தலையங்கம்

இந்தியாவின் யோகம்!

ஜூன் 21-ஆம் தேதி இந்தியா முழுவதும் எங்குத் திரும்பினாலும் ஒரே நிகழ்வுதான் நடந்தது: யோகா. ஒரே நாளில் இரண்டு கின்னஸ் விருதுகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ளன. ஒரே திடலில் அதிக எண்ணிக்கையில்

ஆசிரியர்

ஜூன் 21-ஆம் தேதி இந்தியா முழுவதும் எங்குத் திரும்பினாலும் ஒரே நிகழ்வுதான் நடந்தது: யோகா. ஒரே நாளில் இரண்டு கின்னஸ் விருதுகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ளன. ஒரே திடலில் அதிக எண்ணிக்கையில் யோகா பயிற்சிக்காக ஒன்று; 84 நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றதற்காக மற்றொன்று.
 தில்லி ராஜபாதையை யோக வீதியாக மாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாடெங்கும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், ஆன்மிக ஆளுமைகள், நடிகர் - நடிகைகள், பாடகிகள் என பல்துறை ஆளுமைகளும் தலைமையேற்க, முன்னிலை வகிக்க யோகா பயிற்சி நடைபெற்றது.
 கின்னஸ் விருதுகள் பெற்ற மகிழ்ச்சியைவிட மிக முதன்மையானது என்னவெனில், இந்தியாவில் தோன்றிய யோகா, முதல்முறையாக இந்தியாவின் பட்டித் தொட்டிகள் அனைத்துக்கும் சென்று சேர்ந்தது. அனைவரும் யோகாசனத்தின் பெருமையை முதல்முறையாக நேரில் பார்த்தனர். சிலர் பங்கு கொண்டனர். யோகா என்பது துறவு பூண்டவர்களுக்கானது என்பதாக இருந்த கட்டுப்பெட்டித்தனம் ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் உடைந்துபோனது.
 இவ்வாறு இந்தியா முழுமைக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது நன்மை என்றாலும், இதன் எதிர்விளைவாக, இந்த விழிப்புணர்வை வணிகமயமாக்கிட முனையும் வேலைகளும் நடக்கும்.
 பிரதமர் நரேந்திர மோடி இதனை உணர்ந்தே இருக்கிறார். ஆகவேதான், தனது உரையில் யோகாவை வணிகமயமாக்கிவிடாதீர் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் கூறியுள்ள இக்கருத்துக்கு அதிகக் கவனம் தந்தாக வேண்டும்.
 தற்போது இந்தியா முழுவதிலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ள நிலையில், இதற்கான தேவையும், கற்க விழைவோர் எண்ணிக்கையும் பல ஆயிரமாக உயரும் சூழலில், யோகாவில் போதுமான பயிற்சி இல்லாதவர்களும் தங்களை ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு, யோகா வகுப்புகளை நடத்தத் தொடங்குவார்கள். யோகா தொடர்பான நிறைய புத்தகங்கள், நிறைய செயல்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியாகும் என்பது உறுதி.
 உடலை வளைப்பது மட்டுமே யோகா அல்ல. உடலை வளைத்துவிடக் கூடியவர் யோகா குரு ஆகிவிட மாட்டார். பிரதமர் மோடி மிகச் சரியாகக் குறிப்பிட்டதைப் போல, உடலை வளைப்பவர்தான் யோகா குரு என்றால், சர்க்கஸில் உடலை வளைக்கும் சிறுவரும்கூட யோகா குருதான். உடலை வளைத்துக் காட்டுவதும், மூச்சை சில நிமிடங்கள் நிறுத்திடும் ஆற்றலும் மட்டுமே யோகா அல்ல.
 யோகாவின் தனிச்சிறப்பு என்னவெனில், எல்லா ஆசனங்களையும் எல்லோரும் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரே நிலையில் உட்காருதல் கூட அனைவருக்கும் இயலாதது. ஆகவேதான், பத்மாசனம், அர்த பத்மாசனம், வஜ்ராசனம், சித்தாசனம் என அமரும் நிலைகள் பலவாக உள்ளன. பஸ்சிமோத்தானாசனம் என்றால், ஒருவர் குனிந்து மூக்கால் முட்டியைத் தொட வேண்டும் என்பது கட்டாயமில்லை. அந்த இலக்கு நோக்கி தன் உடலை இயக்கும்போது, காலப்போக்கில் முழுநிலை தானே வந்தெய்தும். அதுதான் யோகா.
 அதிகக் கவனம் தர வேண்டியது மூச்சுப் பயிற்சி. ஒருவரது நுரையீரலின் கொள்திறனைப் பொருத்துத்தான் உள்மூச்சு, வெளிமூச்சு, மூச்சு வெளிஅடக்கல், மூச்சு உள்அடக்கல் ஆகியவற்றுக்கான காலம் நிர்ணயிக்கப்படும். இதைத் தீர்மானிக்க உதவுபவர் யோகா ஆசிரியர்தான். மூச்சுப் பயிற்சியைத் தவறாகச் செய்தால் எதிர்விளைவுகள் ஏற்படுவது உறுதி. யோகா பின்விளைவுகள் இல்லாதது என்று சொன்னால் நம்ப வேண்டாம். தவறான முறையில், ஒருவரது உடலுக்கு ஏற்பில்லாத ஆசனங்கள் - எதிரான விளைவுகளைத் தரும். பேறு காலத்திலும், ஒருவரது நோயின் தன்மை அல்லது உடல் குறையைப் பொருத்து சில ஆசனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
 மேற்கத்திய கலாசார முறையில் ஒரே இடத்தில் கூட்டமாக எல்லோரும் ஒன்றுபோல செய்வது விழிப்புணர்வு நிகழ்வுக்கு சரியாக இருக்கலாம். ஆனால், உண்மையில் யோகாசனம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அவரது உடல்நிலை, அவரது ஆற்றலுக்குத் தகுந்தபடி யோகாசனங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நல்ல யோகா ஆசிரியர் தேவை. ஒரு மருத்துவர் ஒவ்வொருவரையும் பரிசோதித்து அவரது உடல் தன்மை, வயதுக்கு ஏற்ப மருந்து எழுதிக் கொடுப்பதைப் போன்றதுதான் ஒரு யோகா ஆசிரியரின் பணியும்.
 எல்லா மாநிலங்களிலும் செயல்பாட்டில் உள்ள ஆன்மிக அமைப்புகள் தங்கள் யோகா ஆசிரியர்களைக் கொண்டு, அந்தந்த ஊரில், பள்ளியில், கல்லூரியில் இலவசமாக யோகா வகுப்புகள் நடத்தி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவரவர் உடல் திறன், உடல் குறை, உடல் இயக்கத்துக்கு ஏற்ற ஆசனங்களைப் பரிந்துரைப்பதும், அவர்கள் அதைப் பழகும் வரை இலவசமாகச் சொல்லித் தருவதும் மிகவும் இன்றியமையாதது. இந்த சேவை, பிரதமர் அச்சம் தெரிவித்ததைப்போல, வணிகமயமாதலைத் தவிர்க்க உதவும்.
 ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வே இல்லாத நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். அதிகம் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளிலும்கூட சிறுவயது முதலே உடற்பயிற்சியிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறார்கள். இனிமேல், உடல் நலத்தைப் பாதுகாப்பது பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வு குக்கிராமங்கள் வரை ஏற்படும். தற்காப்புக் கலைகளுக்குத் தரப்பட்டு வந்த முன்னுரிமையைப் பெற்றோர்கள் யோகாவுக்கும் தர முற்படுவார்கள். அந்த வகையில் சர்வதேச யோகா தினம் இந்தியாவின் யோகம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT