இந்தியாவில் பசுமை நெடுஞ்சாலைக் கொள்கையை தொடக்கி வைத்திருக்கிறார் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இதன் நோக்கம் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களைப் பிடுங்கி வேறிடத்தில் நடுதல், பராமரித்தல், அழகு செய்தல் ஆகியன. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டபோதே சிந்தித்திருக்க வேண்டிய செயல்பாட்டை 15 ஆண்டுகளுக்குப் பிறகாவது செயல்படுத்த முற்பட்டிருக்கிறோம் என்பது வரை மகிழ்ச்சி.
தற்போது அமைச்சர் தொடங்கி வைத்துள்ள பசுமை நெடுஞ்சாலைக் கொள்கையின்படி, நெடுஞ்சாலை அமைக்க அரசு ஒதுக்கும் நிதியில் 1% மரம் நடுதல், பராமரித்தல் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்படும். ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைக்காக ஒதுக்கப்படுகிறது என்றால், இதில் ரூ.1,000 கோடி மரம் நடுதல், பராமரித்தலுக்குச் செலவிடப்படும். இந்தப் பணிகளில் உள்ளூர் மக்கள் ஈடுபடுத்தப்படுவர் என்பதால், சுமார் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை உள்ளூர் மக்கள் பயன்படுத்திட வகை செய்யப்படும். மரங்கள் வளர்ப்பு, நடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கை, பராமரிப்பு ஆகியவை ஐ.எஸ்.ஆர்.ஓ. செயற்கைக்கோள்கள் புவன், காகன் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படும். சிறப்பான பராமரிப்புக்குப் பரிசுகள் உண்டு.
மாநில அரசுகளும் இதேபோன்ற பசுமை நெடுஞ்சாலைக் கொள்கையை, மாநில நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் கட்கரி அறிவுறுத்தியுள்ளார். இக்கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது, இந்தியாவின் தற்போதைய பசுமைச் சூழல் 22%-லிருந்து 30% வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
சாலைகளின் இரு மருங்கிலும் மரங்களை வளர்த்து பாதைகளில் நிழல் பரப்புவது என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் இந்திய மரபு. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் நடந்துதான் பல ஊர்களுக்குச் சென்றார்கள். வணிகர்களும் அரசு சேவகர்களும் மாட்டு வண்டி, குதிரை வண்டி, குதிரை ஆகியவற்றை பயன்படுத்தினர்.
நடப்போர் மட்டுமன்றி, மாடுகளும், குதிரைகளும்கூட களைப்பில்லாமல் செல்வதற்கு இந்த நிழல் பரப்பிய மரங்கள் உதவின.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், இந்தியாவில் நவீனமுறை சாலைகள் அமைக்கப்பட்டபோதும்கூட இரு மருங்கிலும் மரங்கள் வளர்ப்பதென்பது, சட்டத்தில் இல்லாத இயல்பான நடவடிக்கையாக இருந்தது. அதிலும் குறிப்பாக, மாமரங்களையும் புளிய மரங்களையுமே சாலைகளின் இருமருங்கிலும் பரவலாக வளர்த்துப் பராமரித்தனர். இதில் காய்க்கும் மாங்காய், புளி போன்றவை அந்தந்த ஊராட்சிகளால் ஏலம் விடப்பட்டு, வருவாயும் பெற்றுத் தந்தன.
புளியம் பழம் உதிர்த்தல், அதன் ஓடு நீக்கி, கொட்டை நீக்குதல் போன்றவற்றில் உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. உள்ளூர் சிறுவர், சிறுமியர் வைட்டமின் சி அதிகமாக காணப்படும் மாங்காய், புளியங்காய் போன்றவற்றை சாலை ஓர மரங்களில் இருந்து பறித்து உண்பதன் மூலம் அவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியது.
சாலையோர மரம் நடுதல் என்பது சங்க காலத்திலிருந்து தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. இதை ராஜாஜி, காமராஜர் போன்ற முதல்வர்களும் பின்பற்றினர்.
ஆனால், இன்றைய நாற்கரச் சாலைகளில் மரங்களே இல்லை. நடப்பட்டு வளரும் மரங்களிலும் பலன் அளிக்கும் மா, புளிய மரங்கள் காணப்படுவதில்லை.
நெடுஞ்சாலைக்கான நிதி ஒதுக்கீட்டில் 1% பசுமை திட்டத்துக்கு ஒதுக்கப்படுவது நன்று. ஆயினும், பாரபட்சம் இல்லாமல் இருக்க, எந்தெந்தப் பகுதியில், எத்தனை கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த மதிப்பில் 1% தொகையை அதே சாலையில் பசுமைக்காக செலவிடப்படும் என்பதாக இருக்க வேண்டும். இல்லாவிடில், இந்த நிதி வேறு சாலைகளுக்கு தடம் மாற வாய்ப்புள்ளது.
மரங்கள் நடுதல், பராமரித்தலை நெடுஞ்சாலை அல்லது நாற்கரச் சாலை அமைக்கும் தனியாரிடம் ஒப்படைத்தல் கூடாது. அவர்கள் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு தரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, முறையாகப் பராமரிப்பார்களா என்பதும் சந்தேகமே.
மரம் நடுதல், பராமரித்தல் பணிகளை அந்தச் சாலை செல்லும் ஊராட்சிகளைச் சேர்ந்த மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பது திட்டத்தை செம்மையாக்குவது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கும் இந்தப் பணியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும். சாலைகளில் மா, புளிய மரங்களே நடப்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னையிலிருந்து குமரிமுனை வரையிலுமான நாற்கரச் சாலையின் இருமருங்கிலும் ஆரம்பத்திலேயே மா, புளிய மரங்களை நட்டிருந்தால், இந்நேரம் அவை பூத்துக் காய்த்திருக்கும். மேலும், சாலையின் நடுவே ஆறடி அகலத்துக்கு சாலைப் பூங்கா வழிநெடுகிலும் உள்ளது. இதில் பூச்செடிகளை நட்டு பராமரிப்பதற்கான செலவு எவ்வளவு என்பது நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சென்னை - பெங்களூரு நாற்கரச் சாலையில் வளர்க்கப்பட்ட மரங்கள் பத்தாண்டுகளில் பெரிதாக வளர்ந்த நிலையில், 6 வழிச்சாலை அமைப்பதற்காக வெட்டுகின்ற அவலம் வேதனைக்குரியது. இது அரசின் தொலைநோக்குப் பார்வையில்லாத திட்டமிடலைத்தான் வெளிச்சம் போடுகிறது. சாலை அமைக்கும் பணியின்போது குறுக்கிட்ட மரங்களை வேருடன் பெயர்த்து சாலையோரமாக நடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதைப் பயன்படுத்த நாம் தவறிவிடுகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.