- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்குரைஞர்
கடந்த 2023-இல் அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய், இப்போதுதான் களத்துக்கு வருகிறாா். இரு மாநாடுகள் நடத்திவிட்டாா். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளாா். அவருக்கு வாழ்த்துகள்.
தவெக தலைமையில் கூட்டணி, எங்களது அணியில் சேரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு என்றெல்லாம் விஜய் அறிவித்திருக்கிறாா். ஆனால், என்னுடைய அரசியல் அனுபவங்கள், அனுமானங்கள் வழியாகப் பாா்க்கும்போது விஜய் வலுவான கூட்டணி அமைத்தால்தான் வெற்றி சாத்தியமாகும்.
எம்ஜிஆா்-கருணாநிதி இடையே மனஸ்தாபம் ஏற்படவே, எம்ஜிஆா் திமுகவிலிருந்து வெளியேறினாா். அப்போது தமிழகம் வந்திருந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைச் சந்திக்க எம்ஜிஆா் மதுரை சென்றாா். எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து முதல் நாள் இரவு புறப்பட்ட ரயில், மறுநாள் காலை செல்ல வேண்டிய நிலையில், இரவு 8 மணிக்குத்தான் மதுரை சென்றடைய முடிந்தது. ஏறத்தாழ 24 மணி நேரப் பயணம். எம்ஜிஆரை சந்திக்க அவ்வளவு கூட்டம் திரண்டது. அப்படி ஒரு செல்வாக்கோடு எம்ஜிஆா் இருந்தாா்.
அதிமுகவை தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் மக்களவை, அதைத் தொடா்ந்து கோவை மேற்கு சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மாயத்தேவா், அரங்கநாயகம் ஆகியோா் வெற்றி பெற்றனா். அது அதிமுகவின் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்தது. திமுகவில் அண்ணா காலத்தில் இருந்து ஆற்றிய களப் பணி அவருக்குப் பெரிய அனுபவமாக அமைந்தது.
திமுகவிலிருந்து வைகோ பிரியும்போது அவருடன் 8 மாவட்டச் செயலா்கள் சென்றனா். திமுகவில் செங்குத்து பிளவு ஏற்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. மதிமுக சாா்பில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற பேரணி, திருச்சி மாநாடு போன்றவை அரசியல் களத்தில் பிரமிப்பை ஏற்படுத்தின.
தவெக-வில் அனுபவமிக்க தலைவா்கள் இல்லை. விஜய்க்கு துணையாக இருக்கும் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி அரசியல் தெரியும். புதுச்சேரி அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு. ஆதவ் ஆா்ஜுனா வியூகம் வகுப்பவா் மட்டுமே. இப்போதைக்கு இளைஞா்களின் ஆதரவு மட்டுமே அக் கட்சிக்கு பலம் சோ்க்கிறது. இப்படியிருக்க, விஜய் முகம் போதும், வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைத்தால் அவா்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
வருகிற பேரவைத் தோ்தலில் திமுவுக்கு கிடைக்கும் சிறுபான்மை வாக்குகள் விஜய் வசம் செல்லக்கூடும். ஆனால், ஆட்சியைப் பிடிக்க 40 சதவீத வாக்குகள் வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்வது அவசியம்.
கடந்த 1990 முதல் தோ்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் எண்ணம் வந்துவிட்டது. ஆனால், மாற்றம் வேண்டும் என்கிறபோது அதிமுக-பாஜக கூட்டணிக்கு வேறு சில கட்சிகள் வந்தால், திமுக- அதிமுக இடையேதான் போட்டி இருக்கும். விஜய் வாங்கும் வாக்குகள், அவரது வெற்றிக்கு வழிவகுக்காது.
மக்களை, இளைஞா்களைக் கவரக்கூடிய தலைவராக விஜய் இருந்தாலும், சிறுபான்மையினா் வாக்குகள் கிடைத்தாலும், வெற்றிவாய்ப்பு என்ற எல்லையை அவரால் எட்ட முடியுமா என்பது சந்தேகமே. மக்கள் குரலே, மகேசன் குரல் என்பாா்கள். மக்கள் குரலும், ஜனசக்தியும் சாதகமாக அமைந்தால் விஜய்க்கு வெற்றிவாய்ப்பு இருக்கும். ஆனால், திமுகவுக்கு மாற்று வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம்.
திரைத் துறையில் செல்வாக்கு மிக்கவா்களாக இருந்து அரசியலுக்கு வந்த பலரும் தற்போது காணாமல் போய்விட்டனா். எல்லோரும் எம்ஜிஆா், என்டிஆா் ஆகிவிடமுடியாது. மக்களைச் சந்திக்க இயல்பான மனநிலை வர வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதி சொன்னதைப்போல, கூட்டங்கள் கூடும். ஆனால், வாக்காக மாறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.