முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

தமிழ்நாட்டின் முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்பது பற்றி...

Updated On : 10 மே 2026, 7:15 am IST
முதல்வர் விஜய்! - தினமணி
பகிர்:

ஆகக் கடைசியில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்பது உறுதியாகி – இன்னும் சில மணி நேரங்களில் பொறுப்பேற்றும்விடுவார்.

மே 4 ஆம் தேதி த.வெ.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாத, ஆனாலும், தனிப் பெரும் கட்சியெனக் கிடைத்த வெற்றிக்குப் பிறகு நடந்தவை எல்லாமும் தமிழ்நாட்டின் அரசியலில் கொஞ்சம் புதிது; தமிழ்நாட்டு மக்களுக்கும் புதிது, தவெக தலைவர் விஜய்க்கும் புதிய அனுபவமாகவே இருந்திருக்கும்.

‘இன்று போய் நாளை வா’ என்ற கதையாக மூன்று முறை ஆளுநர் மாளிகைக்குச் சென்று திரும்பினார் விஜய்; விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் உள்ளபடியே பெரும்பான்மை உறுதியான நிலையில் சனிக்கிழமை மாலையில் ஆளுநர் மாளிகைக்கு நாலாவது முறையாக புறப்பட்டுப் போனவர், பாதி வழியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர், ஐந்தாவது முறையாகச் சென்று ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரைச் சந்தித்தபோதுதான் ஆட்சியமைப்பதற்கான வழி பிறந்தது – ஏன், இத்தனை முறை செல்ல நேரிட்டது; எவ்வாறு சென்றிருக்க வேண்டும் என்பதெல்லாமும் முதல்வராகும் விஜய்யின் பரிசீலனைக்குரிய பாடங்கள்.

Advertisement

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்கும் விஜய், எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறார். திரைப்படங்களில் ஹீரோவாகத் தோன்றி நடிப்பதும், அரசியல் கட்சி நடத்துவதும், அரசாட்சி நடத்துவதும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்கள். முதல்வர் விஜய்க்காக நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன.

திமுக அரசுக்கு எதிராகத் தேர்தல் பிரசாரங்களில் விஜய் சாட்டிய குற்றச்சாட்டுகளும் மக்களுக்கு தவெக அளித்த வாக்குறுதிகளும் ஒருபுறமிருக்க, புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு, பல்வேறு துறைகளில் தொடர்ந்து நாட்டின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பைத் தொடர்ச்சியாகக் கட்டிக்காத்துப் பராமரிக்க வேண்டும்.

நாட்டிலேயே அனேகமாகத் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவிலான தொழிற்சாலைகள் இருக்கின்றன; தமிழ்நாடுதான் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறது – இந்தியாவின் மொத்தத்தில் 15.24 சதவிகிதம். அதேபோல பொருளாதார வளர்ச்சி விகிதமும் – 10.83 சதவிகிதம். இவ்வாறு உயர் கல்வி, மருத்துவம் என சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இன்னொரு பக்கம், 2025-26-ல் மாநிலத்தின் கடன் சுமார் ரூ. 9.52 லட்சம் கோடி; 2027-ல் இது ரூ. 10.71 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும் செலவினங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறார் விஜய்; மட்டுமல்ல, ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தகுதியுள்ள வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் 100 சதவிகிதம் சுத்தமான குடிநீர் விநியோகம், முதியோர் உதவித் தொகை மூன்றாயிரம், மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், அண்ணன் சீராக ஒரு சவரன், தாய்மாமன் தங்க மோதிரம் என நீள்கிறது இந்த செலவுப் பட்டியல்.

மேலும், ஏற்கெனவே அதிமுக, திமுக அரசுகளால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அம்மா உணவகங்கள், முதல்வர் மருந்தகங்கள், காப்பீடு எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் இருக்கின்றன.

தவிர, தண்ணீரில் தொடங்கித் தமிழ்நாட்டுக்கே உரிய பிரச்சினைகளும் இருக்கின்றன.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுகள் என மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஜெயலலிதா காலந்தொட்டு நடந்துவரும் நீண்ட போராட்டங்கள் இருக்கின்றன; பிஎம் ஸ்ரீ திட்டத்தைத் தமிழ்நாடு ஒப்புக்கொள்ள மறுத்துவரும் நிலையில் கல்விக்கான மத்திய நிதியுதவி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரசாரங்களில் விஜய்யே தெரிவித்துவந்த மாநிலத்தின் சட்ட – ஒழுங்குப் பிரச்சினைகள் மட்டுமின்றிப் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், போதைப் பொருள்கள் புழக்கம் மற்றும் காவல்துறை மீதான விமர்சனங்கள். ஏனென்றால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்றுமறியா 13 பேர் உயிரிழக்கக் காரணமான தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கும் ஆளுங்கட்சியான திமுகவுக்கும் நிறைய வேறுபாடுகள். குருவிகளைச் சுடுவதைப் போல மக்களைச் சுட்டுக் கொன்ற - தண்டிக்கப்பட வேண்டிய – விசாரணை ஆணையம் பரிந்துரைத்த - காவல் துறையினர் பலருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட வினோதங்கள் எல்லாமும் நடைபெற்றன.

தமிழ்நாட்டின் இருண்ட பக்கத்துக்கும் சமூக சீரழிவுக்கும் மூலமான ஒரு காரணம் இருக்கிறது – மது! உழைக்கும் மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாவிட்டாலும்கூட தங்களுக்கு வாக்களித்த ஏழை எளிய மக்களுக்காகத் தவெக அரசு முன்னெடுக்க வேண்டிய முதன்மையான மக்கள்நல நடவடிக்கையாக இருக்கும் இது.

மக்கள் நலனை மனதில்கொண்டு மதுவை ஒழிக்கும் தடத்தில் குறைந்தபட்சம் கடை திறந்திருக்கும் நேரத்தையாவது மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறைக்கலாம்; சில நூறு மதுக் கடைகளை மூடச் செய்யலாம்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்தால்கூட மாநிலத்தில் அரசு சார்பிலான தகுந்த மறுவாழ்வு மையங்கள் இல்லை. தனியார் நடத்தும் மையங்களில் பெரும்பாலானவை மிகவும் காஸ்ட்லியானவை; இவற்றில் சிகிச்சை, பாதுகாப்பு போன்றவற்றுக்கும் உத்தரவாதமில்லை. குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்றேனும் மறுவாழ்வு சிகிச்சை மையங்களை அமைத்து, விடுபட நினைக்கும்  மதுப் பழக்கத்தினருக்கு உரிய மனநலப் பயிற்சியும் சிகிச்சைகளும் அளிக்க வேண்டும் – ஒரு முறை தேர்தலில் வாக்களித்துத் திமுக கைவிட்ட திட்டம் இது.

தமிழ்நாட்டின் புதிய அரசில் முதல்வரில் தொடங்கி அமைச்சர்களில் பலரும் முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைபவர்கள்; அரசு நிர்வாகத்தையும் முதல்முறையாக நடத்தப் போகிறவர்கள். இயல்பாக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்; அதே அரசு அதிகாரிகளை மட்டுமே நம்பியிராமல் தக்கவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இவற்றைச் சிறப்பாகக் கையாள முடியும். ஆளுநர் சந்திப்பிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதிலும் மிக எளிதாக  நடந்திருக்க வேண்டியவை எல்லாம் தேவையற்ற குழப்பங்களில் சிக்கிக் கொண்டதைப்போல அல்லாமல்.

இவற்றைத் தாண்டி சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்துவதற்கும், தனிப் பெரும் கட்சியாக மட்டும் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடத்துவதற்கும் இடையிலான வேறுபாடும் இருக்கிறது.

திமுகவைப் பொருத்தவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து, புதிய ஆட்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துவிட்டார். அதிமுகவைப் பொருத்தவரையிலும் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தீயசக்தி என தவெகவால் வர்ணிக்கப்பட்ட திமுகவுடன் கூட்டணியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள்தான் – இந்திய கம்யூ., மார்க்சிய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – இக்கட்டான தருணத்தில் தவெக ஆட்சியமைப்பதில் எவ்வித எதிர்பார்ப்பும் நிபந்தனையும் இன்றி உதவ முன்வந்திருக்கின்றன - முன்னதாக, தங்கள் கூட்டணித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசித் தங்கள் நிலைப்பாடு பற்றி விவாதித்து முடிவு செய்துவிட்டு. கூட்டணியிலிருந்து ‘ஆல் ஆஃப் அ சடன்’ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்ட காங்கிரஸ் மட்டும் புதிய அரசைக் கூட்டணி அரசாக உருமாற்றி அமைச்சர் பதவிகளையும் பெறுகிறது.

மக்களால் வாக்களிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரக் கூடிய முயற்சிகளை முறியடிக்கவுமே தவெகவை ஆதரிப்பதாகத் திருமாவளவனும் இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் அறிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 1967-ல் காங்கிரஸைத் தோற்கடித்து, வெற்றி பெற்ற திமுக சார்பில் அண்ணா முதல்வரானதில் தொடங்கி, 59 ஆண்டுகளாக மாறி மாறி திராவிட இயக்கங்கள் – திமுகவும் அதிமுகவும் – ஆட்சி செய்து வந்திருக்கின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகளில் வேறுபாடுகளும் இருக்கின்றன. அரசு நிர்வாகத்தில் பொருத்தப்பாடுகளும் இருக்கின்றன. கனிமவளம் உள்பட நிர்வாகம் சார்ந்த சிலபல விஷயங்களில் பெரும்பாலான நேரங்களில் ஒரே மாதிரியான அணுகுமுறைகளையே பின்பற்றியும் வந்திருக்கின்றன.

இப்போது - அகில இந்திய கட்சிகளான - 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதாவை 26 இடங்களிலும், 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸை 23 தொகுதிகளிலும் தமிழக மக்கள் தோற்கடித்திருக்கின்றனர். அல்லாமல் இதுவரை ஆண்ட கட்சிகளான திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வெற்றிகளையும் கணிசமாகக்  குறைத்திருக்கின்றனர்.

அரசியல்ரீதியிலான பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றனர் – தனிப் பெரும் கட்சியாக தவெகவை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர் – புதிய சக்தியெனக் கருதிப் பெரும் நம்பிக்கை வைத்து.

இன்றைக்கு நாட்டின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறதென்றால் – கல்வி, மருத்துவம், மக்கள் நலவாழ்வு, தொழில்கள் என எதுவுமே திடீரென மாயாஜாலத்தில் விளைந்தவை அல்ல – காங்கிரஸ் ஆட்சிக் காலம் என்றாலும் திமுக, அதிமுக ஆட்சிக் காலம் என்றாலும் சரி எல்லாருக்கும் பங்கிருக்கிறது – இவை கொண்டுசெலுத்திய திட்டங்களால் விளைந்த பலன்களே – இவற்றைப் பற்றியெல்லாம் இன்றைய புதிய தலைமுறைக்குத் தெரியாவிட்டாலும்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய பாதையை வகுத்துச் செயல்பட புதியவர்களுக்கு – புதிய தலைமைக்கு வாக்களித்து வழிவகை செய்திருக்கின்றனர் புதிய தலைமுறையினர் – புதிய நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் புது முதல்வராகப் பொறுப்பேற்கிற தவெக தலைவர் சந்திரசேகரன் ஜோசப் விஜய்யிடம்தான் இருக்கிறது! வாழ்த்துகள்!

summary

About TVK leader Vijay taking charge as the Chief Minister of Tamil Nadu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.