தலையங்கம்

கொள்கையாவது கோட்பாடாவது...!

ஆசிரியர்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான இன்னொரு வழக்கிலும் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். லாலு பிரசாதைப் பொருத்தவரை, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலை அவருக்குப் புதியதொன்றுமல்ல. மூன்றாவது முறையாக அவர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
1997-இல் பூதாகரமாக வெடித்த மாட்டுத் தீவன ஊழலில் லாலு பிரசாத் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஊழலின் பின்னணியில்தான் அவர் 1997-இல் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
மாட்டுத் தீவனம் வாங்கியதாகப் பொய்க்கணக்கு எழுதி அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை மடைமாற்றம் செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. 2013-இல் சாய்பாஸா மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.37 கோடி பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்திருக்கிறார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது என்றாலும்கூட மேல்முறையீட்டில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அவர்மீது தொடரப்பட்டிருக்கும் ஆறு வழக்குகளில் இரண்டாவது வழக்கிலும் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தேவ்கர் அரசுக் கருவூலத்திலிருந்து 1994 - 1996-க்கு இடைப்பட்ட இரண்டாண்டுகளில் ரூ.84.50 லட்சம் முறைகேடாகப் பணம் மடைமாற்றப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்னும் இதேபோன்ற நான்கு வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி ஒரே குற்றத்திற்காக ஒருவரை இரண்டு முறை தண்டிக்க முடியாது. இந்தச் சட்டப்பிரிவைக் காரணம் காட்டி, வெவ்வேறு அரசுக் கருவூலங்களிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதற்காகத் தண்டிக்கப்படுவது, தனக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பாதுகாப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் வாதிட்டுப் பார்த்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஒரேமாதிரியான வழக்காக இருந்தாலும், கையாண்ட வழிமுறை ஒன்றாகவே இருந்தாலும் அவை வெவ்வேறு பரிமாற்றங்கள் தொடர்பானவை என்பதால் அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதனால் இனி உள்ள நான்கு வழக்குகளிலும்கூட அவர் தண்டனை பெறக்கூடும்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டது எந்தவித அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பதால் ஏனைய வழக்குகளிலும் வேறுவிதமான தீர்ப்பு வழங்கப்படும் என்று யாரும் கருதவில்லை. அதேநேரத்தில், வியப்பும் வேதனையும் ஏற்படுத்துவதெல்லாம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலஅவகாசம்.
1997-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 20 ஆண்டுகள் கடந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டு லாலு பிரசாத் தனது முதல்வர் பதவியைத் துறந்து இப்போது தண்டிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளியில் ஒரு தலைமுறையே மாறிவிட்டிருக்கிறது. இந்தியாவின் நீதி பரிபாலன முறையில் காணப்படும் இந்த ஆமை வேகமும் மெத்தனமும்தான் இந்திய ஜனநாயக அமைப்பின்மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது.
இப்போது நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகளை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர்கள் மீதும் பொறுப்பான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மீதும் எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது முறைகேடுகளை விசாரிப்பதிலான தாமதத்தைக் குறைப்பதற்கு இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தேவையில்லாத நடைமுறைகள், இழுத்தடிக்கப்படும் வழக்கு விசாரணை, போதுமான ஊழியர்கள் இல்லாததால் நீதிமன்றங்களின் செயல்பாட்டுக் குறைவு ஆகியவை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையின் செயல்பாடுகளைத் தடம் புரள வைத்து விடுகின்றன. இதெல்லாம் நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும்கூட, அதை மாற்றியமைக்கவோ இதற்குத் தீர்வு காணவோ அவர்கள் யாருமே தயாராக இல்லை.
ஓம்பிரகாஷ் சௌதாலா, ஜெயலலிதா, லாலு பிரசாத் என்று பல முதல்வர்களும் கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஊழல் நிரூபிக்கப்பட்டும்கூட எந்த ஓர் அரசியல் தலைவரின் செல்வாக்கிலும் சரிவு ஏற்பட்டதாகவோ வருங்காலம் பாதிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. கிரிமினல் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அவர்கள் தலைமையில் அரசியல் கட்சிகள் இயங்குவதும் விசித்திரமாக இருக்கிறது.
லாலு பிரசாதைப் பொருத்தவரை, அரசியல் தூய்மையாளர்கள் என்று கருதப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், கர்பூரிதாக்குர் ஆகியோரின் சீடர் என்று அறியப்பட்டு அரசியல் களம் கண்டவர். சமூக நீதிப் போராளி என்று தன்னை வர்ணித்துக் கொள்பவர். அப்படிப்பட்ட ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுகிறார் என்றால், கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் பயன்படும் வெற்று கோஷங்கள் மட்டும்தானா?
அவரது லஞ்சமும், ஊழலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும்கூட, அவரது அரசியல் செல்வாக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னால் வாக்காளர்கள் லஞ்சம் ஊழலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT