தலையங்கம்

சேவையல்ல, துரோகம்

ராஜதானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில், இந்திய ரயில்வே வளர்வீதக் கட்டணம் அறிவித்ததன் விளைவாக, முதல் இரண்டு நாள்களும் நாளொன்றுக்கு...

ஆசிரியர்

ராஜதானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில், இந்திய ரயில்வே வளர்வீதக் கட்டணம் அறிவித்ததன் விளைவாக, முதல் இரண்டு நாள்களும் நாளொன்றுக்கு ரூ.80 லட்சம் வருமானம் அதிகமாகப் பெற்றிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் இந்தப் பயணக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஒரு பெரிய சாதனையாக ரயில்வே நிர்வாகம் கருதுமானால் அதற்காக மகிழ்ச்சி அடைவதைவிட வேதனைப்படத்தான் முடிகிறது.
அது என்ன வளர்வீதக் கட்டணம்? உலகளாவிய அளவில் தனியார்மயச் சூழலில் விமானப் போக்குவரத்துத் துறையில்  அறிமுகப்படுத்தப்பட்ட கட்டண முறை இது. குறிப்பிட்ட அளவு இடங்களுக்கு அடிப்படைக் கட்டணம் நிர்ணயிப்பார்கள்.
குறிப்பிட்ட இடங்கள் விற்பனையானதும் கட்டணம் மேலும் 10 சதவீதம் அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக 50 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்படும். இதன்மூலம் முதலில் விற்பனையாகும் டிக்கெட்டுகள் குறைந்த அடிப்படைக் கட்டணத்திலும், கடைசியில் விற்பனையாகும் டிக்கெட்டுகள் மிக அதிகமான கட்டணத்திலும் விற்கப்படும்.
விமானப் போக்குவரத்தைப் பொருத்தவரை, பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயக்குவதால், இந்தக் கட்டண முறையால் ஆரோக்கியமான போட்டிக்கு வழிகோலப்படுகிறது எனலாம். ஆனால், இந்நிலையில் ரயில்வே என்ற அரசுத் துறையின் ஏகாதிபத்தியம் நிலவும்போது இப்படியொரு கட்டண முறை என்பது தார்மிக முறையில் பார்த்தாலும், ஆரோக்கியமான வியாபார உத்தி என்று எடுத்துக் கொண்டாலும் ஏற்புடையதல்ல.
ரயில்வே நிர்வாகம் ஒரு புள்ளிவிவரத்தைத் தருகிறது.
பயணிகள் கட்டணமாக ஒரு கி.மீட்டருக்கு 37 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்காகும் செலவு 73 பைசா. இந்த நிதியாண்டில், பயணிகள் கட்டண வருவாயை ரூ.45,000 கோடியிலிருந்து ரூ.51,000 கோடியாக அதிகரிப்பது என்பதுதான் ரயில்வே நிர்வாகத்தின் இலக்கு. ஆனால், இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் வளர்வீதக் கட்டண முறையால் ரயில்வேக்கு கிடைக்க இருக்கும் அதிகபட்ச வரவு ரூ.500 கோடிக்கு மேல் கிடையாது. பிறகு ஏன், சாமானிய ரயில் பயணியைச் சுரண்டும் இந்த விபரீத முயற்சி?
கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கக் குழு அமைத்து விவாதித்து இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறதா என்றால் கிடையாது. ரயில்வே அதிகாரிகள் நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வளர்வீதக் கட்டண முறையால் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் பாதிக்கப்படாது. இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஏ.சி. கட்டணங்கள், சாதாரண படுக்கை வசதிக் கட்டணம், ராஜதானி, துரந்தோ விரைவு ரயில்களில் 50 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல, சதாப்தி விரைவு ரயிலில் அமர்ந்து செல்லும் வசதிக் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கும். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏ.சி. கட்டணங்கள் விமானக் கட்டணங்கள் அளவுக்கு அதிகரிக்குமேயானால், யார் ரயிலில் பயணம் செய்வார்கள்?
இப்போதைக்கு ராஜதானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் கட்டண முறையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்று நினைத்தால் அது தவறு. படிப்படியாக எல்லா ரயில்களுக்கும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எல்லாப் பகுதிகளுக்கும் விமான சேவை இல்லாத நிலையிலும், குறைவான விமானங்களே சேவையில் உள்ளதால் குறிப்பிட்ட
அளவில் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும் என்பதாலும், ராஜதானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கட்டண அதிகரிப்பு ரயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டித்தரும் என்று எதிர்பார்த்தால் அது தவறான கண்ணோட்டம். ஏ.சி. இரண்டாவது வகுப்புக் கட்டணம், ஏசி முதல் வகுப்புக் கட்டண அளவில் இருக்குமானால், பயணிகள் இரண்டாம் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து விடுவார்கள். முதல் வகுப்புக்கட்டணம் அதிகமானால், காத்திருந்தும்கூட விமானப் பயணத்திற்குத் தயாராவார்கள். இதை ரயில்வே நிர்வாகம் யோசித்ததாகத் தெரியவில்லை.
இதற்கு முன்னால் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, சரக்கு ரயில் கட்டணத்தை அதிகரித்ததன் விளைவுதான், லாரிப் போக்குவரத்து அதிகரித்து ரயில்வே துறை கணிசமான வருவாயை இழக்க நேரிட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே நிலைமை பயணிகள் சேவையிலும் ஏற்படக்கூடும்.
ரயில்வேயில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி ரயில்களை பயன்படுத்துவோர் அனைவருமே நடுத்தர வர்க்கத்தினர். அரசுக்கு வருமானவரி செலுத்தும் குடிமக்கள். அவர்களை ஏமாற்றி, அவர்களது அவசரத்தில் லாபம் ஈட்ட, அரசுத் துறை நிறுவனமான ரயில்வே முயற்சிப்பது என்பது நியாயமாக இல்லை. அப்படியே கட்டணத்தை அதிகரித்தாலும்கூட, அதனால் வசதி மேம்பாடோ, சேவை மேம்பாடோ ஏற்படப் போவதில்லை எனும்போது, இந்தக் கட்டண உயர்வை எப்படி நியாயப்படுத்தப் போகிறது ரயில்வே நிர்வாகம்?
ரயில்வே துறையில் உள்ள ஊழலை, மெத்தனத்தை விரயத்தைத் தவிர்த்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அதை
விடுத்து, கடைசி நிமிடத்தில் பயணிக்க நேரிடும் சாமானியன் அதிகக் கட்டணம் கொடுத்தாக வேண்டும் என்கிற நிலைமைக்கு அவனது வரிப்பணத்தில் இயங்கும் அரசுத் துறையான ரயில்வே தள்ளப்படுமானால், ரயில்வே செய்வது சேவையல்ல, துரோகம். அரசு இதைச் செய்யக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT