“தெலங்கானாவிலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பிகார் மக்களை வசைபாடி வருகிறார்கள். அதுபோலவே, தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர். இந்த தேர்தலில், இவர்கள் அனைவரையும் நீங்கள் ஒதுக்கிவைத்துவிடுங்கள். தங்கள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பிகார் மக்களைத் துன்புறுத்தும் இந்த தலைவர்களைத்தான், இங்கு வந்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் அழைக்கிறது.”
_ பிகாரில் சாப்ரா என்ற இடத்தில் அக். 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசிய வரிகள்தான் இவை. பிரதமரின் பேச்சு பெரும் சர்ச்சையாகி விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரங்களில் அரசியல்ரீதியாக அல்லாமல் தமிழர்களும் தமிழ்நாடும் இலக்காகக் கொள்ளப்படுவது இதுவொன்றும் முதன்முறை அல்ல.
ஒடிசாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வராக இருந்த பிஜு பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராக, அணுக்கத் தொண்டராக இருந்த ஐஏஎஸ் அலுவலரான தமிழர் வி.கே. பாண்டியனை இலக்காக வைத்து, தமிழர் – தமிழ்நாடு விரோத பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. ஒடிசாவை எங்கிருந்தோ வந்த தமிழர் ஆள்வதா? என்பதில் தொடங்கி, புரி ஜகந்நாதர் கோவிலின் கருவூலச் சாவிகள் தமிழ்நாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டு விட்டன என்பது வரையிலும். இந்த விஷயத்தை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி அனைத்து நிலையிலும் பேசினர். தேர்தலில் பிஜு பட்நாயக் தோற்றார். பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது!
இப்போது பிகாரிலும் வி.கே. பாண்டியன் போன்ற எந்தவித குறிப்பிட்ட இலக்குகள் இல்லாவிட்டாலும் காங்கிரஸை, ஒடிசாவில் பெற்ற வெற்றியை மனதில்கொண்டோ என்னவோ திடீரென, எதிர்க்கட்சிக் கூட்டணியை விமர்சிப்பதாக – தமிழ்நாட்டில் பிகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவினர் எனக் குறிப்பிட்டாலும் வெகுமக்களின் மனதில், இது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான கருத்தாகவே பதியும்; அல்லது உருவாக்கும் என்பது பிரதமருக்கோ, கூட்டணியினருக்கோ தெரியாமலா இருக்கும்? என்னதான் வெறும் தேர்தல் பிரசாரம் என்றாலும், சொல்வது பிரதமர் என்பதால், தொலைநோக்கில் தேவையில்லாமல் இரு மாநில மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு பரவுவதற்கான ஆபத்தே அதிகம்.
இதுவரையிலும் தமிழ்நாட்டில் பிகாரிகளோ அல்லது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ துன்புறுத்தப்பட்டதாக, தாக்கப்பட்டதாக எந்தவொரு சம்பவமும் நடந்ததில்லை. ஒருவேளை நடந்திருந்தால், பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது பிகார் முதல்வர் நிதீஷ் குமாரோ எதிர்வினையாற்றியிருக்க முடியுமே, தவிர ஆற்றியிருக்கவும் வேண்டுமே (ஏற்கெனவே, வட மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக யூடியூப்வழி வதந்தியைப் பரப்பிய மணீஷ் காஷ்யப் என்ற ஒருவர் தமிழக காவல்துறையினரால் கைதும் செய்யப்பட்டார்).
பிரதமரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பிகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடனே, “தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் பிகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை திமுகவினர் அவமதிப்பதையும் வன்மத்துடன் தகாத வார்த்தைகளால் அவதூறு பரப்புவதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். உண்மை வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆத்திரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா பேசுவதாக சரடு விடுகிறார். திமுகவைப் பார்த்து பா.ஜ.க. கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக ஆகும்?” என்று குறிப்பிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான எல். முருகன்.
ஸ்டார்ட்ஸ். இனி தொடர்ந்து இந்த விஷயத்திலும் பட்டிமன்றம் போல விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அரசியல் கட்சியின் தலைவராகத் தேர்தல் பிரசாரத்தில் என்ன வேண்டுமானாலும் பேச முடியும்; அவரே ஒரு பிரதமராகவும் இருக்கும்போதுதான் கூடுதலான கவலையை ஏற்படுத்துவதாகத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
உள்ளபடியே, பிகாரில் 1990 மார்ச் மாதத்துடன், ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னரே காங்கிரஸ் ஆட்சி முடிந்துவிட்டது. லாலு பிரசாத் யாதவ் – ராப்ரி தேவி ஆட்சிகள் 2005 மார்ச்சில் முடிந்துவிட்டன. கடந்த 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது பாரதிய ஜனதாவுடன் இணைந்து போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமாரின் ஆட்சிதான். இந்த 20 ஆண்டுகளிலும் 12 ஆண்டுகளாக மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆக, இவ்விரு கட்சிகளுமாக இணைந்து பிகாரின் முன்னேற்றத்துக்காக என்னென்ன செய்துகொண்டிருக்கின்றன? செய்துகொண்டிருந்தால் இனனமும் ஏன் பிகார் வழி செல்லும் ரயில்களில் மக்கள் வெளியேறி வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்? ஒரு நாள் அதிகாலையில் தொடங்கி சில மணி நேரங்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தாலே எத்தனை ஆயிரம் பேர் வந்து இறங்குகிறார்கள் என்பது தெரியும்.
‘பிகாரிலோ, வட மாநிலங்களிலோ பிழைக்க முடியவில்லை, குறைந்தபட்ச கூலி என்பது பற்றியெல்லாம் கேள்விப்பட்டதுகூட இல்லை’ என்ற நிலையில்தான் மக்கள் வெளியேறி அடைக்கலம் தேடுகிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்கிறார்கள். உள்ளூரில் உள்ளவர்களுடன் ஒப்பிட குறைந்த கூலியே என்றாலும் தங்கள் சொந்த மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நிறைவாகவே இருக்கிறார்கள். இதை யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்தறிய முடியும்.
பிகார் மக்களின் குழந்தைகள் தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேர்ந்து கற்று சிறப்பிடங்கள் பெறக் கூடிய அளவுக்குத் தேர்ந்திருக்கிறார்கள். இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையும் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது.
இப்படி வெளியேறிய வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் திருவிழாவுக்கும் தேர்தலுக்கும்தான் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவார்கள். இதே பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இந்தத் தேர்தலுக்கு முன் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் வாக்குரிமை நீக்கப்பட்டு விட்டிருக்கிறது; வாக்குரிமையை இழந்துவிட்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வாறு பிழைப்புத் தேடி வெளி மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்திருப்பவர்கள்தான். ஒருபுறம் என்னென்னவோ காரணங்களைச் சொல்லி இவர்களின் வாக்குரிமையைத் தேர்தல் ஆணையம் பறித்துவிட, இன்னொருபுறம் இதே மக்கள்தான் தாக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறி உள்ளூரிலிருக்கும் மக்களிடம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகிற கூட்டணிக் கட்சியினரே பிரசாரம் செய்வதென்றால்...
காஷ்மீரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்வதும் பாகிஸ்தானில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று இந்தியா சொல்வதும் இயல்பு; இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல்.
ஆனால், தேர்தலுக்காகவும் வாக்குகளுக்காகவும் ஒரே நாட்டுக்குள் இரு மாநில மக்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கக் கூடிய வகையில் இவ்வாறு பேசுவதால், ஒருவேளை உடனடிப் பலனாகத் தேர்தலில் வாக்குகளும் வெற்றியும் கிடைத்தாலும், தொலைநோக்கில் உறுதியாக நல்ல விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
ஒருகாலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியானது மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தபோது, தமிழர்கள் வசிக்கும் சில பகுதிகள் கேரளத்துடனும் ஆந்திரத்துடனும் இணைய, போராடிய மக்களிடம், ‘எங்கிருந்தால் என்ன, எல்லாமும் இந்தியாவில்தானே இருக்கிறது’ என்று சமாதானம் கூறிய தலைவர்கள் இருந்த மாநிலம் தமிழ்நாடு.
நாட்டின் மிக அதிகளவிலான மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் பிகார் (முதலிடம் உத்தரப் பிரதேசம்). தற்போதைய உத்தேச மதிப்பீட்டின்படி பிகார் மாநில மக்கள்தொகை 13.04 கோடி; உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 11-வது நாடான மெக்சிகோவுக்கு இணையானது. ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 9.24 சதவிகிதம்.
14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே 7.06 லட்சம் தொழிலாளர்கள் பிகாரிலிருந்து வெளியேறி வெளி மாநிலங்களில் வசித்து வந்தனர். கழிந்த 14 ஆண்டுகளில் மக்கள் வேலைதேடிப் புலம்பெயர்ந்த வேகத்தைக் கணக்கில்கொண்டால் இன்றைக்கு பிகாரிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை எத்தனையோ மடங்கு அதிகரித்துதானிருக்கும். தமிழ்நாட்டிலேயே 14 ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்த வட மாநிலத்தவர் எவ்வளவு பேர்? இப்போது எவ்வளவு பேர்?
நீதி ஆயோக் அறிக்கையின், 2023 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை மதிப்பீட்டின்படி இந்த மாநிலத்தின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் – சுமார் 88 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில்தான் வாழ்கின்றனர்.
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் – 49.6 சதவிகிதம், பாதிக்குப் பாதி! – வேளாண்மை, மீன்பிடி, காட்டு வேலைகளைத்தான் செய்கின்றனர். சேவைத் துறையில் 26 சதவிகிதம், கட்டுமானத் துறையில் 18.4 சதவிகிதம், உற்பத்தித் துறையில் இருக்கும் தொழிலாளர்கள் – கேட்டால் அசந்து போவீர்கள் – வெறும் 5.7 சதவிகிதம்தான்!
பிகார் மக்களின் கல்வியறிவு – 61.8 சதவிகிதம் (தேசிய சராசரி – 73 சதவிகிதம்). பள்ளிப் படிப்பைப் பாதியில் விடுவோர் அதிகம் - 39.7 சதவிகிதம், தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு – பத்தாம் வகுப்பில் 55.4%, பிளஸ் 2-வில் 67.2%!
2020-ல் இந்திய மக்கள்தொகை அறிவியல்கள் நிறுவனம் (Indian Institute of Population sciences) எடுத்த ஆய்வின்படி, பிகாரில் பாதிக்கும் அதிகமான வீடுகளில் மக்கள் புலம் பெயர்ந்து, பிழைப்புக்காக வெளி மாநிலங்களுக்கோ, அல்லது வெளி நாடுகளுக்கோ சென்றிருக்கின்றனர்.
“பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிகாரில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். கட்டுப்படியாகாத விவசாயம். மிக மோசமான வாழ்க்கை நிலைமை, கிராமப்புறங்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் ஓரளவுக்கு உதவியிருக்கிறது. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக புலம் பெயர்தல் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது” என்கிறார் பிகாரின் புலம்பெயர் முறைமை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ரீனா சிங் என்ற ஆய்வாளர்.
மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை. தேவையான பள்ளிகள் இல்லை. இருக்கும் பள்ளிகளிலும் மின்சாரம் இல்லை, கணினி இல்லை. இப்படி எத்தனையோ பிரச்சினைகள்.
பிறந்த ஊர்களில், வாழ்ந்த ஊர்களில், சொந்த ஊர்களில் பிழைக்க முடியாமல் பிகார் மக்கள் ஊர் ஊராகச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதற்காகத் துக்கப்பட வேண்டிய தலைவர்கள், பிகாரிகள் துன்புறுத்தப்படுவதாகப் பேசுவதைவிடவும், முதல்வராக இருக்கும் கடந்த 20 ஆண்டுகளில் நிதீஷ் குமாரும் கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் செய்யாத எவற்றையெல்லாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிகாருக்காகச் செய்வார்கள் என்பது பற்றி நிறைய பேசலாம்.
பிகாரில் தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு பேசிய பின், தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, யாரைப் பற்றி என்னவென்று சொல்ல முடியும்? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பேச முடியுமா? இயலுமா? அதுவும் நாட்டின் மிக உயர்ந்ததான பிரதமர் பதவியில் இருக்கும்போது?
பிகாரிலிருந்து 74.5 லட்சம் பேர், கிட்டத்தட்ட ஒரு கோடிக்குப் பக்கம், புலம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் வசித்து / பிழைத்துக் கொண்டிருப்பதாக அண்மைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் இவர்களில் பிரதமர் குறிப்பிட்ட தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானாவில் வசிப்பவர்கள் குறைவே. அதிகளவாக, ஜார்க்கண்ட் (17.5%), மேற்கு வங்கம் (14.5%), தில்லி (14.5%), உத்தரப் பிரதேசம் (14.1%), மகாராஷ்டிரம் (7.5%), பஞ்சாப் (4.5%), ஹரியாணா (5%), குஜராத் (5%), பஞ்சாப் (4.2%) புலம்பெயர்ந்து ஏதோ இயன்றவரை நிம்மதியாகத்தான் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உள்ளபடியே, நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகளான பிறகும், இவ்வளவு மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிகார் மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று - நம்முடைய தலைவர்கள் (யாராக இருந்தாலும், எந்தக் கூட்டணியாக இருந்தாலும்) மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் - நினைத்தால் ஒன்றிருக்கிறது – இவர்களை எல்லாம் எப்படியாவது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ வையுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.