இந்தியாவில் 2006 ஜூலை 11-இல் மும்பை புறநகர் ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபரைத் தவிர, மீதமுள்ள 12 பேரும் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்கள் மீதான தண்டனைகள் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படக் கூடும்.
÷தற்போது குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள 12 பேரும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள். இவர்களில், லஷ்கர்-இ-தொய்பாவின் மும்பைத் தலைவர் ஃபைசல் ஷேக், ஆசிப் கான் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள். பாகிஸ்தானியர்களுக்குத் தங்க இடம் அளித்தது, அவர்கள் இந்தியாவுக்குள் கடத்தி வந்த ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தைப் பாதுகாத்தது, ரயில் குண்டு வெடிப்புக்கான திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்.
÷தேசத்தின் பாதுகாப்பு, பயங்கரவாதக் குற்றங்கள் நீங்கலாக மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியமில்லை என்று சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில், இவர்களில் முதன்மைக் குற்றவாளிகளாக, சதிச் செயலில் நேரடித் தொடர்புடைய இருவருக்கு மட்டும் அதிகபட்சத் தண்டனை விதிக்கப்படக் கூடும் என்கிற பெருந்திரள் எதிர்பார்ப்பு இருக்கிறது. வெடிபொருள் பதுக்கல், சட்ட விரோத, தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவைதான் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத்தரக் கூடும். அதற்கான வலுவைக் கூட்டும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கான வாய்ப்புகள்கூடக் குறைவு.
÷வழங்கப்படும் தண்டனை எதுவாக இருப்பினும், தொடர் குண்டு வெடிப்பினால் பலியான புறநகர் ரயில் பயணிகள் 188 பேரின் குடும்பங்கள், காயமடைந்த 829 பேர், அவர்களது குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பால் முழு நியாயம் கிடைத்ததாக ஆகிவிடாது. ஏனெனில், இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த ஆஸம் சீமா உள்பட 17 பேர் இன்னும் பிடிபடவில்லை.
÷இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கிடைக்க 9 ஆண்டுகள் ஆகியிருப்பது, இந்திய ஜனநாயகம் அனைவருக்கும் சட்டத்தின் சலுகையை வழங்கி நியாயமாக நடந்து கொள்கிறது என்பதன் அடையாளமா அல்லது குற்றச்சாட்டை நிரூபிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட காவல் துறையின் மெத்தனமா?
÷விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் வழக்கு இரண்டு ஆண்டுகள் மேலும் தாமதப்பட்டது. என்றாலும் கூட, பாகிஸ்தான்தான் இந்தத் தாமதத்துக்கு அடிப்படைக் காரணம். குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், அவர்களது இருப்பையே நிராகரிக்கவும், இந்தியாவிடம் அவர்களை ஒப்படைப்பதைத் தொடர்ந்து மறுத்து வருவதுமான பாகிஸ்தானின் பிடிவாதம்தான் இந்த வழக்கு தாமதப்பட முக்கியமான காரணம்.
÷செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு வழக்கில் தொடர்புடைய காலித் ஷேக் முகம்மதுவை அத்துமீறிப் பாகிஸ்தானில் நுழைந்து ராவல்பிண்டியில் அமெரிக்கா கைது செய்ய முடிந்ததைப் போல, ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் அவரது வீட்டுக்குள் புகுந்து அமெரிக்காவால் கொல்ல முடிந்ததைப்போல இந்தியாவால் செய்ய இயலாது. அமெரிக்காவின் அத்துமீறலை சந்தோஷமாகச் சகித்துக் கொள்வதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. இந்தியாவால் அப்படிச் செய்துவிட முடியாது.
÷எல்லை கடந்து தாக்குவதை இந்திய ஊடகங்கள் கண்டிக்கும். விமர்சிக்கும். இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை என்ற பேச்சு வந்தாலே இந்திய எல்லையில் பொதுமக்கள் சிலரை பாகிஸ்தானின் குண்டுக்குப் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், இத்தகைய எல்லை மீறித் தாக்குதல், குற்றவாளிகளைப் பாகிஸ்தானிலிருந்து ரகசியமாகக் கடத்தி வந்து நீதிமன்றத்தில் நிறுத்துதல் போன்ற திரைப்பட சாகசங்களை நிகழ்த்துவது சாத்தியமே இல்லை. இந்தியா அத்தகைய செயலைச் செய்தால் இந்தியாவில் தீவிரவாதம்தான் மேலும் அதிகமாகும்.
÷மும்பை சந்திக்க நேர்ந்த தொடர் குண்டு வெடிப்புகள், ரயில் குண்டு வெடிப்புகள், கடல்வழித் தாக்குதல் எல்லாவற்றிலும் உரிய நீதி கிடைக்காமல் போனதற்கு பாகிஸ்தான் காரணம் என்றாலும், மும்பை காவல் துறையின் பொறுப்பின்மையும்கூட மிக முக்கியக் காரணம். பல்வேறு அரசியல்வாதிகளின், நிழல் உலக தாதாக்களின் கைப்பாவையாக மும்பை காவல் துறை மாறிக் கிடந்தது என்பதை முழுமையாக மறுத்துவிட முடியாது. இந்தக் குற்றச் செயல்களைத் தொடக்க நிலையிலேயே தடுக்க முடியாமல் போனது, குற்றம் நடந்த பிறகும் வலுவான ஆதாரங்களைத் திரட்டவும், வழக்குகளை வலுவாகத் தொடுக்கவும் முடியாமல் போனது அதனால்தான் என்கிற குற்றச்சாட்டை ஒதுக்கிவிட முடியாது.
÷பொதுமக்களின் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் விதமாக, ரயில் விபத்துக்குக் காரணமான தீவிரவாதிகளைச் சட்டம் தண்டிக்கத் தாமதிக்கும்போது, அவர்களை காவல் துறையே கொல்லும்படியான "தி வெட்னஸ் டே', தமிழில் "உன்னைப்போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களை எடுத்தது மட்டுமே இந்திய அறிவுஜீவிகளால் செய்ய முடிந்தது.
÷தீவிரவாதத்தின் அடிப்படைக் காரணிகளை அகற்றுவது எளிதில் சாத்தியமல்ல. தீவிரவாதம் என்கிற மனநோய்க்கான சாக்குபோக்குகள்தான் காரணிகள். கண்காணிப்பின் மூலம் தடுப்பதிலும், சட்டத்தின் மூலம் தண்டிப்பதிலும் அரசு முனைப்பும், கூடுதல் கவனம் செலுத்துவதும் மட்டுமே தீவிரவாதத்தை ஓரளவு கட்டுப்படுத்துவதாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.