தலையங்கம்

காவிரியும் கர்நாடகமும்!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அப்பட்டமான, நியாயமற்ற செயல்.

ஆசிரியர்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அப்பட்டமான, நியாயமற்ற செயல்.
 இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் விடுவது சாத்தியமல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இது தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி, தஞ்சை டெல்டா பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 "நாங்களே குடிநீருக்குத் திண்டாடுகிறோம். இதில் எங்கே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவது' என்ற சொல்லாடல், ஏதோ பிச்சை கேட்பவரிடம், எனக்கே சாப்பாடு இல்லை என்று சொல்லும் தொனியில் இருக்கிறது. ஒரு முதல்வருக்கு இது அழகல்ல. கர்நாடகத்துக்கு மட்டுமே காவிரி சொந்தமல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. பற்றாக்குறைக் காலத்தில் காவிரி நீரை எவ்வாறு இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நடுவர் மன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, இருக்கின்ற நீரை எவ்வாறு இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு பொது முடிவை எடுக்க வேண்டிய கர்நாடக அரசு, இவ்வாறு விட்டேற்றியாகப் பேசுவது, தமிழக விவசாயிகள் மனதில் கொதிப்பு நிலையை உருவாக்கும்.
 பருவ மழைக் குறைவு இரு மாநிலங்களிலும் நேரிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அந்த மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பெருக்கவும், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், சிறிய தடுப்பணைகள் அமைக்கவும் மத்திய வேளாண் துறை சார்பில் ரூ.410 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரூ.69 கோடி ராஜஸ்தானுக்கும், ரூ.64.5 கோடி தமிழ்நாட்டுக்கும், ரூ.41 கோடி கர்நாடகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைவிட தமிழகத்தில்தான் வறட்சியால் பாதிப்பு அதிகம் என்பதற்கு இந்த அளவீடே போதுமானது.
 கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கூற்றுப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போது 25.38 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கபினி அணையில் 19 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆக மொத்தம் 44.38 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் உள்ளது. கர்நாடகத்தின் சாகுபடி பரப்பளவு, குடிநீர்த் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாலும், மூன்றில் ஒரு பங்கு நீரை, அதாவது 15 டி.எம்.சி.யை செம்டம்பரில் தமிழ்நாட்டின் விவசாயத் தேவைக்காக வழங்குவது அவசியம். இது பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதைக் கர்நாடகம் புரிந்து கொள்ள வேண்டும்.
 இத்தகைய நிலைமைக்குக் காரணம், இன்னமும் காவிரி ஆணையம் அமைக்கப்படாமல் காலம் கடத்தப்படுவதுதான். காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு, காவிரியில் உள்ள அனைத்து அணைகளும் அதன் கட்டுப்பாட்டில் வரும்போதுதான், நியாயமான நீர்ப் பங்கீடு சாத்தியமாகும். அத்தகைய பொதுவான அமைப்பு இல்லாததால்தான் கர்நாடக அரசு இத்தகைய இரக்கமற்ற, விவசாயிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கிறது.
 நடுவர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அதிலும் பற்றாக்குறை காலப் பகிர்வுக்கும் உடன்படாமல், இவ்வளவு ஆணித்தரமாக, தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவதன் பின்னணியில், வறட்சியைக் காட்டிலும் அரசியல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
 பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு, பெங்களூரு மக்களுக்கும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. நிர்வாகத்துக்கும் நெருக்கடி கொடுக்கும் முதல் உத்தியாக பெங்களூருக்கான குடிநீர் விநியோக அளவைக் குறைக்கும் மனநிலைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி வந்திருக்கக் கூடும்.
 ஏற்கெனவே, நடுவர் மன்ற விதிமுறையைப் பொருள்படுத்தாமல் காவிரியிலிருந்து மிகையான அளவுக்குத் தண்ணீர் எடுத்து பெங்களூரின் தாகத்தைத் தணித்து வந்துள்ளனர். இருப்பினும், தற்போது அந்த அளவைக் குறைக்கும் முன்பாக, இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு, பெங்களூரு மக்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்படுவதை நியாயப்படுத்தவே இவ்வாறான அறிக்கைகளை, அதிரடி எதிர்ப்புகளை கர்நாடக அரசு செய்து கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
 காவிரி நீர் கிடையாது என்றால் விவசாயிகள் கொதித்தெழுவார்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபம் கொள்வார் என்பது கர்நாடக முதல்வருக்கு நன்றாகத் தெரியும். பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தங்களுக்கான 27.5 டி.எம்.சி தண்ணீரைக் காவிரியில் திறந்துவிட உத்தரவிட முதல்வர் ஜெயலலிதா கோருவார். பிரச்னை பெரிதாகும் என்பதும் கர்நாடக முதல்வருக்குத் தெரியும்.
 அப்படி பிரச்னை பெரிதான பிறகு, வழக்கம்போல, கொஞ்சம் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கொடுப்பதோடு, பெங்களூருக்கு வழக்கமாக விடும் தண்ணீர் அளவைக் குறைத்து, திணறடிக்கலாம். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தலாம். இத்தகைய எண்ணத்தாலும் இந்த அறிவிப்பு வேண்டுமென்றே, திட்டமிட்டு வெளியாகிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.
 காவிரி நீர்ப் பிரச்னையை மாநிலங்களுக்கு இடையேயான உரிமைப் பிரச்னையாக கருதாமல், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாக கர்நாடக அரசு பார்க்க வேண்டும்!
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT