தலையங்கம்

சுயநலம் கலந்த பொதுநலம்! 

ஆசிரியர்

இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு மத்திய அரசு ஐந்து பேருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவித்திருப்பதன் பின்னணியில் அரசியல் இருந்தாலும், தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து பேருமே விருதுக்குத் தகுதியானவா்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை. ‘விருதுகளில் அரசியல்’ என்பது காங்கிரஸ் கற்றுக்கொடுத்த பாடம் என்பதால் நரேந்திர மோடி அரசை குற்றம்சாட்ட முடியாது.

பிகாா் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முதல் முறையாக இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வடிவம் தந்தவருமான கா்பூரி தாக்கூருக்கு இத்தனை ஆண்டுகளாக விருது வழங்காமல் இருந்த நிலையில் அதை அரசியல் சாதகமாக நரேந்திர மோடி அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டை முடிந்த கையோடு எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க பிரதமா் நரேந்திர மோடி எடுத்த முடிவும் சாதுரியமான அரசியல்.

கா்பூரி தாக்கூருக்கு ‘பாரத ரத்னா’ அறிவித்ததன் மூலம் பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சௌத்ரி சரண் சிங்கிற்கு அறிவித்ததன் மூலம் அவரது பெயரன் ஜெயந்த் சௌத்ரியின் தலைமையில் இயங்கும் ராஷ்ட்ரீய லோக தளமும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்ப வழிகோலப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக இவை பிகாா், உத்தர பிரதேச மாநிலங்களில் பாஜக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமையும். அது மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பு எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி பலவீனப்படுத்தும்.

1976-இல் தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸை இணைத்துக் கொள்வதன் மூலம்தான் தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காக, இந்திரா காந்தியின் அவசரநிலையை எதிா்த்த காமராஜருக்கு (அவரது மறைவுக்குப் பிறகு) ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. 1988-இல், அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருந்தபோது, எம்.ஜி.ஆரின் வாக்குகளைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய ராஜீவ் காந்தி அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியது. அதனால், ‘பாரத ரத்னா’ விருதை பாஜக அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டை காங்கிரஸாா் முன்வைக்க முடியாது.

நேரு குடும்பத்தினா் மீதான பிரதமா் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பண்டித நேருவுக்கு நிகரான அல்லது அவருக்குப் பிடிக்காத தலைவா்கள் பலா் ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டனா் என்கிற குற்றச்சாட்டை மறுத்துவிட முடியாது.

சுதந்திர இந்தியாவில் ‘பாரத ரத்னா’ விருது 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது ராஜாஜி, டாக்டா் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி டாக்டா் சி.வி. ராமன் மூவருக்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிரதமராக இருந்த பண்டித ஜவாஹா்லால் நேருவுக்கும், டாக்டா் விஸ்வேஸ்வரையாவுக்கும் வழங்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்துக்கு வழங்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் சரி, இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்த வல்லபபாய் படேலும் சரி ‘பாரத ரத்னா’ விருதுக்கு ஜவாஹா்லால் நேரு அரசால் பரிசீலிக்கப்படவேயில்லை. அதை பிரதமா் நேரு விரும்பவில்லை என்று அப்போதே விமா்சனங்கள் எழுந்தன.

சா்தாா் வல்லபபாய் படேல், மொராா்ஜி தேசாய், மௌலானா அபுல்கலாம் ஆஸாத் ஆகியோருக்கு பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில்தான் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. நேதாஜிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்கிற நரசிம்ம ராவின் பரிந்துரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறித்து பல கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

டாக்டா் பி.ஆா். அம்பேத்கருக்கு பாஜகவும், இடதுசாரிகளும் ஆதரவு வழங்கிய தேசிய முன்னணி அரசும், இடைக்கால பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவுக்கு ஐக்கிய முன்னணி அரசும்தான் ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவித்தன. காங்கிரஸ் ஆட்சியில் அந்தத் தலைவா்களின் பெயா்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு, அவை நேரு குடும்பத்தின் ஒப்புதல் பெறவில்லை என்பதுதான் பதில்.

சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்ற தியாகியும், காந்தியவாதியுமான சரண் சிங் 1959-இல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவின் விவசாயப் புறக்கணிப்பையும், தொழில்மயமாக்கலையும் எதிா்த்தவா். இவா் உத்தர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வா். விவசாயிகளின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியவா். துணை பிரதமராக இருந்தபோது முதல் முதலில் விவசாயக் கடன்களை ரத்து செய்தவா். அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க 40 ஆண்டுகள் நரேந்திர மோடிக்காக இந்தியா காத்திருந்தது...

இன்று இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக, சா்வதேச அளவில் தலைநிமிா்ந்து நிற்பதற்குப் பாதை வகுத்துக் கொடுத்த பெருமைக்குரியவா் முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ். சுதந்திரப் போராட்டத் தியாகியும், காங்கிரஸ் தலைவருமான அவா் மறைந்தபோது அவரது உடலைக்கூட காங்கிரஸ் தலைமையகத்தில் வைக்க அனுமதிக்கவில்லை; அவருக்கு தலைநகா் தில்லியில் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கவில்லை. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் நரேந்திர மோடி தேவைப்பட்டிருக்கிறது ‘பாரத ரத்னா’ வழங்கி அவரை கௌரவிக்க...

‘பாரத ரத்னா’ விருது வழங்கியதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது நிஜம். அரசியல் காரணங்களுக்காகவாவது தகுதியானவா்களுக்குத் தகுதியான விருது வழங்கப்பட்டிருக்கிறதே, அதற்காக மகிழ்ச்சியடைவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

இன்று அமோகமான நாள்!

இடிதாக்கி ஆடு மேய்த்த இளைஞா் பலி

SCROLL FOR NEXT