தலையங்கம்

அவசரமும் தாமதமும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்க முற்பட்டதை தேசிய அளவில் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன.

ஆசிரியர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்க முற்பட்டதை தேசிய அளவில் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு தேசிய நாளிதழே, தமிழக அரசின் குறுகிய மாநில கண்ணோட்டம் தமிழகத்தை இந்தியாவிலிருந்து வேறுபடுத்திவிடக் கூடும் என்று கருத்து தெரிவிக்கிறது. அரசியல் சட்டம் அளித்திருக்கும் அதிகாரங்களை, மாநில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தினால் அதன் விளைவுகள் தேச ஒற்றுமையை குலைத்துவிடும் என்று காட்சி ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்னையை ராஜீவ் காந்தி கொலை வழக்கை அகற்றி நிறுத்திவிட்டு, தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனு மீதான காலதாமதமாக மட்டுமே பார்த்தால் இத்தனை விவாதத்திற்கும் ஆவேசத்திற்கும் இடமே இருக்காது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்ற தடையால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு விடுத்த மூன்று நாள் கெடு, மத்திய அரசை அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடி தடை உத்தரவைப் பெற வைத்திருக்கிறது.

குற்றவியல் சட்டப் பிரிவு 432, கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், அதற்கு சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆலோசனைக் குழு அமைத்து அதன் பரிந்துரையின்படி தண்டனை குறைக்கப்படலாம். சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்ட தடா வழக்காக இருந்தால், குற்றவியல் சட்டப் பிரிவு 435இன் படி மாநில அரசு மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில், மத்திய அரசின் முடிவு மாநில அரசை கட்டுப்படுத்தாது. மத்திய அரசின் ஆட்சேபணையையும் மீறி மாநில அரசு தடா கைதிகளின் தண்டனையை குறைக்கவோ அவர்களை விடுவிக்கவோ செய்யலாம். மத்திய அரசிடம் கலந்து ஆலோசிப்பதற்கு பதிலாக தமிழக அரசு மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்தது என்பதுதான் இந்த பிரச்னையில் ஜெயலலிதா அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.

1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கின் தீர்ப்பில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் தமிழக ஆளுநரால் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்படுகிறது. ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது என்றால், அப்போது ஆட்சியிலிருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது பொருள்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் தூக்குத் தண்டனை கைதிகள் மூவரின் மேல்முறையீடு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் தூங்கி வழிந்து, 2005 ஜூலை மாதம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அடுத்த ஆறு ஆண்டுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த கருணை மனுக்கள் 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்படுகின்றன. இதற்குள் 11 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த இடைப்பட்ட காலத்தை, நாளும் பொழுதும் வாழ்வா சாவா என்கிற தவிப்பில் மூவரும் கழித்திருப்பார்கள்.

2005லிருந்து 2011 வரையிலான ஆறு ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அந்த கூட்டணியின் தலைவி சோனியா காந்தி. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்புடைய, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனு 2013இல் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஆறாவது நாள் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், கருணை மனு நிராகரிக்கப்பட்டும் ராஜீவ் கொலையாளிகளை மட்டும் தூக்கிலிடாமல் தவிக்க விட்டது ஏன்? ஆட்சியாளர்களின் துன்பியல் மகிழ்ச்சிதான் அவர்களை மரணத்தை எதிர்நோக்கி பரிதவிக்க வைத்ததோ, யார் அறிவார்?

ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இன்றைய அரசியல் அரங்கில், குறுகிய கண்ணோட்டமும், அரசியல் ஆதாயம் தேடும் மனோபாவமும் இல்லாத அரசியல் கட்சிகளோ தலைவர்களோ இல்லை எனும்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மட்டும் குற்றம் சாட்டுவதில் நியாயமில்லை.

முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கருணை மனுக்கள் மீதான முடிவை எடுக்க ஆறு ஆண்டுகள் தாமதித்த மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையையும் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடாது என்பது என்ன நிச்சயம். முடிவு எடுக்க முடியாமல், தெரியாமல் இழுத்தடிப்பவர்களைவிட, துணிந்து முடிவெடுக்கும் தலைவர்கள்தான் இந்தியாவின் இன்றைய தேவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT