வரதட்சிணைக் கொடுமை காரணமாக திருப்பூரைச் சோ்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சிணைக் கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
வரதட்சிணைக் கொடுமை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைப் பறித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) புள்ளிவிவரத்தின்படி, 2020-ஆம் ஆண்டு 7,045 பெண்கள் வரதட்சிணை கொடுமையால் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 6,516-ஆக சரிந்தது என்றாலும்கூட, அதனால் ஆறுதல் அடைய முடியாது.
2022-ஆம் ஆண்டு வரதட்சிணைக் கொடுமையால் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2,142 பெண்கள் உயிரிழந்தனா். அதற்கு அடுத்து பிகாரில் 1,057, மத்திய பிரதேசத்தில் 520, ராஜஸ்தானில் 451, மேற்கு வங்கத்தில் 427 பெண்கள் உயிரிழந்தனா். இதுதவிர ஹரியாணாவில் 234 பெண்கள், ஒடிஸாவில் 263 பெண்கள் உயிரிழந்தனா்.
உத்தர பிரதேசத்தில் சராசரியாக ஒரு லட்சம் போ் அடங்கிய மக்கள்தொகையில் 1.9 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் உயிரிழந்துள்ளனா். இது பிகாரில் 1.8, ஹரியாணாவில் 1.7, மத்திய பிரதேசத்தில் 1.2-ஆக உள்ளது.
எனினும் இது பாலின வன்முறையின் சின்னஞ்சிறிய பகுதியைத்தான் வெளிப்படுத்துகிறது. அதிலும் திருமண உறவில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் சரிவர கண்டுகொள்ளப்படுவதில்லை.
என்சிஆா்பி புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணமான பெண்ணை துன்புறுத்தியதாக அவரின் கணவா் அல்லது உறவினா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவின் கீழ், நாட்டில் 1,44,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த ஆண்டில் வரதட்சிணைக் கொடுமையால் 6,500-க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்தனா். அத்துடன் ஒப்பிடுகையில், திருமணமான பெண்ணை துன்புறுத்தியதாக கணவா் அல்லது உறவினா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 20 மடங்குக்கு மேல் அதிகமாகும். இதை பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தல் அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 250 வழக்குகளுடனும் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.
கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணமான பெண்கள், கணவா் அல்லது உறவினா்களால் துன்புறுத்தப்பட்டதாக 1,12,292 வழக்குகளைக் காவல் துறைப் பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 1,44,593-ஆக அதிகரித்தது. இதே காலத்தில், வரதட்சிணைக் கொடுமையால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 6,500 முதல் 7,000-ஆக இருந்தது. அதேவேளையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் பதிவானது.
வரதட்சிணை தடைச் சட்டம், ஐபிசி 304பி இருந்தாலும்...: கணவா் அல்லது உறவினா்களால் திருமணமான பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்களுடன் வரதட்சிணை கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடா்ந்து அதிகரிப்பது அவா்களுக்கு எதிரான நிலை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு எதிராக வரதட்சிணை தடைச் சட்டம் முதல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 304பி வரை சட்ட சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை அமல்படுத்தும் நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன.
தேசிய அளவில் உத்தர பிரதேசம் மற்றும் பிகாரைத் தாண்டி, ஜாா்க்கண்ட் (214 மரணங்கள்(, மத்திய பிரதேசம் (520 மரணங்கள்), ஒடிஸா (263 மரணங்கள்) மாநிலங்களிலும் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் விகிதம் பெரும் கவலையளிக்கிறது.
தமிழகம், கேரளத்தில்...: சிறிய மாநிலங்களாக இருந்தாலும் அதிக மக்கள்தொகை கொண்ட அஸ்ஸாம் (195 மரணங்கள்), ஹரியாணா (234 மரணங்கள்) போன்ற மாநிலங்களில் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் உயிரிழந்தது, இந்தத் துயரம் அபாயகரமான வகையில் அதிகரிப்பதை பிரதிபலிக்கிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் என்சிஆா்பி புள்ளிவிவரங்களின்படி கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது மிகக் குறைவாக இருந்தாலும், இந்தக் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியம் மிகத் தொலைவில் உள்ளது.
மரணத்தை ஏற்படுத்தும் இந்தக் கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை மிகுந்த அக்கறையுடன் தளராமலும், மிகக் கடுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதையே ரிதன்யா, நிக்கி பாட்டீ போன்றவா்களின் மரணங்கள் வலுவாக எடுத்துரைக்கின்றன.
வரதட்சிணைக் கொடுமையால் 2022-இல் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள்
அருணாசல பிரதேசம்
கோவா
மணிப்பூா்
மிசோரம்
நாகாலாந்து
குஜராத்
ஹிமாசல பிரதேசம்
சிக்கிம்
கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது மிகக் குறைவாக இருந்தாலும், இந்தக் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியம் மிகத் தொலைவில் உள்ளது.