தலையங்கம்

நேற்று அங்கே! நாளை இங்கே..?

மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே பகுதியில் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 74 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நகராட்சி துணை ஆணையர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் கட்டடத்தைக் கட்டிய கான்டிராக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்

மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே பகுதியில் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 74 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நகராட்சி துணை ஆணையர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் கட்டடத்தைக் கட்டிய கான்டிராக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது வழக்கமான நடவடிக்கைதான். இருப்பினும், கான்டிராக்டர்கள் இருவருடைய வீடுகளிலும் சோதனை நடத்தியதில், தாணே நகராட்சி அதிகாரிகளுக்கு இவர்கள் தொடர்ந்து லஞ்சம் கொடுத்து வந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்கள் பல இடங்களில் உரிய அனுமதி பெறாமலேயே கட்டடங்கள் கட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

உரிய அனுமதி இல்லாமல் கட்டப்படும் இத்தகைய கட்டடங்களை அதிகாரிகள் இடிக்க முடியாதபடி, அதில் ஏழைகளைக் குடியமர்த்துவது இவர்களது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தாணே குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்திலும்கூட, அதில் குடியேறியிருந்த பலரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். இந்தக் கட்டடத்துக்கு குடிபுகு சான்றிதழ் (ஆக்குபென்சி சர்டிபிகேட்) பெற்றிருக்கவில்லை என்பதால் இத்தனை பேர் உயிரிழக்க நேரிட்டது.

இந்நேரத்தில் நாம் தமிழ்நாட்டை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே நிலவிய அடுக்குமாடிக் கலாசாரம், தற்போது எல்லா நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு குடிபுகு சான்று பெறப்படுகிறதா என்றால் சந்தேகமே. அடுக்குமாடிக் குடியிருப்புக்காக உள்ளாட்சியில் வரிசெலுத்திய சான்றுகளை கான்டிராக்டர்கள் காட்டுகிறார்களே தவிர, குடிபுகு சான்று (ஆக்குபென்சி சர்டிபிகேட்) பெற்றிருப்பதாக காட்டுகிறார்களா? தமிழ்நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குவோர் இது குறித்த விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்களா? அப்படியே பெற்றிருந்தாலும் அது வழங்கப்பட்டதா அல்லது பெறப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது.

புதிதாக ஒரு கட்டடம் கட்டிய பிறகு, அது குடியிருப்பு அல்லது வணிக வளாகம் என எதுவாக இருந்தாலும், அதன் உறுதித் தன்மையை உள்ளாட்சியில் அதற்கான உரிய அதிகாரிகளைக் கொண்டு சோதித்துப் பார்த்து அளிக்கப்படுவதுதான் குடிபுகு சான்று. வணிகத்துக்காக கட்டிய கட்டடத்தை இடித்துக் குடியிருப்பாக மாற்றும்போதும், குடியிருப்பாக உள்ள கட்டடத்தை சிறுமாறுதல்கள் செய்து வணிகக்கடைகளாக மாற்றும்போதும்கூட இந்த குடிபுகு சான்று அவசியம்.

ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுவர்கள் இடிக்கப்பட்டு கடைகள் விசாலப்படுத்தப்படுகின்றன. புதிதாகத் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு இரண்டு, மூன்று கடைகளாக மாற்றப்படுகின்றன. மொட்டை மாடியின் மீது திடீரென்று சுவர் எழுந்து கல்நார் கூரைகள் போட்டு குறைந்தவாடகைக் குடியிருப்புத் தயாராகிவிடுகிறது.

தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகள் இருந்தால் கட்டாயமாக மின்தூக்கி (லிப்ட்) இருக்க வேண்டும். ஆனால், இந்த மின்தூக்கி எத்தனை பேரைத் தாங்குவதாக இருக்க வேண்டும், எவ்வளவு நீளஅகலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அந்தக் கட்டடம் அலுவலகமா அல்லது குடியிருப்பா என்பதைப் பொருத்தது. இதைச் சோதிக்கவும் மின்தூக்கி முறையாக அமைக்கப்பட்டுச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்து சான்று வழங்கவும் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரேட் தனியாக உள்ளது. மின்வாரியத்துக்கும் இத்துறைக்கும் சம்பந்தம் இல்லை. மின்வாரியம் மின்சாரம் வழங்கும் ஒரு நிறுவனம், இது அரசின் ஒரு துறை. இந்த சோதனைக்காக ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் ஆண்டுதோறும் ரூ.800 கட்டணம் செலுத்தி, சான்று புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த கட்டணத்தைவிட 20 மடங்கு வசூல் நடக்கிறதே தவிர, மின்தூக்கியைச் சோதிப்பது என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக, சான்றுகள் இல்லாமல் குடிபுகுவோரும், எப்படியும் லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் எந்தச் சான்றிதழை வேண்டுமானாலும் தருவார்கள் என்கிற மனப்போக்கும்தான், ஒரு கட்டடத்தின் உறுதித்தன்மையைச் சோதிக்காமலேயே குடியேற வழிவகுக்கிறது. லஞ்சத்துக்குப் பயந்து அல்லது லஞ்சத்தை நம்பி உயிரைப் பணயம் வைப்பதா என்று கேட்டால், பட்டால்தானே நம்மவர்களுக்குப் புத்தி வருகிறது, என்ன செய்ய?

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் அடுக்குமாடி விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் தரம் குறித்து எந்த உறுதிப்பாடும் கிடையாது.

தமிழகத்திலும் மாடிவீடுகள் இடிந்துவிழத் தொடங்கியிருக்கின்றன. மதுரையிலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் மாடிக் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இவை இரண்டு அடுக்கு மாடிகள் மட்டுமே. குடியிருந்தோர் எண்ணிக்கையும் குறைவு. அதனால் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. மும்பை, தாணே போல, குடியிருப்புகள் பல அடுக்கு மாடிகளாகவும், குடியிருப்போர் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும்போது, இத்தகைய விபத்துகளில் உயிரிழப்போர் காயமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

அந்த நிலைமை தமிழகத்திலும், குறிப்பாக, சென்னையில் வரத் தொடங்கிவிட்டிருக்கிறது. தாணேயில் நடந்தது போன்ற விபத்து இங்கேயும் நடக்கக்கூடாது என்பதில்லை. தமிழகத்தில் மட்டும் அதிகாரிகள் அனைவரும் லஞ்சமே வாங்காத நேர்மையாளர்களா என்ன?

சட்டப்பேரவை நடைபெறும் இவ்வேளையில், மக்கள் பிரதிநிதிகள் கேட்காத போதிலும் மக்கள் சார்பில், தமிழக அரசுக்கு இரண்டே இரண்டு கேள்விகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அடுக்குமாடி கட்டடங்களும், வணிக வளாகங்களும், ஷாப்பிங் மால்களும் குடிபுகு சான்று (ஆக்குபென்சி சர்டிபிகேட்) பெற்றுள்ளனவா? வரம்பு மீறல்களை முறைப்படுத்துகிறீர்களே அது நியாயமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT