ஹைதராபாத் நகருக்கு அருகே மெஹபூப் நகரில் நேரிட்ட ரயில் விபத்தில் 112 பேர் உயிரிழந்த நிலையில் சில மாதங்களிலேயே அரியலூர் ரயில் விபத்தும் நேரிட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மக்களவையில் அரியலூர் ரயில் விபத்து பற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அறிக்கையொன்றை அளித்தார்.
அரியலூர் விபத்து பற்றி நீதிமன்ற விசாரணை அறிவிக்கப்பட்டதுடன், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிப்பார் என்றும் மக்களவையில் சாஸ்திரி அறிவித்தார். நீதிபதிக்கு இரு வல்லுநர்கள் உதவி புரிவார்கள் என்றும் இவர்களில் ஒருவர் ரயில்வே பணியில் இல்லாத பொறியாளராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து ரயில் பாலங்களும் அருகிலுள்ள நீர்ப்பிடிப்புகளும் எந்த நிலவரத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஆய்வுவொன்றை நடத்தவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்துக்கு முன் இந்தப் பாலத்தில் தண்டவாளத்துக்குக் கீழே 9 அடிக்கு அதிகமாகத் தண்ணீர் இருந்ததில்லை. கடந்த 28 ஆண்டுகளில் இந்தப் பாலத்திற்குப் பெரிய பழுதுபார்ப்பு எதுவும் தேவைப்படவில்லை. இரவு 12 மணிக்குப் பிறகு இந்தப் பாலத்தின் வழி நான்கு ரயில்கள் சென்றிருக்கின்றன. எனவே, உடைப்பு திடீரென குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும். காலை 3.09-க்கு ஒரு ரயில் அந்தப் பாலத்தின் வழி சென்றிருக்கிறது. பாலத்தைப் பற்றி அந்த ரயிலைச் செலுத்தியவர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
பாலமும் அதன் முகப்புகளும் சரிவரப் பரிசோதிக்கப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது. இது ஒழுங்காகவே நடந்து வந்திருக்கிறது. நவம்பர் 9 ஆம் தேதியன்று உதவிப் பொறியாளர் ஒருவர் டிராலியில் சென்றிருக்கிறார். நவ. 22 ஆம் தேதி ரயில் பாதை ஆய்வாளர் சென்றிருக்கிறார். மழைக்கால ரோந்து இருந்திருக்கிறது. அன்றிரவு, தான் அந்தப் பாலத்தின் வழியாக நான்கு முறை சென்று வந்ததாகவும் காலை 4 மணிக்கு ரயில்வே கர்டர்களுக்குக் கீழே ஓர் அடி தாழ்ந்துதான் தண்ணீர் சென்றுகொண்டிருந்ததாகவும் ரோந்துக்காரர் கூறுகிறார். அதன் பிறகே வெள்ளம் திடீரென பெருகியிருப்பதாகத் தோன்றுகிறது.
தட்சிண ரயில்வேயின் வெள்ளத் தடுப்பு ஏற்பாடுகள் பற்றிப் பொது மேலாளர் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறார். செலவைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்வார். பாலங்களில் ரோந்து சுற்றுவது அதிகரிக்கப்படும். இவர்களுடைய ரிப்போர்ட்களைக் கவனமாகப் பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மழை, வெள்ள காலங்களில் ரோந்து சுற்றுவது போதுமானதாயிருக்கிறதாவென்றும் பரிசீலனை செய்யப்படும்.
காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி ஜில்லா மாஜிஸ்திரேட் (மாவட்ட ஆட்சியர்) தலைமையில் உடனடி நிவாரணத்துக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.
அரியலூர் விபத்து மிகப் பெரியது; எங்களுடைய பெரிய பொறுப்பை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். இதற்கு யார் பொறுப்பு என்பது விசாரணையில் தெரியும். விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான சிபாரிசுகளையும் அவர்கள் கூறுவார்கள். அவர்களுடைய சிபாரிசுகளை சர்க்கார் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்”
என்று ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி குறிப்பிட்டார்.
முழு விசாரணை – பிரதமர் ஜவாஹர் லால் நேரு உறுதி
இத்தகைய விபத்துகள் இனி நடைபெறாமல் செய்யும் நோக்கத்துடன் மிக விரிவான விசாரணை நடைபெறும். செலவைப் பொருட்படுத்தப் போவதில்லை என்று தொடர்ந்து பேசிய பிரதமர் ஜவாஹர் லால் நேரு குறிப்பிட்டார்.
விசாரணைக்கு வரம்பு இருக்க முடியாது. இது ஜீவாதாரமான விஷயம். மக்கள் வாழ்வைப் பற்றியது. எனவே, எல்லாருடைய மனதிலும் பீதி ஏற்பட்டுள்ளது.
இயற்கையின் லீலைகளால் விபத்துகள் நேரிடுகின்றன. பூகம்பத்தைப் பற்றி நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. சில சமயம் பெரிய வெள்ளங்கள் வந்து பிகாரிலும் வங்கத்திலும் போல ஆயிரக்கணக்கான கிராமங்களை அடித்துக்கொண்டு போகின்றன. எனினும், இவற்றுக்கு நாம் பணிந்துவிட இயலாது. அவற்றைச் சமாளிக்க முற்படுகிறோம்.
எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் விபத்து நடந்ததாகச் சொல்லலாம். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இம்மாதிரி விபத்துகள் நடந்திருப்பதைவிட பெரிய எச்சரிக்கை நமக்கு இருக்க முடியாது. ரயில் பயணத்தில் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற சாத்தியமான எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
தென் பிராந்திய ரயில்வேயில் எல்லா பாலங்களையும் ரயில் பாதைக் கரைகளையும் பாதுகாத்து ஆவன செய்ய எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். எந்தச் செலவுக்கும் பின்வாங்க மாட்டோம்” என்றார் நேருஜி.
ஆனாலும்...
[வரலாற்றின் பக்கங்களிலிருந்து... தொடரும்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.