தலையங்கம்

நவாஸ் ஷெரீபின் கவனத்திற்கு...

பாகிஸ்தானில், பர்வேஸ் முஷாரபின் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலை ஜனநாயகப்படுத்தியதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஆசிரியர்

பாகிஸ்தானில், பர்வேஸ் முஷாரபின் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலை ஜனநாயகப்படுத்தியதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சுதந்திர தாகத்துடன் முஷாரபின் ராணுவ ஆட்சிக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்கிற உளவுத் துறைக்கும் பயப்படாமல் துணிவுடன் செயல்பட்ட சில பத்திரிகையாளர்கள் காணாமல் போனார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் பத்திரிகையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.

பர்வேஸ் முஷாரபின் ஆட்சி அகற்றப்பட்டது முதல், சுதந்திரத்தையும், மீட்டுப்பெற்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் பாகிஸ்தானிய ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களில் இருப்போர், குறிப்பாக சுதந்திர தாகம் கொண்ட பத்திரிகையாளர்கள், வெடிகுண்டு கலாசாரத்தின் மூலம் பாகிஸ்தானை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தலிபான்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார்கள்.

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் இப்படியே சுதந்திரமாகச் செயல்படவிட்டால், தீவிரவாதத்தையே வாழ்க்கை முறையாகக் கொண்ட தங்களின் வருங்காலத்துக்கு ஆபத்து என்கிற பயம் தலிபான்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் கடந்த சில மாதங்களாகவே, உண்மைகளைப் படம்பிடித்துக் காட்டும் துணிச்சலான பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

கடந்த மாதம், அரசியல் பார்வையாளரும், தொலைக்காட்சி செய்தியாளருமான ரஸா ரூமி தாக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார் என்றுதான் கூறவேண்டும். சமீபத்தில் ஜியோ தொலைக்காட்சி சேனலைச் சேர்ந்த ஹமீத் மிர் தாக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலுக்கு உள்ளான ஹமீத் மிர் பயந்துவிடவில்லை. தன்னைத் தாக்கியவர்கள் யாராக இருக்கும் என்பதைப் புலனாய்வு செய்யத் தொடங்கினார்.

ஹமீத் மிர் தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பதற்கான விடை பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.யின் அலுவலகத்தில் முடியக்கூடும் என்று தெரிவித்திருக்கும் கருத்து, பாகிஸ்தானில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.யை வழிநடத்தும் பாகிஸ்தான் ராணுவம், ஹமீத் மிரின் குற்றச்சாட்டால் மிகவும் ஆத்திரம் அடைந்திருக்கிறது. பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி ராணுவத்தின் மரியாதையைக் குலைக்க முற்பட்டிருக்கும் ஜியோ தொலைக்காட்சி சேனலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ராணுவம் கோரிக்கை விடுக்கும் அளவுக்குப் பிரச்னை வலுத்துவிட்டிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின்மீது இப்படி குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சையத் சலீம் ஷாஹீத் என்பவர் 2011இல் மரணமடைவதற்கு முன்னால் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்திற்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.

ராணுவத்தையும் ராணுவ நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நிரந்தரமாக அகற்றுவதற்கு தீவிரவாதக் குழுக்களையும், நிழல் வீரர்களையும் பாகிஸ்தானிய

ஐ.எஸ்.ஐ. உளவுத் துறை பயன்படுத்துவதை ரஸா ரூமி, ஹமீத் மிர், ஷாஹீத் போன்றவர்கள் அடையாளம் காட்ட முற்படுவதேகூட ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒருசில பத்திரிகையாளர்கள் துணிந்து செயல்படுவதும், உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதும் தலிபான்களுக்கும், அவர்களுக்கு மானசீக ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பது தெளிவு. அதே நேரத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் ஜனநாயகமும், மக்களிடம் காணப்படும் சுதந்திர எழுச்சியும் அவர்களை அவசரப்பட்டு முடிவெடுக்கவோ, இந்தப் பத்திரிகையாளர்களைக் கொல்லவோ முடியாமல் தடுக்கின்றன. உலகமே பாகிஸ்தானில் நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறது என்கிற பயம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நிறையவே இருக்கிறது.

பிரச்னை என்னவென்றால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கே தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு, இதுபோன்ற பிரச்னைகளில் வாளாவிருக்காமல், முறையான விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதன் மூலம்தான் பாகிஸ்தானிய ராணுவமும், தலிபான்களும் பிரதமர் நவாஸ் ஷெரீபைத் தங்களது கைப்பாவையாக்கி தங்கள் விருப்பம்போல செயல்பட கட்டாயப்படுத்துவதை தடுக்க முடியும்.

ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தானில் அமைதி நிலவும். மக்களாட்சி தொடரும். இதை பிரதமர் நவாஸ் ஷெரீப் புரிந்து செயல்படுவாராக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT