தலையங்கம்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்...

பாஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவசரநிலை குறித்த தனது கருத்தில் கூறியிருப்பதுபோல, அரசியல் கட்சிகளுக்கோ, ஊடகங்களுக்கோ உண்மையாகவே கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்

ஆசிரியர்

பாஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவசரநிலை குறித்த தனது கருத்தில் கூறியிருப்பதுபோல, அரசியல் கட்சிகளுக்கோ, ஊடகங்களுக்கோ உண்மையாகவே கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நரேந்திர மோடி அரசை, ஏதாவது காரணத்தைக் காட்டி ஆட்சியிலிருந்து அகற்றுவது மட்டுமேதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, நியாயமாகப் போராட வேண்டிய பிரச்னைகளைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
 உத்தரப் பிரதேசத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னொருவர் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலுள்ள அத்தனைப் பத்திரிகைகளிலும், காட்சி ஊடகங்களிலும் இதுவல்லவா முதன்மைச் செய்தியாகி இருக்க வேண்டும்? தப்பியோடிய லலித் மோடியும், சுஷ்மா ஸ்வராஜின் பதவி விலகலுமா முன்னுரிமை பெறுவது?
 "ஷாஜஹான்பூர் சமாச்சார்' என்கிற இணைய இதழில் மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜகேந்திர சிங், மாநில அமைச்சர் ஒருவரின் அடியாள்களால் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்கிறார். ஆளும் சமாஜவாதி கட்சியின் அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா சட்ட விரோதமாக வளைத்துப் போட்டிருக்கும் குவாரிகள் பற்றியும், அதற்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் எவ்வாறெல்லாம் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் விலாவாரியாகத் தனது இணைய இதழில் புகைப்படத்துடனும், ஆதாரத்துடனும் வெளியிட்டதுதான் ஜகேந்திர சிங் செய்த தவறு.
 காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீபிரகாஷ் ராவ், பத்திரிகையாளர் ஜகேந்திர சிங்கை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர் அடித்துச் சித்திரவதை செய்யப்படுகிறார். ரத்தக் காயங்களுடன் இன்னோர் இடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் மீது பெட்ரோலை ஊற்றி அமைச்சரின் ஆதரவாளர்கள் உயிரோடு கொளுத்துகிறார்கள். அலறல் சப்தம் கேட்டுத் திரண்டு வந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். மூன்று நாள்கள் உயிருக்குப் போராடிய ஜகேந்திர சிங் மரணமடைகிறார். தனது மரண வாக்குமூலத்தில், அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் முன்னிலையில், காவல் துறையின் உடந்தையுடன்தான் தாக்குதல் நடந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மட்டுமே அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்குவதற்கான காரணமாகிவிடாது என்றுகூறி, முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது அமைச்சரவையிலிருந்து ராம் மூர்த்தி வர்மாவை அகற்ற மறுத்துவிட்டிருக்கிறார். நியாயமாகப் பார்த்தால், அத்தனை அரசியல் கட்சிகளும் அகிலேஷ் யாதவ் பதவி விலகும்படி அல்லவா கேட்டிருக்க வேண்டும்? அவர்களுக்கு அதற்கு நேரமில்லை. லலித் மோடி விவகாரம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 150 இடித்துரைப்பாளர்கள், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்காகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களால் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 2010 முதல் 2014 வரை 30 இடித்துரைப்பாளர்கள் கொல்லப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், முறைகேடுகள் பற்றி கேள்வி எழுப்பிய 40 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிகார் மாநிலத்தில் மட்டும், தகவல் பெற விரும்பிய ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் நடக்கும் முறைகேட்டை வெளிப்படுத்த முற்பட்ட சத்யேந்திர துபே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நடக்கும் முறைகேட்டைத் தட்டிக்கேட்ட சண்முகம் மஞ்சுநாத், நூறு நாள் வேலை உறுதித் திட்ட ஊழலை அம்பலப்படுத்த முற்பட்ட லலித் மேத்தா, மலபார் சிமென்ட்டில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முற்பட்ட சசீந்திரன் என்று எண்ணற்ற இடித்துரைப்பாளர்கள் இறந்து போயிருப்பது பற்றி அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ கவலைப்படுவதே இல்லை. சுஷ்மா ஸ்வராஜின் ராஜிநாமாதான் அவர்களுக்கு முக்கியம்.
 எந்தவொரு கட்சியும் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்தைப் பலப்படுத்துவதிலோ, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதிலோ அக்கறை காட்டுவதில்லை. முந்தைய மன்மோகன் சிங் அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதில் ஆர்வம் காட்டியது என்றால், இன்றைய நரேந்திர மோடி அரசோ இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது. ஊடகங்களும், பொது நல அமைப்புகளும் நாடு தழுவிய அளவில் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டாமா? இல்லையே, ஏன்?
 ஷாஜஹான்பூரில் உயிருடன் ஒரு பத்திரிகையாளர், அமைச்சரின் அடியாள்களால் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார், பிலிபிட் என்கிற இடத்தில் ஹைதர் கான் என்கிற பத்திரிகையாளர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்படுத்தப்பட்டு, திரைப்படங்களில் வருவதுபோல மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்று குரலெழுப்ப யாருக்குமே நேரமும், துணிவும், மனமுமில்லையே, ஏன்? அத்வானி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஜனநாயகத்தின், கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கத்தான் படுகிறது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT