தலையங்கம்

அரசின் அவசர கவனத்துக்கு...!

அண்மைக்காலம் வரை மந்த நிலையில் இருந்த வீடு - மனை - நிலம் விற்பனை தற்போது மீண்டும் பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பியுள்ளது. அதிக அளவில் விளம்பரங்கள் வெளியாகின்றன.

ஆசிரியர்

அண்மைக்காலம் வரை மந்த நிலையில் இருந்த வீடு - மனை - நிலம் விற்பனை தற்போது மீண்டும் பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பியுள்ளது. அதிக அளவில் விளம்பரங்கள் வெளியாகின்றன. நிறைய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. வங்கிகளும் கடன் வழங்கத் தயாராக இருக்கின்றன. சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற மனிதனின் ஆசையைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகச் செயல்படும் நிறுவனங்கள், காளான்களாக உருவெடுத்து வரும் அவலம். எல்லாம் சரி, இன்றைய சந்தை நிலவரம், நேர்மையுடன் பணிபுரியும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு சாதகமானதாக இல்லையே!

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சில இடங்களில் இரு மடங்காகவும், சில இடங்களில் 4 மடங்காகவும் உயர்ந்துள்ளது. இதனால் மனை, அடுக்குமாடி வீடுகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்தன. தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வும் கூடியிருப்பதால் வீடுகளின் விலை மேலும் கூடிவிட்டது.

இந்நிலையில், பல நகரங்களில் பத்திரப் பதிவுத் துறையினர் நடத்தும் மறுஆய்வு நடவடிக்கைகளால், மேலும் சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுகிறது. நகரத்தில் விலை உயர்ந்துவிட்டது என்பதால், வழிகாட்டு மதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளைத் தேடிச் செல்லும் வாய்ப்புக்கும் தடை செய்து, நுகர்வோர் தங்களிடமே திரும்பிவரச் செய்வதற்காக இத்தொழிலில் ஈடுபடுவோரே இவ்வாறு செய்ய வைக்கிறார்களோ என்கிற ஐயப்பாடு பரவலாக மத்தியதர வகுப்பினர் மத்தியில் எழுந்துவிட்டிருக்கிறது.

இப்படியே எல்லா இடங்களிலும் நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டால், நடுத்தர வருவாய் பிரிவினர் எங்கேதான் மனை வாங்க முடியும்? வீடு வாங்க முடியும்? இந்தக் கேள்வி, அரசின் மீதான வெகுஜன விரோதமாக மாறிவிடும் ஆபத்தும் தெரிகிறது.

இந்தியா முழுவதிலும் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை அதிகரித்த போதிலும், தமிழகத்தின் புறநகர் மட்டுமல்லாது, கிராமங்களிலும்கூட மனையின் விலை மிக அதிகமாக உயர்ந்ததற்குக் காரணம், அரசியல்வாதிகளின் "அதிகாரப் பத்திர' முறைகேடுதான். அபரிமிதமான விலையை நிர்ணயித்து, அந்த சொத்தை யாரும் வாங்க முடியாதபடி கூட்டணி அமைத்து, வாங்க விரும்புவோர் இவர்கள் சொல்லும் அதிக விலையைத் தர வேண்டிய கட்டாயச் சந்தையை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்.

இதனால் அதன் உரிமையாளர் பயன் பெறவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே பயனடைந்தனர். இந்த அதிக விலை, பத்திரப்பதிவில் இடம்பெறாமல், பத்திரக் கட்டணம் அரசுக்குக் கிடைக்காமல் போனதால்தான் அரசு, நிலத்துக்கு வழிகாட்டு மதிப்பை உயர்த்தி அறிவித்தது.

மேலும், ஒரு அடுக்குமாடி வீடு கட்டப்படும்போது அந்த மனையை "அன்-டிவைடட் பிராப்பர்டி' என்று பத்திரப்பதிவில் ஒரே முறை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலைமையிலும் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்டணம் மட்டுமல்லாது, அந்த மனையில் எழும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றும், தன் மதிப்புக்கு ஏற்ப 1% கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையால், ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டை வாங்குவோரும் குறைந்தது ரூ.20 ஆயிரம் கூடுதலாகக் கட்டணம் செலுத்தும் நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

அரசு என்னதான் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்தி அறிவித்தாலும், பத்திரப் பதிவுக்கு மட்டுமே அந்தத் தொகை காட்டப்படுகிறது. உண்மையில், அதைவிடவும் கூடுதலாக விலை நிர்ணயித்து கருப்புப்பணம் கைமாறிக்கொண்டேதான் இருக்கிறது. கருப்புப் பணத்தை வைத்திருப்போர் அனைவரும் எத்தனை மனைகள், வீடுகள் வேண்டுமானாலும் வாங்கிக் குவித்துக்கொண்டே இருந்தால், நடுத்தர வருவாய் மக்கள் எவ்வாறு வீட்டுமனையை வாங்க முடியும்?

ஒரு குடும்பத்துக்கு ஒரு குடும்ப அட்டை, ஒரு காஸ் இணைப்பு என்பதைப்போல, எத்தனை வீட்டுமனைகளை ஒரு கணவன், மனைவி வாங்கலாம் என்பதிலும்கூட ஒரு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, அரசு ஊழியர்கள் எத்தனை மனைகள், வீடுகள் வாங்கலாம் என்பதையும், அரசுக்குச் சொல்லாமல் வாங்கிக் குவிக்கும் சொத்துகள் குறித்து புகார் வந்தால் விசாரிக்கவும், விதிமீறி வாங்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்வதுமான நடவடிக்கை தொடங்கப்பட்டால்தான், வீட்டுமனை முதலீடு வியாதி குறையும். சாதாரண நடுத்தர வருவாய் பிரிவினரும் மனை, வீடு வாங்க முடியும்.

அதேபோன்று, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எந்த அளவுக்கு லாபம் வைத்து வீடுகளை விற்கலாம். அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கும் அவர்கள் செலவழித்த தொகைக்கும் உள்ள வேறுபாடு என்ன? அதில் எத்தனை மடங்கு லாபம் இருக்கிறது என்பதைக் கணிக்கவும், அவர்கள் கட்டும் வீடுகளின் தரத்தைச் சோதிக்கவும்

அரசின் தனி அமைப்பு தேவை. அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்று இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும்போது மட்டும் வீடு கட்டியவர்களைக் கைது செய்து என்ன பயன்? அவர்கள் விளம்பரத்தில் சொல்வதையெல்லாம் செய்து தராவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடவும், நியாயம் பெறவும் ஓர் அமைப்பு வேண்டும்.

"ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி' என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு இரண்டு ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், செய்யவில்லை. இந்நிலையில் தமிழக அரசு, இத்தகைய அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நடுத்தர மக்களுக்கு கனவு இல்லம் - வெறும் கனவாகவே முடிந்துபோகவும் நனவானபோதும் இடர்பாட்டில் தள்ளிவிடுவதுமான சூழ்நிலையை "ரியல் எஸ்டேட்' சந்தை உருவாக்கியுள்ளது. இதில் தலையிட்டு, ஒரு ஒழுங்கமைவு காண வேண்டிய தேவை தமிழக அரசுக்கு உள்ளது. இல்லையென்றால், நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவை அரசு இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT