ஏனைய துறைகளைப் போலவே, விளையாட்டுத் துறையிலும் தமிழகம் தலைநிமிர்ந்து நின்ற காலம் ஒன்று உண்டு. அகில இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், விம்பிள்டன் அளவுக்கு இந்திய டென்னிûஸ எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதன் கிருஷ்ணன். அவரைத் தொடர்ந்து, அமிர்தராஜ் சகோதரர்களும், ரமேஷ் கிருஷ்ணனும், லியாண்டர் பயஸýம் டென்னிஸ் வட்டாரங்களில் தமிழகத்தின் கொடியை பறக்க விட்டனர்.
டென்னிஸில்தான் என்றில்லை. கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலும், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் என்று தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் பலர். தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன், இந்திய ஹாக்கி அணியின் தலைவராக இருந்து பல வெற்றிகளைத் தேடித் தந்தவர். செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்படி இருந்த நிலைமை மாறி, இப்போது பெருமைப்படும் அளவுக்கு இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் குறைந்து வருகிறார்கள் என்பது கவலைக்குரிய ஒன்று.
நாம் விளையாட்டுக்காக முறையாக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நடப்பு நிதி ஆண்டில் விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு 112.50 கோடி ரூபாய். இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு இது.
இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.71.36 கோடியும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு ரூ.4.71 கோடியும், என்.சி.சி.க்கு ரூ.35.46 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2010-11இல் ரூ.31.26 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.112.50 கோடியாக அதிகரிப்பதிலிருந்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் வஞ்சம் காட்டவில்லை என்பது தெரிகிறது.
சர்வதேச செஸ் போட்டிகள் நடத்துவதற்காக மட்டுமே ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டது. செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மேக்னஸ் கார்ல்ùஸனுக்கு ரூ.9.9 கோடி ரூபாயும், அடுத்து வந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரூபாயும் பரிசாக வழங்கியது மட்டுமல்ல, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஏன், பள்ளி அளவிலும்கூட வெற்றி பெற்றவர்களுக்குக்கூட பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதேபோல, சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டரங்கம் ரூ.40 கோடி செலவில் நவீனப்படுத்தப்படுவதும் வரவேற்புக்குரிய செயல்பாடு. பஞ்சாபுக்கு அடுத்தபடியாக, விளையாட்டிலும் சரி, உடற்கல்வியிலும் சரி, அதிகமான ஒதுக்கீடுகளும் வசதிகளும் செய்து தரும் மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கிவிட முடியாது. விளையாட்டு தொடர்பான அமைப்புகள் முறையாக செயல்படுவதுடன், தொடக்கக் கல்வி நிலையிலிருந்து விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து, ஊக்குவித்தால் மட்டுமே சர்வதேச அளவில் புகழ்பெறும் வீரர்களை உருவாக்க முடியும்.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால், பதிவாளர் நியமிக்கப்படவில்லை. போதுமான பேராசிரியர்கள் இல்லை. இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே தொடர்கிறது.
அங்கேதான் அப்படி என்றால், கல்வித் துறையின் கீழ் வரும் கல்லூரிகளின் நிலைமை என்ன தெரியுமா? தமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை 139. சுய உதவிக் கல்லூரிகள் 187.
62 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த 20 ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர் நியமிக்கப்படாமலே இருக்கிறது. ஏறத்தாழ 80 விழுக்காடு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற உடற்கல்வி பயிற்சியாளர்கள் இல்லை. கல்லூரிகளின் நிலைமையே இப்படி என்றால் பள்ளிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த ஆட்சி, அந்த ஆட்சி என்றில்லை, எந்த ஆட்சி வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலைதான் தொடர்கிறது.
அரசின் நிதி ஒதுக்கீடும், தலைநகர் சென்னையைச் சுற்றி சுற்றியே செலவிடப்படுகிறது. மாவட்டத் தலைநகரங்களில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உள்ளது போல, பயிற்சி செய்ய வசதிகளுடன் கூடிய அரங்கங்கள் இல்லை. மாவட்ட ரீதியாக முனைப்புடன் விளையாட்டு மற்றும் உடற்கல்விப் பயிற்சிகள் உறுதி செய்யப்படாமல் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.
இந்த நிலைமை தொடருமானால், தமிழகம் விளையாட்டில் முன்னோடி மாநிலமாவது என்பது அசாத்தியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.