தலையங்கம்

பிடிவாதத்தால் பயனில்லை!

அண்மையில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையை வாக்காளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆசிரியர்

அண்மையில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையை வாக்காளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிக இடங்களைப் பெற்றிருக்கும் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சி அமைக்கவோ, ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரவோ அல்லது ஆதரவளிக்கவோ தயாராக இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஜனநாயகத்தில் வெற்றிடம் ஏற்படாது, ஏற்படக்கூடாது. தேர்தல் என்பது, ஏதாவது ஒரு கட்சி மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்காக மட்டுமானதல்ல. அரசியல் சட்டத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வழிகாட்டுதலில் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் தான்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் 31 இடங்களைப் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தன்னால் பெரும்பான்மை பலம் சேர்க்க முடியாது என்று கூறி, ஆட்சி அமைக்கும் பொறுப்பிலிருந்து நழுவுகிறது. 28 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாங்கள் ஆட்சி அமைக்க தயாராக இல்லை, இன்னொரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தரவும் தயாராக இல்லை என்று தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கிறது. யார் ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு அளிக்கத் தயார் என்று அறிவித்திருக்கும் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளுமே தயாராக இல்லை.

அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, ஏனைய கட்சிகளின், உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது கடமை. 1996-லும் 1998-லும் 1999-லும் பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்பதால் தங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரி அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டதும், தங்கள் கொள்கைக்கு முற்றிலும் முரணான திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்ததும், தில்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் அழைப்பை நிராகரித்திருக்கும் பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஹர்ஷ்வர்தனுக்கு தெரியாது போலிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது விரோதியாகப் பாவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஆம் ஆத்மி கட்சி என்பது பாஜகவுக்கு மாற்றாக உருவாகவில்லை, காங்கிரஸின் இடத்தைப் பிடித்திருக்கிறது. தாங்கள் கோருவதுபோலவே, ஊழலற்ற, நேர்மையான அரசியலை முன்வைக்கும் இன்னொரு கட்சி உதயமாவதும், வளர்வதும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிகோலும் என்பது பாஜகவுக்கு ஏன் புரியவில்லை?

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தாற்போல, நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி கைக்கெட்டும் தொலைவில் இருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி அதைத் தடுத்துவிடும் என்று பாஜக கருதினால், அதைவிட அறியாமை இருக்க முடியாது.

ஆம் ஆத்மி கட்சியும் சரி, இப்போது கிடைத்திருக்கும் வெற்றி, மீண்டும் தேர்தல் நடந்தால் கிடைக்கும் என்றோ, மக்களவைத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் இதே வரவேற்பு தங்கள் கட்சிக்குக் கிடைக்குமென்றோ நினைத்தால், அது பகல் கனவாகத்தான் முடியும். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலிருந்தும், தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றியடையச் செய்ய அதன் ஆதரவாளர்கள் வந்து குவிந்தனர். மறு தேர்தலோ, மக்களவைத் தேர்தலிலோ அது சாத்தியமில்லை. இதை அரவிந்த் கேஜ்ரிவால் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரûஸ அகற்றி நிறுத்த வேண்டும் என்பதில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி இரண்டுமே ஒரே கருத்துடையவை. ஊழலில்லாத நல்லாட்சி தரப்பட வேண்டும் என்பதிலும் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாஜகவை ஆட்சி அமைக்கச் சொல்லி, அதற்கு ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை ஆதரவு அளித்தால் என்ன தவறு? ஹர்ஷ்வர்தன் தலைமையில் அமையும் பாஜக ஆட்சி, தவறுகள் செய்ய முடியாமல், அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி விரும்பும் மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைக்குமே.

ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுடனோ அல்லது பெரும்பான்மையை உருவாக்கியோ ஆட்சி அமைத்தால் அதுவே காங்கிரஸýக்கு சாதகமாகிவிடுமோ என்கிற பயம்தான் பாஜகவை அதன் ஜனநாயகக் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறது என்று தோன்றுகிறது. தில்லி சட்டப்பேரவைக்கு மறு தேர்தல் என்கிற முடிவு திணிக்கப்பட்டால், காங்கிரஸýக்கு லாபம் ; ஆம் ஆத்மி கட்சிக்கு நஷ்டம்; பாஜகவுக்கு அவமானம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT