கோப்புப் படம் ENS
சிறப்புக் கட்டுரைகள்

'ஜன கண மன' சந்தித்து வரும் சவால்கள்!

இந்தியாவின் தேசிய கீதம் சந்தித்து வரும் சவால்கள் பற்றி...

இராஜ முத்திருளாண்டி

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ பாடல் முதன்முதலாக, இன்றைக்கு 114 ஆண்டுகளுக்கு முன் - 27 டிசம்பர், 1911 இல் - கொல்கத்தாவில் நடைபெற்ற 26-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

பரந்த வெளியுலகில் இப்பாடல் ஒலிக்கத் தொடங்கியது முதலே, இப்பாடலுக்கான சவால்களும் உடன்பிறந்தன எனலாம். அவற்றில் முதலாவதாக - ‘காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைபோல ஒரு நிகழ்வும் இணைந்து கொண்டது. 'ஜன கண மன' முதன்முதலாகப் பொதுவெளியில் பாடப்பட்ட அதே காலத்தில் (அதே தேதியில் அல்ல) இங்கிலாந்தின் மன்னர் - இந்தியாவுக்கும் அப்போது அரசர் - ஐந்தாம் ஜார்ஜ், தில்லிக்கு வருகை தந்தார். உடனே இப்பாடல், ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகையை வாழ்த்துவதற்காகப் பாடப்பட்டது என்று அடிப்படையிலேயே தவறாகப் புரிந்துகொண்டு ஒரு குழு கிளம்பி, சர்ச்சை பூதங்களைத் தட்டி எழுப்பத் தொடங்கியது. 

உண்மையில், இந்தப் பாடல் குறித்த ஆரம்ப குற்றச்சாட்டு (மன்னர் ஜார்ஜ் வருகையுடன் தொடர்புபடுத்தியது) அக்காலத்து பிரிட்டிஷ் சார்பு பத்திரிகைகள் அளித்த பொய் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய வருகையின்போது (1911) வங்காளப் பிரிவினையை ரத்து செய்வதாக ஐந்தாம் ஜார்ஜ் அறிவித்ததை அப்பத்திரிகைகள் பெரிதுபடுத்திக் காட்ட விரும்பின. வங்காள மக்கள், மன்னரைப் புகழ்ந்து நிற்பதாகச் சித்திரம் வரைந்தன. ஐந்தாம் ஜார்ஜுக்காக ராம்புஜ் சவுத்ரி என்பவர் இயற்றிய இந்தி பாடல் ஒன்றை மறந்து / மறைத்து, எதற்காகவோ தாகூர் பெயர் ஐந்தாம் ஜார்ஜுக்கான பாடலுடன் இணைத்துப் பரப்பப்பட்டது.

நோபல் பரிசு (1913) பெற்ற கவிஞர் தாகூர் ஒரு தேசப்பற்றாளர்; ஓர் இலக்கியவாதியாக, நாட்டில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஆங்கில அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தை உதறியவர். மேலும்,பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரே இப்பாடல் ஜார்ஜ் மன்னர் வரவேற்புக்காக எழுதப்பட்டது அல்ல என்று மிக வெளிப்படையாகப் பல சந்தர்ப்பங்களில் விளக்கிச் சொன்ன பிறகும், ஒருதலையாக, ஆதாரமின்றி எழுப்பப்பட்ட இதைப் பற்றிய சர்ச்சை தற்போது வரை அடங்கி மறைவதாகவே இல்லை.  

தாகூர் முதன்முதலாக 'ஜன கண மன' பாடலைப் பாடிய 1911 காங்கிரஸ் அமர்வு முடிந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையின் மூலம் தாகூரின் சாந்திநிகேதனை "அரசாங்க அதிகாரிகளின் கல்விக்கு முற்றிலும் பொருத்தமற்ற இடம்" என்று அறிவித்தது. மேலும், தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்பும் அதிகாரிகளுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது. உண்மையில், தாகூர் பாடல், ஜார்ஜ் மன்னரைப் புகழ்ந்து பாடிய வரவேற்புப் பாடலாக இருந்திருந்தால் இப்படியா பரிசு கிடைத்திருக்கும்?

ஆரம்பம் முதலே ஜன கண மன மீது எழுந்துவரும் இந்துத்துவ குற்றச்சாட்டுகள் எதுவும் புதிதானதல்ல. தற்போது அவை புதிய தீவிரத்துடன் புழக்கத்தில் வரத் தொடங்கியுள்ளன. ‘வந்தே மாதரம்’ குறித்த அண்மைக் கரிசனங்களும் அதீத ஆர்வங்களும் அப்பாடல் தொடர்பாகப் பொது உரையாடல் களத்தில் வலிந்து புகுத்தப்பட்டுவரும் முனைப்புகளும் இவ்வகையில் இணைபவையே. இச்சூழல்மாசு தில்லியிலிருந்து பரவிக் கொண்டிருக்கும் காலத்தில், இந்தியாவின் தேசிய கீதம் எவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்டது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

கவிஞர் தாகூர் இறப்பதற்கு சற்று முன்பு 1941 ஆம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பதிலளித்தவர்கள் ஜன கண மன வலுவான "தேசிய குணாதிசயங்களை"க் கொண்டிருப்பதாக வாக்களித்தனர். வந்தே மாதரம் மற்றும் இக்பாலின் ‘சாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய பாடல்களுக்கு உயர்வானதாக ஜன கண மன நாட்டிற்கான கீதமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.  வேறு சில அளவுகோல்களில் வந்தே மாதரம் உயர்ந்ததாகக் உணரப்பட்டாலும் இப்பாடல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து - முஸ்லிம் உறவும் ஒற்றுமையும் குலைந்துவிடுமோ என்ற கவலையை உருவாக்கியது உண்மை. இதற்கிடையில் நேதாஜி போஸின் இந்திய தேசிய ராணுவம் ஜெர்மனியில் இருந்து 1942-இல் ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்து வானொலியில் ஒலிபரப்பியது. இது இந்தியாவில் ஜன கண மன பாடலுக்கான செல்வாக்கையும், ஒருமித்த மக்கள் கருத்தேற்பையும் விரிவாக்கியது. 

இந்நிகழ்வுகளால் ஜன கண மன பாடலின் ஆரம்ப காலத்தில் (1911 முதல்) பிரிட்டிஷ் சார்பு பத்திரிகைகள் வீசிய அழுக்குகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாகவே நாம் கருதலாம். ஆனாலும், 1950இல் ஜன கண மன தேசிய கீதமாகவும் (National Anthem) வந்தே மாதரம் தேசியப் பாடலாகவும் (National Song) அங்கீகரிக்கப்பட்டு அறிவிப்பான பின்னரும் தேசிய கீதத்திற்கு அவ்வப்போது உள்நாட்டு அரசியல் சவால்களும் நீதிமன்ற வழக்குகளும் காளான்களாக முளைத்துக் கொண்டே வந்துள்ளன. 

கவிஞர் தாகூர் ஜன கண மன பாடல் எழுதியது 1911-இல்; அவர் மறைந்தது 1941-இல். தேசிய கீதமாக ஜன கண மன பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது 1950-இல், தாகூர் மறைந்து 9 ஆண்டுகள் கழித்து. 

இந்திய அரசமைப்புச் சபையின் நிறைவுக் கூட்டத்தில் 24 ஜனவரி 1950 இல் - 

"நமது விவாதத்திற்கு ஒரு விஷயம் நிலுவையில் உள்ளது, அது தேசிய கீதம் பற்றிய கேள்வியாகும். ஒரு சமயத்தில் இந்த விஷயத்தைச் சபையின் முன் கொண்டு வரலாம் என்றும், தீர்மானம் மூலம் சபையால் முடிவு எடுக்கப்படும் என்றும் கருதப்பட்டது. ஆனால், ஒரு தீர்மானத்தின் மூலம் முறையான முடிவை எடுப்பதற்குப் பதிலாக, தேசிய கீதம் சம்பந்தமாக நான் ஓர் அறிக்கையை வெளியிடுவது நல்லது என்று கருதப்படுகிறது. அதன்படி நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

ஜன கண மன என்று அழைக்கப்படும் சொற்கள் மற்றும் இசை ஆகியவற்றைக் கொண்ட இசையமைப்பு இந்தியாவின் தேசிய கீதமாகும். சந்தர்ப்பம் ஏற்படும்போது அரசாங்கம் அங்கீகரிக்கும் சொற்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது; இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்காற்றிய வந்தே மாதரம் பாடல், ஜன கண மன பாடலுக்குச் சமமாக கௌரவிக்கப்படும். இது உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன்." 

என அவைத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜன கண மன தேசிய கீதமாகும் என்று, அறிவிப்புச் செய்தார். [ஆதாரம்: அரசமைப்புச் சட்டமன்ற விவாதங்கள், XII. (ஜனவரி 24, 1950)].

இந்த அறிவிற்குப் பின், அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவராகக் கையெழுத்திட்ட பிறகு, உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் கூடியிருந்த உறுப்பினர்கள் கூட்டாக 'ஜன கண மன' பாடலைப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குடியரசுத்தலைவர் தனது சம்மதத்தை தெரிவித்தார். அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் உள்பட, 'ஜன கண மன' பாடலை கோரஸில் பாடினர், அரசியலமைப்புச் சபையின் பதினைந்து பெண் உறுப்பினர்களில் ஒருவரான பூர்ணிமா பானர்ஜி தலைமையில் தேசிய கீதம் பாடுவது நடைபெற்றது. இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடலின் முறையான அறிமுகம் இது என்று கூறலாம்.

தாகூர் நூற்றாண்டு(1961) மலரில் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தும் தனது முன்னுரையில் ஜவாஹர்லால் நேரு உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கும் செய்தி ஒன்றும் நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள உரியது.

‘’கடைசியாக நான் அவரைச் சந்தித்தபோது, புதிய இந்தியாவுக்கான தேசிய கீதத்தை இயற்றித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டேன். அவர் ஓரளவே சம்மதித்தார். அந்த நேரத்தில் நமது தேசிய கீதமாகத் தற்போதுள்ள 'ஜன-கண-மன' என் மனதில் இல்லை. இந்தச் சந்திப்பையடுத்து சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். சுதந்திரம் அடைந்த பிறகு, 'ஜன கண மன' நமது தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நம் மக்கள் அனைவருக்கும் இது தொடர்ந்து ரவீந்திரநாத் தாகூரை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.’’ என்று எழுதியுள்ளார்.

நேருவோ அல்லது தாகூரோ ஜன கண மனவை தேசிய கீதமாக முன்கூட்டியே நினைத்ததில்லை என்பதை ருத்ராங்ஷு முகர்ஜி தனது நூலில் ('இந்தியாவின் பாடல்: தேசிய கீதத்தின் ஆய்வு' அலெஃப். பக்கங்கள் 96.) ஆணித்தரமாக நிறுவியுள்ளார். 

மேற்கண்ட இரு செய்திகளும், தற்போதெல்லாம் நாட்டில் 2014-க்கு முன்நடந்த நிகழ்வுகள் எதற்கெடுத்தாலும் நேருவின்மீது பழிஏற்றுவதையே வாடிக்கையாக்கி வருபவர்கள், ‘நேரு வந்தே மாதரத்தைப் புறக்கணித்து, ‘ஜன கணமன’வைத் தேசிய கீதமாக்க முன்பே தீர்மானித்து வைத்திருந்தார்’ என்று அபத்தமாகக் கூறிவரும் குற்றச்சாட்டு  இற்று வீழ உதவும் எடுத்துக்காட்டுகளாகும்.

ஜன கண மன தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள இக்காலம் வரை அக்கீதத்திற்குச் சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சில குறிப்பிட உரியவற்றைக் நாம் கண்டறிந்திருப்பது அவசியம். 

தேசிய கீதத்தில் இருந்து "சிந்து" என்ற வார்த்தையை நீக்க சஞ்சீவ் பட்னாகர் என்பவர் தாக்கல் செய்த மனு முதலில் நிராகரிக்கப்பட்டது. அம்மனுவை மீண்டும் மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2005-இல் தள்ளுபடி செய்தது. 

தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோட்டி, நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'தேசிய கீதம் ஓர் 'அழியாத கிளாசிக்' என்றும், அக்கீதத்தில் இருந்து எந்த வார்த்தையும் - ‘சிந்து’ உள்பட- நீக்கப்பட்டால் தேசிய கீதமே சிதைக்கப்பட்டதாகி விடும்’ எனக் கூறியது. நீதிபதி லஹோட்டி அமர்வு சார்பில் எழுதிய தீர்ப்பில், ‘’தேசிய கீதம் என்பது நாட்டின் நெறிமுறைகளின் பிரதிநிதித்துவம். எந்தவொரு கிளாசிக்கும் (classic), ஒருமுறை உருவாக்கப்பட்டவுடன், அழியாததாகவும் பிரிக்க முடியாததாகவும் மாறும். அதை உருவாக்கியவர்கூட அதில் மாற்றங்களைச் செய்வது விரும்பப்படாததாகவே கருதப்படும். கவிதையில் ஏதேனும் சேதம் செய்வது மாபெரும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அவமதிக்கும் செயல்’’ என்று அறிவித்தார். 

உச்ச நீதிமன்றத்தின் மே 13 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் மறுத்து, மறுஆய்வு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பட்னாகர் தாக்கல் செய்த பொது நல வழக்கை "விளம்பர நல வழக்கு" என்று கூறிய அமர்வு, "நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்ததற்காக" அவருக்கு ரூ. 10,000/- அபராதமும் விதித்தது. 

மேற்சொன்ன வழக்குபோலவே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மலுஷ்தே தாக்கல் செய்த பொதுநல மனுவில் “1911 ஆம் ஆண்டில் கீதம் இயற்றப்பட்டபோது, 'சிந்து' இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது சிந்து நமது நாட்டின் பகுதியல்ல. எனவே, 'சிந்த்' என்ற பகுதியைக் குறிக்கும் வார்த்தைக்குப் பதிலாக 'சிந்து' என்ற நதியைக் குறிக்குமாறு மாற்றலாம் என்பது அவர் வாதம். மேலும், 'சிந்து' என்ற வார்த்தையை நீக்கி, அதற்கு பதிலாக 'காஷ்மீர்' என்று மாற்றக் கோரியும் அம்மனு வேண்டுதல் வைத்திருந்தது.

இம்மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தேசிய கீதத்தில் 'சிந்து' மற்றும் 'சிந்த்' என்று எவ்வாறு பயன்படுத்தினாலும் அது சரியானதே. "இரண்டு வார்த்தைகளும் சிந்து நதி அல்லது சிந்தி சமூகத்தைக் குறிக்கின்றன’ என்று கூறியது. மேலும், தேசிய கீதம் ஒரு நாட்டின் நிலப்பரப்பைப் பொதுவாக வரையறுக்கிறதேயன்றி, அது எழுதப்பட்ட நேரத்தில் இந்தியாவின் பகுதியாக இருந்த மாநிலங்கள் அல்லது பிராந்திய பகுதிகளைப் பட்டியலிடவில்லை என்றும் வலியுறுத்தியது. கூடுதலாக, 2005 மே மாதம் உச்ச நீதிமன்றம் பட்னாகர் வழக்கில் அளித்த தீர்ப்பையும் தனது பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு  குறிப்பிட்டது. 

1953 நவம்பரில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படியே தேசிய கீதம் நாடெங்கும் பாடப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது, அதில் 'சிந்து' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. "1951 நவம்பரில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட 'எங்கள் தேசிய பாடல்' என்ற கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கீதத்திலும் 'சிந்து' என்ற வார்த்தையே குறிப்பிடப்பட்டுள்ளது" என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டது.

தேசிய கீதத்தில் இருந்து "சிந்து" என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை அந்நீதிமன்ற தலைமை நீதிபதி மோஹித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் டால்வி ஆகியோர் தள்ளுபடி செய்தனர். 

அடுத்து, மீண்டும் மகாராஷ்டிரத்தில் மற்றொரு வழக்கு. இம்முறை மாநிலப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தேசிய கீதம் தவறாக - ‘சிந்த்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘சிந்து’ என்ற வார்த்தை - அச்சாகியுள்ளது; ஆகவே, அப்புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றொரு பொது நல வழக்கு 2014 இல் தக்ஷதா ஷேட் என்பவரால். அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் மொஹ்தா மற்றும் என்.எம். ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கலானது. 

எந்த வார்த்தை சரியானது; எது பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் மத்திய அரசை கேட்டு 2015 ஜனவரியில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. 

தொடர்ந்து, 2017-இல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற தில்லி ஆளுங்கட்சி வழக்குரைஞர் தேசிய கீதத்திற்குத் தரப்படும் முழுமரியாதையும், தேசிய கீதத்திற்கு அவமதிப்பு செய்தால் வழங்கப்படும் தண்டனையையும் தேசியப் பாடல் விசயத்திலும் அமல்படுத்த வேண்டும் என்றொரு வழக்குத் தொடர்ந்தார். 

அவரது மனுவில், இவ்விஷயம் தொடர்பான இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51 ஏ.  'தேசிய பாடல்' என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை. ஆகவே உரிய திருத்தம் மூலம் இரு பாடல்களுக்கும் சம மரியாதை, அவமதிப்பு செய்தால் சமதண்டனை என்பது அ.ச. பிரிவில் தெளிவாக்கப்படவேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் [(2018) 2 SCC 574]

மத்திய அரசு, 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒரே அளவில்தான் உள்ளன என்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இரண்டிற்கும் சமமான மரியாதை காட்ட வேண்டும் என்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த விஷயம் 2016 ஆம் ஆண்டின் 855 ஆம் இலக்க ரிட் மனு (சிவில்) உடன் இணைக்கப்படட்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். 

இவ்வாறு தொடர்ச்சியாக ஏதாவது காரணங்களை முன்நிறுத்தி தேசிய கீதத்திற்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் சவால்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் நிலையிலும் சவால்கள் எழுப்புவது குறைந்தபாடில்லை. குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண் சிங், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ள தேசிய கீதத்தை வெளிப்படையாக அவமதிக்கும் வகையில், அப்பாடல், ‘ஜார்ஜ் மன்னருக்கான வரவேற்புப் பாடல்’ என்ற பழைய கதையை அரசு நிகழ்ச்சியிலேயே அறிவித்தார். இதுபோன்ற கருத்துகளை தற்போதைய ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதும் கண்கூடு.   

தேசிய கீதமாகவுள்ள 'ஜன கண மன' இந்தியா மற்றும் அதன் மக்களின் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. ஆனால், இந்தப் பாடல் தேசிய கீதமாக்கப்பட்டபோது, ஒரே நாடு என்ற ஒற்றுமை  குலைந்து, பிரிவினையுடன் வந்த சுதந்திரத்தையே பெற்றோம். ‘சிந்து’வை பாரதத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடும் ஜன கண மன தேசிய கீதமாக மாறும்போது, ​​சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை என்பதும் வருத்தம்தான். 

அதேசமயத்தில், தற்போது போட்டியாளராக ஒருதரப்பினரால் தூக்கி உயர்த்தப்படும் " வந்தே மாதரம்" முழு இந்தியாவைவிட, வங்காளத்தை மட்டுமே முதன்மைப்படுத்திய பாடலாகும். அப்பாடல் ஆங்கிலேய ஆட்சியில் குடிமைப் பணியாற்றிக் கொண்டிருந்த, அந்த அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைக் கௌரவமெனக் கருதி வாழ்நாளெல்லாம் ஏற்று வைத்துக்கொண்டிருந்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின்  உணர்வுகளில் விளைந்ததாகும். வங்காளப் பிரிவினையின்போது, அதனைத் தொடர்ந்து நாட்டின் விடுதலைப் போராட்ட காலங்களில் ‘வந்தே மாதரம்’ என்ற சொற்கள் போராட்ட முழக்கச் சொற்களாயின என்பது உண்மைதான். ஆனால் முழுப் பாடலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடன்பாடானதாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதும் மறுக்க இயலாத வரலாற்று உண்மையே. 

1911 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட ஒரு பாடலில் இருந்து, சுதந்திர இந்தியாவின் நள்ளிரவு அமர்வில் பாடப்பட்டு அதற்கு முன்னரே ஐ.நா.வில் இசைக்கப்படும் வரை ஜன கண மன கண்ட அதன் படிப்படியான உயர்வுகள், அப்பாடல் பலதரப்பிலும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. 1950 ஜனவரி 24இல் தேசிய கீதம் முறையாக அறிவிக்கப்பட்டபோது, ​​அது ஏற்கெனவே நாட்டின் தேசிய உணர்வில் பதிந்துவிட்டது. இன்று, ஜன கண மன ஒரு கவிதையாக, பாடலாக, இசைப் படைப்பாக மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயக லட்சியங்கள், அதன் அரசியலமைப்பின் ஒன்றிணைக்கும் சக்தியின் தொடர்ச்சியான நினைவூட்டலாக எழுந்து நிற்கிறது. 

ஆங்கில அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தை உதறியெறிந்த தாகூர் இயற்றிய இந்தியாவின் தேசிய கீதம் (ஜன கண மன) ஓர் ஒப்பற்ற தேசப்பற்றுள்ள கவிஞரால் உணரப்பட்ட இந்தியா குறித்த ஒரு பார்வையை, உள்ளார்ந்த பெருமிதத்தை நமக்கு வழங்கி உணர்வில் பரப்புவதாக உள்ளது என்பதை ஒவ்வொரு முறையும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒவ்வொருவரும் உணர்கிறோம்; நிறைகிறோம். 

வரலாறு அறியாப் பாங்கில், வரலாற்றுக் கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் போக்குகளின் வெளிப்பாடாக மக்கள் உணர்வுகளில் நிறைந்துள்ள தேசிய கீதத்திற்கான சவால்கள், ஊறுசெய்யும் முயற்சிகள் தொடரக் கூடாதென உளமார விழைகிறோம். 

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

The challenges faced by India national anthem Jana Gana Mana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 13

எப்போதுமே விஜய்யின் ரசிகைதான்..! மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள்! - கோபமடைந்த மெஹபூபா முஃப்தி

துரந்தர் வில்லன் அக்‌ஷய் மீது த்ரிஷ்யம் தயாரிப்பாளர் வழக்கு!

2025 அறிமுகம்: எஸ்ஐஆர் புதிய நடைமுறையா? சாதகமா, பாதகமா?

SCROLL FOR NEXT