தலையங்கம்

மம்தா எழுப்பும் உரிமைக் குரல்!

இந்திய அரசமைப்புச் சட்டம் "கூட்டாட்சி' என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே தவிர, அதை உருவாக்கியவர்கள், இந்தியாவுக்குக் கூட்டாட்சி அடிப்படையிலான நிர்வாக அமைப்பைத் தருவதைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருந்

ஆசிரியர்

இந்திய அரசமைப்புச் சட்டம் "கூட்டாட்சி' என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே தவிர, அதை உருவாக்கியவர்கள், இந்தியாவுக்குக் கூட்டாட்சி அடிப்படையிலான நிர்வாக அமைப்பைத் தருவதைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்ததால் கூட்டாட்சி பற்றியோ, மாநில உரிமைகள் குறித்தோ சர்ச்சைகள் எழவில்லை.

அநேகமாக எல்லா முதல்வர்களும் பிரதமரின் விசுவாசிகளாக இருந்ததால், தங்களது தேவைகளைக் கேட்டுப் பெறுவதிலோ, மத்திய அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதிலோ பிரச்னைகள் எழவே இல்லை. அப்படியே யாராவது பிரச்னைகள் எழுப்ப முற்பட்டால், அவர்கள் மாற்றவும் பட்டார்கள். இதனால், மெல்ல மெல்ல மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியத் தொடங்கின.

"கூட்டாட்சி' மனோபாவம் என்பதே இல்லாமல்தான் மத்திய ஆட்சியாளர்கள் நடந்து வந்தனர்.

மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தன என்பது மட்டுமல்ல, மாநில அரசின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, எதற்கு எடுத்தாலும் மத்திய அரசின் அங்கீகாரமோ, அனுமதியோ இல்லாமல் மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டன. இந்த சூழலில்தான் 1967 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒன்பது மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் அகற்றப்பட்டு எதிர்க்கட்சிகளின் அரசுகள் அமைந்தன. அப்போதுதான், "கூட்டாட்சி' குறித்த சிந்தனை வலுப்பெற்று, மாநில உரிமைகளுக்கான குரல் எழுப்பப்படத் தொடங்கியது.

அவசரநிலைச் சட்டத்திற்குப் பிறகு 1977-இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், 1989 முதல் மத்தியில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட கூட்டணி அரசுகளும், மத்திய அரசின் அதிகாரக் குவியலை மறுபரிசீலனை செய்ய வைத்தன. மாநிலக் கட்சிகளின் தயவில்தான் 1989-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டதால், மாநிலங்கள் தாங்கள் இழந்த பல அதிகாரங்களைத் திரும்பப் பெற முடிந்தது. ஆனாலும்கூட, நடுவண் அரசிடம்தான் பெரும்பாலான அதிகாரங்கள் தொடர்ந்து இருந்துவருகின்றன.

2014-இல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. கால் நூற்றாண்டு காலக் கூட்டணி ஆட்சிக்குப் பிறகு முதல் முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மூன்று முறை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால், மாநில அரசுகளின் பிரச்னைகளும், மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரக் குவிப்பால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும் என்பது, புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெறும், கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறும், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, மாநிலங்களின் பங்களிப்புடனான புதிய அமைப்பு உருவாகும் என்பன போன்ற பல வாக்குறுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். ஒருபடி மேலே போய், நிதி, பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட ஒருசில முக்கியமான துறைகளின் அமைச்சகங்களைத் தவிர, ஏனைய அமைச்சகங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படும் என்றுகூட அறிவித்தார் பிரதமர் மோடி. ஆனால், கடந்த சில மாதங்களாகக் காணப்படும் மத்திய அரசின் போக்கிலிருந்து, பிரதமர் தனது வாக்குறுதிகளைக் கைவிட்டுவிட்டாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இது குறித்த முதல் எதிர்ப்புக் குரல் மேற்கு வங்கத்திலிருந்து எழுந்திருக்கிறது. மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் பல முடிவுகளை எடுத்துவிட்டு, அதை எங்கள் மீது திணிக்க மத்திய அரசு முற்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை. மத்திய அரசின் பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மாநில அரசின் ஒப்புதலோ, கலந்தாலோசனையோ இல்லாமல் கைவிடப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் புதிய வரைமுறைகளுக்கு உள்படுத்தப்பட்டிருக்கின்றன.20 முக்கியமான மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் மாநிலங்கள் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என்றும், அந்தத் திட்டங்களுக்கான செலவில் 40% மாநிலங்களின் பங்களிப்பாக இருக்கும் என்றும் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது.

தன்னுடைய நிதியுதவிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் எந்தவொரு மக்கள் நல்வாழ்வுத் திட்டமாக இருந்தாலும், அது குறித்து மாநில அரசுக்கும் சில உரிமைகளும் அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு காண முடியும்? குறிப்பாக, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் குறித்து மாநில அரசுகளுக்குத் தெரிந்த அளவு, மத்திய அரசுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு இந்தத் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பது சரியல்ல.

பிரதமர் மோடி விரும்புவதுபோல, அதிவேக வளர்ச்சி வேண்டுமானால், மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியம். மாநில அரசின் அதிகாரங்களைக் குறைப்பதும், மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை பலவீனப்படுத்துவதும் வளர்ச்சிக்கு உதவாது. முதல்வர் மம்தா எழுப்பி இருக்கும் எதிர்ப்புக் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் விரைவில் எழக்கூடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT