தலையங்கம்

தெய்வமும் உண்டுகொல்!

மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்று வெறும் 2.44 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், இந்தக் குறைந்தபட்ச அளவைக்கூட வழங்க மாட்டோம் என்று அடம்பிடித்து

ஆசிரியர்

மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்று வெறும் 2.44 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், இந்தக் குறைந்தபட்ச அளவைக்கூட வழங்க மாட்டோம் என்று அடம்பிடித்து "சீராய்வு' மனுவுக்கு விண்ணப்பிக்கும் கர்நாடக மாநிலத்தின் போக்கும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக 2 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகம் திறந்துவிட வேண்டும், இதற்கு இணையான அளவு நீரை கர்நாடகம் திறந்துவிடும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, மேட்டூர் அணையைத் திறந்துவிட்ட தமிழகத்துக்கு இரட்டிப்பு ஏமாற்றம். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரவே இல்லை. தண்ணீரைத் திறந்துவிடும் எண்ணம்கூட அவர்களிடம் இல்லை.

நீதிமன்ற ஆணையை ஏற்றுச் செயல்படுத்தியதற்குக் கிடைத்துள்ள பலன், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழாகச் சென்றுவிட்டது. வெறும் 7 டி.எம்.சி. அளவுதான் இப்போது நீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் காவிரி நதியிலிருந்து செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்குக் கூடப் போதாது.

"2.44 டி.எம்.சி. அல்ல, ஒரு துளி தண்ணீர்கூடத் தரமாட்டோம்' என்று கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசியுள்ளார்கள். "சட்டப்படி எதிர்கொள்வோம்' என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறுகிறார். சீராய்வு மனு செய்யவும் அவர்கள் தங்கள் அரசு வழக்குரைஞருடன் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த வேளையில் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

முதலாவதாக, மேட்டூர் அணையிலிருந்து உடனே தண்ணீரைத் திறந்துவிடுங்கள், பிறகு கர்நாடகம் அந்த நீரை வழங்கும் என்று பிப்ரவரி 4 -ஆம் தேதி கூறிய நீதிமன்றம், அதே நாளில் கர்நாடகமும் 2 டி.எம்.சி.யைத் திறந்துவிட வேண்டும் என்பதை ஏன் உறுதி செய்யவில்லை?

மேட்டூர் அணை திறக்கப்படும் அதே வேளையில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டால்கூட, அது மேட்டூர் அணையை அடைவதற்கு இரண்டு நாள்கள் ஆகும். மிகக் குறைந்தபட்ச அளவான 2 டி.எம்.சி.யை, தமிழகத்துக்குத் திறந்துவிட்டு வந்தால்தான் இந்த வழக்கு விசாரணையைத் தொடர்வோம் என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

இரண்டாவதாக, தமிழ்நாட்டில் எத்தனை ஏக்கரில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் வாடுகின்றன என்பதை ஒரே நாளில், கண்டுவந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதேபோன்று, கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது; காவிரி நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் எவ்வளவு ஏக்கரில் பயிர் வைத்துள்ளனர்; அவர்களுக்கு இப்போது இந்த நீர்த்தேவை இன்றியமையாததுதானா, தமிழக விவசாயிகளுக்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டால், கர்நாடக விவசாயிகளுக்கு இன்றைய தேதியில் என்ன பாதிப்பு, அவர்களின் உண்மையான நீர்த்தேவை என்ன ஆகிய இந்த விவரங்களையும் சேகரித்துத் தர மற்றொரு குழுவை கர்நாடகத்துக்கும் அனுப்பியிருக்க வேண்டாமா, ஏன் செய்யவில்லை?

தமிழகத்துக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று கேட்டால், அந்தத் தேவை உண்மையானதுதானா என்பதை ஆராயக் குழு வருகிறது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் விடமாட்டேன் என்றால், அவர்களது பிடிவாதம் நியாயமானதா, அந்த அளவுக்குத் தேவை இருக்கிறதா என்பதை அறிய நீதிமன்றம் ஆர்வம் காட்டத் தவறுகிறது.

தமிழ்நாட்டில் 50% அறுவடை முடிந்துவிட்டது, 40% அறுவடைக்காக காத்து நிற்கிறது, 10% வயல்களில் மட்டுமே நெற்பயிருக்குத் தண்ணீர் தேவை என்று கர்நாடக வழக்குரைஞர் கூறும் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. தமிழ்நாட்டைக் குறித்து கர்நாடகம் தரும் புள்ளிவிவரம் சரியானதுதானா என்று ஆராயாமல் முடிவெடுக்கிறதே, அது எதனால்?

அவ்வாறு 50% அறுவடை முடிந்திருந்தால், நெல் மூட்டைகள் சந்தைக்கு வந்திருக்கும் என்று தமிழக வழக்குரைஞர் சொல்லும் வாதத்துக்கு நீதிமன்றம் சொல்லும் பதில், "இந்த அளவுக்கு எதிர்ப்பை எப்போதும் பார்த்ததில்லை' என்பதுதான். அத்தோடு நிற்கவில்லை. "உங்களுக்கு நீங்கள் சொல்வதுதான் வேதம், அதற்கேற்ப நாங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும், அப்படித்தானே? என்றும் கடுமையாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை தமிழக அதிகாரிகள் மீதும் தவறு இருக்கிறது. நீதிபதியே கேட்டிருக்கிறார்: "நீங்கள் வெறும் வார்த்தைகளால் நிலைமையைக் கூறினீர்கள். இந்த ஜென்டில்மேன் (ஆர்.சுப்பிரமணியம், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழு) சரியான நிலைமையை உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும்'.

மத்திய நிபுணர் குழு பிப்ரவரி 5-ஆம் தேதி தமிழகம் வரும் முன்பாகவே, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழு அனைத்துப் பகுதிகளுக்கும் வந்துசென்றது. மாவட்ட ஆட்சியர்கள் படக்காட்சிகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்கள். அந்தப் புள்ளிவிவரங்களை ஏன் நீதிமன்றத்தில் தமிழகம் சமர்ப்பிக்கவில்லை? இதற்கு யார் பொறுப்பு?

நீதிமன்றம் சொல்லும் குறைந்தபட்ச நியாயத்தைக்கூட கர்நாடகம் ஏற்காது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என்பதால் மத்திய அரசும் தலையிட்டு, தீர்வு காணாது.

"தெய்வமே வந்து தீர்ப்பு வழங்கினாலும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்' என்று கர்நாடக வழக்குரைஞர் தமிழகத்தைக் கேலி பேசுகிறார். தெய்வம் நல்ல மழையைக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நீதிபதி பதில் கூறுகிறார்.

இவர்களிடம் கண்ணகி கேட்டதைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.

இந்நாட்டில், "தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்!'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT