பத்து ஆண்டுகள் முதிர்வடைந்த டீசல் வாகனங்கள் அனைத்தும் தில்லி மாநகருக்குள் இயங்கத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக மே 17 வரை இடைக்காலத் தடை அறிவித்திருந்தது. அந்தக் கால அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் மே 25 வரை இடைக்காலத் தடையை நீட்டிப்பு செய்துள்ளது.
இந்தக் கால நீட்டிப்புக்குக் காரணம், இந்த விவகாரத்தில் தில்லி ஐஐடி, சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆகிய இரண்டும் தில்லியின் காற்று மாசுபடுதல் தொடர்பாகத் தீர்ப்பாயம் கேட்டிருந்த அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. பத்து ஆண்டுகள் முதிர்வடைந்த வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசு குறித்து தனியாகப் பிரித்துக் கணக்கெடுப்பு செய்வது கடினமாக இருப்பதால்தான் இவர்களால் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை.
ஏற்கெனவே, தில்லி மாநகரில் 15 ஆண்டுகள் முதிர்வடைந்த பெட்ரோல் வாகனங்களுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்ற ஆண்டு நவம்பரில் தடை விதித்தது. தில்லி மாநகரைப் பொருத்தவரை ஒரு கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் ஆயுள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. ஆகவே, 15 ஆண்டுகள் முதிர்வடைந்த பெட்ரோல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டபோது பெரும் கூச்சல், எதிர்ப்புகள் எழவில்லை. ஆனால், 10 ஆண்டுகள் முதிர்வடைந்த டீசல் வாகனங்களுக்குத் தடை என்கின்றபோது, அது தில்லியின் பொருளாதாரம் மற்றும் வணிகத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால்தான், பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பும், இது சாத்தியமில்லை என்ற மாறுபட்ட கருத்தும் ஏற்பட்டுள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியல்ல என்பது பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்ப்பவர்கள் கருத்து. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒரு வாகனம் இத்தனை ஆண்டுகளுக்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் கிடையாது. மேலும், ஒரு கனரக வாகனத்துக்கு போக்குவரத்துத் துறை சார்பில் தகுதிச் சான்று (பிட்நெஸ் சர்டிபிகேட்) வழங்கப்பட்ட பின்னர் அந்த வாகனத்தைத் தடை செய்வது சட்ட விதிகளுக்கு முரணானது என்பது அவர்கள் வாதம்.
இருப்பினும், தில்லியின் காற்று மாசு என்பது மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நடத்திய ஆய்வு முடிவுகள் அனைத்துமே தில்லி மிகமிக மாசுபட்ட நகரம் என்று தொடர்ந்து தெரிவிப்பதுதான் இத்தகைய தீர்ப்பு வழங்கப்படக் காரணம்.
தில்லி மாநகர் மற்றும் தில்லி பிராந்தியத்தில் சுமார் 1.50 லட்சம் இலகு மற்றும் கனரக டீசல் வாகனங்கள் உள்ளன. இது தவிர, பக்கத்து மாநிலங்களிலிருந்து நாள்தோறும் சுமார் 5 லட்சம் டீசல் வாகனங்கள் உள்ளே வருகின்றன. இவற்றில் சுமார் 50,000 வாகனங்கள் கனரக வாகனங்கள். இவை தில்லி மக்களுக்குத் தேவையான காய்கறிகள், உணவுப் பொருள்கள் கொண்டுவரும் வாகனங்களாகும். தொழில் துறை தேவை சார்ந்த வாகனங்களும், 2,500 நகரப் பேருந்துகளும் இதில் அடங்கும்.
தில்லி மற்றும் தில்லி தலைநகர் மண்டலத்துக்குள் இயங்கும் வாகனங்களில் பெட்ரோல் வாகனங்கள் 7% மட்டுமே என்றும், இதனால் ஏற்படும் காற்று மாசு 1% மட்டுமே என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்தாலும், இந்த அளவு மிகக் குறைவான மதிப்பீடு என்றே கருதப்படுகிறது. இந்தக் கணக்கீடு தவறு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இதற்குக் காரணம், தில்லி நகரில் இரவு நேரத்திலும் காற்று மாசு குறையவில்லை என்பதுதான்.
இரவு நேரத்தில்தான் இலகு, கனரக வாகனங்கள் பெருமளவு தில்லிக்குள் நுழைகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்தி, கண்காணிப்பு செய்ய போதுமான பணியாளர்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, இவற்றை நிறுத்தினால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். மேலும், அடுத்த நாள் தில்லி மாநகரில் காய்கறி, பால் தட்டுப்பாடு எழும்.
தில்லியின் காற்று மாசுபடக் காரணம், டீசல் வாகனங்கள் மட்டுமல்ல. சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடைக் காலத்தில் எரிக்கப்படும் வைக்கோல் தூசு காற்றில் பரவி தில்லியை வந்தடைவதும், குளிர் காலங்களில் ஆங்காங்கே குளிர்காயக் கொளுத்தப்படும் பொருள்களும், தொழிற்சாலைகளின் புகையும்தான் தில்லியில் எப்போதும் காற்று மாசு நிலவக் காரணம் என வாதிடுவோர், நிறம் மாறும் தாஜ்மகாலை உதாரணம் காட்டுகிறார்கள்.
பத்து ஆண்டுகள் முதிர்ந்த வாகனத்துக்கு இரு மடங்கு வரி விதிப்பு செய்வது இந்த வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் என்றும், இலகு மற்றும் கனரக டீசல் வாகனங்களும், தில்லியுடன் வெளி மாநிலங்களை இணைக்கும் சுமார் 10,000 போக்குவரத்துப் பேருந்துகளும் இயற்கை எரிவாயுப் பயன்பாட்டுக்கு மாறுவதும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் என்று தீர்ப்பை எதிர்ப்போர் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னை தில்லியுடன் நின்றுவிடுவதல்ல. நாளும் பொழுதும் வாகனங்கள் பெருகிவரும் நிலையில் இந்தியா முழுவதுமே காற்று மாசால் பாதிக்கப்படுவதும், அதனால் நுரையீரல் தொடர்பான பல பிரச்னைகள் ஏற்பட இருப்பதும் தவிர்க்க முடியாதது. வரைமுறை இல்லாமல் தனியார் வாகனங்களின் உற்பத்தியும், அதை வாங்குவதற்குக் கடனுதவியும் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும். மிகப்பெரிய அபாயத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அரசும், மக்களும் உணர்ந்தாக வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.