தலையங்கம்

கோவிலும் கோசாலையும்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய மகாத்மா காந்தியிடம், "இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை முஸ்லிம்கள் கொல்வது நியாயமா?' என்று சிலர் கேட்டபோது, "முதலில் இந்துக்களாகிய நீங்கள் பசுக்களை ஒழுங்காக பராமரிக்கிறீர்களா?

ஆசிரியர்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய மகாத்மா காந்தியிடம், "இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை முஸ்லிம்கள் கொல்வது நியாயமா?' என்று சிலர் கேட்டபோது, "முதலில் இந்துக்களாகிய நீங்கள் பசுக்களை ஒழுங்காக பராமரிக்கிறீர்களா? அதற்கு உணவு தருகிறீர்களா? நீங்கள் பசுக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறீர்கள். பசுக்களை நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் பராமரித்தால், அவை விற்கப்படும் நிலை வருமா?" என்று திருப்பிக் கேட்டார்.

நகரங்களில் உள்ள பெரும்பாலான பசுக்களுக்கு சினிமா, அரசியல் சுவரொட்டிகள்தான் உணவு. பழங்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளாமல் துரித உணவகங்களின் பிரைட் ரைஸ் சாப்பிடும் பசுக்களை சென்னை மாநகரத் தெருக்களில் காண முடியும். இதுதான் யதார்த்த நிலைமை. பாலைக் கறந்து எடுக்கத்தான் மனிதன் தயாராக இருக்கிறானே தவிர, பசுக்களின் பசியாற்றக்கூட அவன் தயாராக இல்லை.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கோசாலையில், 4 பசுக்கள் இறந்ததால், இந்து சமய அறநிலையத் துறை அனைத்து கோவில்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. முதல்வர் கோபித்துக்கொள்வாரோ என்கிற முன்யோசனையுடன் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களாக அவை இருக்கின்றனவே தவிர, நடைமுறை சாத்தியங்களாக இல்லை.

நல்ல, தரமான தீவனம் வழங்க வேண்டும், கால்நடை மருத்துவரைக் கொண்டு அடிக்கடி சோதிக்க வேண்டும், மேய்ச்சல் நிலத்தை உறுதி செய்ய வேண்டும், 15 நாள்களுக்கு ஒருமுறை கோசாலையின் சுகாதாரத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதையெல்லாம் எந்தவொரு கோவில் அதிகாரியும் கடைப்பிடிக்க மாட்டார் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

இன்றைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் எல்லோருமே தெய்வபக்தியும், இந்துமத சாஸ்திரங்களில் நம்பிக்கையும் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது. "பசு' என்பது இந்துமத விசுவாசிக்கு லெட்சுமி தேவியின் அம்சம். அப்படியொரு எண்ணத்துடன் அரசு ஊழியர்கள் கோவிலில் தானமாக வழங்கப்பட்ட பசுவைக் கருதிப் பராமரிப்பதில்லை, பராமரிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். கோசாலையை நிர்வகிப்பது தேவையில்லாத கூடுதல் பணிச்சுமை என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள்.

கோதானம் செய்யப்படும் பசுக்கள், மிகநிச்சயமாக "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்' அல்ல. கோதானம் செய்வோர், நல்ல தரமான பசுக்களை தானமாக அளிப்பதில்லை. வெறும் சப்பை மாடு அல்லது கன்றுகளைக் கடனுக்குத் தள்ளிவிட்டு போகிறார்கள். அப்படியே நல்ல பசுக்கள் தானமாக வழங்கப்பட்டாலும் கோவில் ஊழியர்கள் சிலர் நல்ல பசுக்களை சப்பையான பசுக்களுக்கு மாற்றிக்கொள்வது தெய்வசாட்சியாக நடக்கவே செய்கிறது.

பல கோவில்களில் நந்தவனத்துடன் இணைந்த பகுதியாக காணப்பட்ட கோசாலைகள் இன்றில்லை. இந்த நிலங்கள் இப்போது கடைகளாக, கல்யாண மண்டபங்களாக மாற்றப்பட்டுவிட்டன. கோசாலை என்பது மிக அரிதாக சில கோவில்களில் மட்டுமே இருக்கின்றன. அப்படியே இருந்தாலும், பசுக்களை கட்டிப்போடும் இடமாகத்தான் அவை இருக்கின்றன.

திருவண்ணாமலை கோவில் கோசாலையில் இருந்த 70 பசுக்களை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 6 பசுக்கள் வீதம் ஒப்படைக்கும் நடவடிக்கையை அண்மையில் அக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் இந்த ஏழைப் பெண்கள் இந்த பசுமாடுகளை நகர்ப்புறங்களில் எங்கே கட்டி வைப்பார்கள்? இன்று சிறுநகர்களில்கூட மேய்ச்சல் நிலம் காணப்படவில்லை. தீவனத்தின் விலை அதிகம். அதனால், மீண்டும் பசுக்கள் தெருக்களுக்கு வந்தாக வேண்டும்.

கிராமத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேண்டுமானால் பசுக்களைப் பராமரிப்பது சாத்தியமாக இருக்கக் கூடுமே தவிர, திருவண்ணாமலை போன்ற ஆன்மிக நகரங்களிலும், குறிப்பாக, மாவட்டத் தலைநகரங்களிலும் அது சாத்தியமே அல்ல. இப்படி மகளிர் சுய உதவிக் குழுக்களின் பராமரிப்பில் விடப்படும் பசுக்கள், மரணமடைந்ததாகக் கூறப்பட்டு, இறைச்சிக் கடைக்கு விற்கப்பட்டாலும் அதில் வியப்பில்லை.

இன்றைய காலகட்டத்தில் கோசாலைகள் கோவிலுடன் இணைந்து இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தமிழ்நாட்டில் மிகக் குறைவான அமைப்புகளே, குறிப்பாக ஜெயின் அமைப்புகள் மட்டுமே, கோசாலைகளை அக்கறையுடன் பராமரிக்கின்றன. அத்தகைய நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவர்களின் பொறுப்பில் பசுக்களை, மாடுகளை விட்டுவிடுவதுதான் சரியான முடிவாக இருக்கும். அந்த கோசாலைகளுக்கு அரசு பராமரிப்புக்காக மானியம் வழங்கட்டுமே, என்ன தவறு?

கோவில் நிர்வாகத்தின் பொறுப்பிலிருந்து பசுக்களை முற்றிலுமாக விடுவித்துவிடுவதுதான் பசுக்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களுக்கும் அரசு செய்யும் நன்மையாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT