர்கள் பல எடுக்கப்பட்டு, அவை வெற்றிகரமாகவும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இணையங்களில் சினிமா ஜோடிகளின் விடியோக்களை ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப படத்தொகுப்பு வேலைகளைச் செய்து வெளியிடுவது வாடிக்கைதான். தற்போது, அவற்றுக்கு இணையாக சின்ன திரை ஜோடிகளின் காட்சிகளும் சினிமா பாடல்களுடன் இணையத்தில் உலா வருவதே, இளம் தலைமுறையினர் அதற்கு கொடுக்கும் வரவேற்புக்கு உதாரணம்.

மக்கள் வரவேற்பால் புதிய முகங்களுடன் புதிய தொடர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வரும் தொடர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது.

இந்த 2024-ல் புதிதாக தொடங்கப்பட்ட தொடர்கள் என்னென்ன என்பதைத் திரும்பிப் பார்க்கலாம்.

லட்சுமி

நடிகை ஸ்ருதி ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் லட்சுமி. தமிழ், தெலுங்கு என கிட்டத்தட்ட 12 தொடர்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் தாலாட்டு தொடருக்கு பிறகு ஏற்பட்ட இடைவேளையை லட்சுமி தொடரில் சரி செய்துள்ளார். இதில், ஸ்ருதிக்கு ஜோடியாக நடிக்கிறார் சஞ்சீவ். இந்தத் தொடர் மார்ச் 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சாய் மருது இத்தொடரை இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

லட்சுமி தொடர்

மல்லி

நடிகை நிகிதா ராகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் விமல் வெங்கடேசன் நடிக்கிறார். மல்லி தொடருக்கு முன்பு அருந்ததி, சூரியவம்சம் ஆகிய தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நிகிதா ராஜேஷ்.  மணி பாரதியும் ஸ்டாலினும் இத்தொடரை இயக்குகின்றனர்.

ஒற்றைத் தந்தையாக 6 வயது குழந்தையை வளர்க்கும் பணக்கார தந்தைக்கும், அன்பான கிராமத்துப் பெண்ணுக்கும் இடையிலான கதையே மல்லி. ஏப்ரல் 29 முதல் (இரவு 10.30) இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மல்லி

புன்னகைப் பூவே

நடிகை சைத்ரா சக்கரி இந்தத் தொடரின் நாயகியாக நடிக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ்ச் செல்வி என்ற தொடரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் இது சைத்ராவுக்கு இரண்டாவது தொடர். சைத்ராவுக்கு ஜோடியாக ஹர்ஷ் நாக்பால் நடிக்கிறார்.

நகரத்திலுள்ள தனது பால்யகால நண்பனை மனதில் நினைத்து, அவனைத் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்ட கிராமத்துப் பெண் சந்திக்கும் சவால்களே புன்னகைப் பூவே தொடரின் கதை. ஏப்ரல் 29 முதல் (பிற்பகல் 1) இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

புன்னகைப் பூவே

அனாமிகா

இதுவொரு மொழிமாற்றத் தொடர்தான். ஹிந்தியில் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இத்தொடர், தமிழ் மொழியில் குரல் கொடுக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இத்தொடரில் முதித் நாயர் நாயகனா நடிக்கிறார். அன்னி கில், சிம்ரன் கெளர் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இது மர்மங்கள், மந்திர ஜாலங்கள் நிறைந்த காதல் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை ரவி ராஜ், ஆங்குஷ், மொஹலா என மூன்று இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் காலை 10.30க்கு ஒளிபரப்பாகிறது.

அனாமிகா

மருமகள்

ஈரமான ரோஜாவே தொடருக்குப் பிறகு நடிகை கேப்ரியல்லாவுக்கு அமைந்த மற்றொரு பெரிய வாய்ப்பு மருமகள் தொடர். ஈரமான ரோஜாவேயில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். மருமகள் தொடரில் முதன்மை நாயகியாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேப்ரியல்லாவுக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவி நடிக்கிறார். இவர், நந்தினி, அன்பே வா, கண்ணான கண்ணே உள்ளிட்ட தொடர்களில் நாயகனாக நடித்தவர். இத்தொடரை இயக்குநர் நாராயண மூர்த்தி இயக்குகிறார்.

வெவ்வேறு தன்மைகள் கொண்ட இருவர், பெற்றோர் நிர்பந்தத்தால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் சந்திக்கும் முரண்களும் சவால்களும் காதலாக மாறுகிறது. இதுவே  மருமகள் தொடரின் கதை. இத்தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மருமகள்

மணமகளே வா

இத்தொடரில் ஹரிகா சாது நாயகியாக நடிக்கிறார். ஆந்திரத்தைச் சேர்ந்த இவர், தமிழில் திருமகள் தொடரில் நடித்துள்ளார். தெலுங்கில் கல்யாணி என்ற தொடரிலும் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ் தொடரில் நடித்துவருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மணமகளே வா தொடரில் ஹரிகாவுக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவி நாயகனாக நடிக்கிறார். தற்போது ஒளிபரப்பாகிவரும் மருமகள் தொடரைத் தொடர்ந்து, நாயகனாக நடிக்கும் இரண்டாவது தொடர் இது.

மணமகளே வா தொடர் ஜூலை 15ஆம் தேதி முதல் (பிற்பகல் 12.30 மணிக்கு ) ஒளிபரப்பாகி வருகிறது.

மணமகளே வா

மூன்று முடிச்சு

ஈரமான ரோஜாவே தொடருக்குப் பிறகு ஸ்வாதி கொண்டே நடிக்கும் தொடர் மூன்று முடிச்சு. இப்பெயரில் ஏற்கெனவே ஒரு தொடர் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் அது தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஹிந்தி மொழித்தொடர்.

மூன்று முடிச்சு தொடரில் ஸ்வாதிக்கு ஜோடியாக நியாஸ் கான் நடிக்கிறார். இவர் புதுப் புது அர்த்தங்கள் தொடரில் நாயகனாக நடித்தவர்.

 ஆகஸ்ட் 19 முதல் இத்தொடர் (இரவு 8.30 மணிக்கு) ஒளிபரப்பாகி வருகிறது. நந்தன் சி.முத்தையா இத்தொடரை இயக்குகிறார்.

மூன்று முடிச்சு

புனிதா

கடைக்குட்டி சிங்கம், கண்ணான கண்ணே தொடரில் நடித்த நிமிஷிகா, புனிதா தொடரில் நாயகியாக நடிக்கிறார். கார்த்திக் வசு நாயகனாக நடிக்கிறார்.

அன்பு காட்டி ஆளாக்கிய வளர்ப்பு தாயின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண், குடும்ப சிக்கல்களுக்கு மத்தியில் மீண்டும் தனது தாயுடன் இணைய முயற்சிக்கும் கதையே புனிதா தொடர்.

அக்டோபர் 14ஆம் தேதிமுதல் சன் தொலைக்காட்சியில் (நாள்தோறும் 12 மணிக்கு) இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

புனிதா

ரஞ்சனி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஞ்சனி தொடர் மற்ற தொடர்களில் இருந்து சற்று மாறுபட்டது. காரணம் இது காதல் கதை அல்ல, ஆண் - பெண் நட்பைப் பற்றிய கதை. ஒரு பெண், நான்கு ஆண்கள் சேர்ந்த நண்பர்கள் கூட்டத்தைப் பற்றிய கதை.

இத்தொடரின் நாயகியாக ஜீவிதா நடிக்கிறார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு சின்ன திரையில் கிடைத்துள்ள வாய்ப்பு இது. இதில், அரவிந்த், அருண், கார்த்திக், பிரவீஸ் ஆகியோர் மதுமிதாவுக்கு நண்பர்களாக நடிக்கின்றனர்.

ஒரு பெண்ணுக்கு காதல் வாழ்க்கையுடனும், குடும்ப வாழ்க்கையுடனும் நட்பு இணைந்திருக்க முடியும் என்பதை வலியுறுத்தும் திரைக்கதை கொண்டது ரஞ்சனி தொடர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடர் நவம்பர் 4ஆம் தேதி முதல் (இரவு 10 மணிக்கு) ஒளிபரப்பாகி வருகிறது.

ரஞ்சனி

அன்னம்

மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்த அயலி இணைய தொடரில் நடித்த அபி நட்சத்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் அன்னம். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.

மாமன் மகனை காதலிக்கும் அத்தை மகளாக அபி நட்சத்திரா நடிக்கிறார். பெரிய குடும்பத்துக்குள் நிகழும் முரண்களும் சவால்களையும் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறும் பெண்ணின் கதையே அன்னம் தொடரின் கதை.

சன் தொலைக்காட்சியில் சுந்தரி தொடர் நிறைவடைந்ததால், அதற்கு பதிலாக டிசம்பர் 2 ஆம் தேதி முதல் (இரவு 7 மணிக்கு) அன்னம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அன்னம்

 எதிர்நீச்சல் 2

சின்ன திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் இது. நாயகியைத் தவிர மற்ற நட்சத்திரங்கள் அதே பாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகி மதுமிதாவுக்கு பதிலாக ஜனனியாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் இருந்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிபிரியா இசை ஆகியோர் 2 ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

இயக்குநர் திருச்செல்வம் இத்தொடரை இயக்குகிறார். மெட்டி ஒலி, வல்லமை தாராயோ ஆகிய வெற்றித் தொடர்களின் வரிசையில் எதிர்நீச்சலும் இடம்பிடித்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் சித்தி, சுந்தரி தொடர்களைத் தொடர்ந்து, இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருவது எதிர்நீச்சல் தொடர்தான். டிசம்பர் 23 ஆம் தேதி முதல் (இரவு 9:30 மணிக்கு) ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் 2

 ஆடுகளம்

தனுஷ் படத் தலைப்பான ஆடுகளம் என்ற தொடருக்கான முன்னோட்டக் காட்சிகள் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியானது. இதில், டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கிறார்.

இவர் ரோஜா, அன்பே வா, அபியும் நானும் உள்ளிட்ட தொடர்களில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் தொடருக்கான முன்னோட்டக் காட்சிகள் வெளியான நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2025-ல் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.

ஆடுகளம்

நிறைவடைந்த தொடர்கள்

சுந்தரி, மிஸ்டர் மனைவி, மீனா, பாரதி கண்ணம்மா 2, முத்தழகு, பூவா தலையா, மோதலும் காதலும், கிழக்கு வாசல், செல்லம்மா ஆகிய தொடர்கள் இந்த ஆண்டில் நிறைவு பெற்றன.

ஒப்பீட்டளவில் பார்த்தால் முடிந்த தொடர்களின் எண்ணிக்கையைவிட புதிதாகத் தொடங்கியுள்ள தொடர்களின் எண்ணிக்கை 2024-ல் அதிகம் என்றே கூறலாம்.

வெள்ளித்திரையில் ஓய்வுபெற்ற திரை நாயகிகள் வருகை சமீபகாலமாகக்  குறைந்திருந்தாலும், தொலைக்காட்சிகளில் நடிப்புக்காகவும் நடனத்துக்காகவும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொடர்களில் முதன்மை பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால், பல புதிய தொடர்கள் உருவாகின்றன. கால மாற்றத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்ப தொடர்கள் காட்சிப்படுத்தப்படும் விதம் மாறுபடுகிறதே தவிர, தொடர்களுக்கு மாற்று இல்லை.

வெள்ளித் திரையில் மின்னுவோரைக் கண்டு கொண்டாடுவதைப் போலவே இப்போதெல்லாம் சின்ன திரை நட்சத்திரங்களும் கொண்டாடப்படுகின்றனர். காரணம், தொடர்கள் இவர்களை மக்களின் இல்லங்களுக்குள்ளேயே கொண்டுபோய் சேர்த்துவிடுகின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT