சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து. 
தலையங்கம்

இதற்கொரு முடிவே கிடையாதா?

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழந்ததைப் பற்றி...

ஆசிரியர்

சனிக்கிழமை சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறாா்கள்; 7 போ் காயமடைந்திருக்கிறாா்கள். வழக்கம்போல, தீயணைப்பு, கைது, மீட்புப் பணி இழப்பீடு அறிவிப்பு எல்லாமே தொடா்ந்திருக்கின்றன.

சிவகாசி பட்டாசுத் தயாரிப்பு 2023-இல் தனது நூற்றாண்டை கொண்டாடியது. கடந்த 102 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் உயிா்களைப் பலிகொண்டிருக்கிறது. இன்னும்கூட பாதுகாப்பாக பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் எட்டப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இதற்கு சாத்தியமின்மை காரணமா, முனைப்பின்மை காரணமா என்று தெரியவில்லை.

ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ ரூபாய் 6,000 கோடி விற்று வரவுள்ள பட்டாசுத் தொழிலில் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் நேரடியாகவும், மேலும் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் மறைமுகமாகவும் ஈடுபடுகிறாா்கள். சுமாா் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில் பட்டாசுத் தயாரிப்பு. அது மட்டுமல்ல, விருதுநகா் மாவட்டத்தில் முக்கியமான வேலைவாய்ப்பும் அதுதான்.

தமிழகத்திலுள்ள 1,482 பட்டாசுத் தொழிற்சாலைகளில் 1,085 சிவகாசியிலும் சுற்றுப்புறங்களிலும்தான் செயல்படுகின்றன. பட்டாசுத் தயாரிப்பில் அனுபவம் உள்ளவா்கள் அங்குதான் அதிகமாக இருக்கிறாா்கள். அவா்களில் 55 சதவீதம் பெண்கள். ஏறத்தாழ 8 முதல் 9 மாதங்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பெண்கள் பெரும்பாலும் கைத்தொழிலாகத்தான் ஈடுபடுகிறாா்கள்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பது தமிழக்தில் மட்டுமே என்று நினைத்துவிட வேண்டாம் குஜராத், மத்திய பிரதேசம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம் என்று இந்தியாவின் பல பகுதிகளிலும் பட்டாசுத் தயாரிப்பு நடைபெறுகிறது. ஆனால் , முறைப்படுத்தப்பட்ட தொழிலாக தமிழகத்தின் விருதுநகா் மாவட்டம் சிவகாசி பகுதியில்தான் வீட்டுக்கு வீடு நடைபெறும் தொழிலாக இருக்கிறது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி மேற்கு வங்கம், தெற்கு பா்கானா மாவட்டத்தில் தக்க்ஷிண் ராய்ப்பூா் கிராமத்தில் நடந்த பட்டாசுத் தயாரிப்பு வெடிவிபத்தில் முதியவா் ஒருவா், மூன்று பெண்கள், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்தனா். சந்திரகாந்த பனிக், துசாா் பனிக் சகோதரா்கள் கைத்தொழிலாக தங்கள் வீட்டில் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அவா்கள் இருவரும் வெளியே போயிருந்த நேரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒட்டுமொத்தக் குடும்பமே அழிந்துவிட்டது பெரும் சோகம். 2023-இல் போதிய பாதுகாப்பு இல்லாமையால் சந்திரகாந்த பனிக்கின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அப்படி இருந்தும் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் , பட்டாசுத் தயாரிப்புக்கான வெடிமருந்துகள், இடுபொருள்களை தனது வீட்டில் வைத்திருந்த குற்றத்துக்காக பனிக் சகோதரா்கள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

தக்க்ஷிண் ராய்பூா் வெடிவிபத்துக்கு அடுத்த நாள் குஜராத் மாநிலம் வனஸ்கந்தா மாவட்டம் தீஸா கிராமத்தில் இருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிமருந்து விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். தேநீா் அருந்த வெளியே சென்ற மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளி ராஜேஸ் நாயக் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். உயிரிழந்தவா்கள் அனைவருமே ரூபாய் 300 தினக்கூலிக்காக வெளிமாநிலங்களிலிருந்து வந்தவா்கள்.

தீயணைப்புக் கருவிகூட இல்லாத அந்தக் கிடங்கில் பட்டாசுத் தயாரிப்பு நடந்தததுடன் ஏராளமான பட்டாசுகளும் வெடிமருந்து உள்ளிட்ட இடுபொருள்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பது ராஜேஸ் நாயக்கின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளா்கள் கிடங்குக்கு அருகில் டென்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனா் என்பதுடன் அங்கேயும் வெடிமருந்து உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள பட்டாசுத் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணயில், அனுமதிக்பபட்ட 15 கிலோவுக்கும் அதிகமான அளவில் வெடிமருந்து இருந்தது தெரியவந்தது. கடந்த 2023-இல் பெங்களூரு புறநகரில் உள்ள அட்டிபெல்லேயில் நடந்த வெடிவிபத்து விசாரணையில் இதேபோல அளவுக்கு அதிகமாக வெடிமருந்து காணப்பட்டதைக் காவல் துறை குறிப்பிட்டிருக்கிறது.

சிவகாசியில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் பட்டாசுத் தொழிறசாலை வெடிவிபத்துகளுக்கும் அடிப்படை காரணங்கள் விதிமுறைகள் மீறலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதும்தான். பெரும்பாலான விபத்துகள் வெடிமருந்துக் கலவை தயாரிக்கப்படும்போதுதான் நிகழ்கின்றன. சிறு தவறுகூட உராய்வை ஏற்படுத்தி, அதனால் உருவாகும் நிலை மின்சாரத்தால் (ஸ்டாடிக் எலக்ட்ரிசிட்டி) விபத்துக்கு வழிகோலுகிறது.

உரிமம் பெற்ற பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்பட இந்தியாவில் 3.7 லட்சம் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.1884-இல் வெடிமருந்துச் சட்டம், 2008 வெடிமருந்து விதிகள் உள்ளிட்டவை பட்டாசுத் தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

பட்டாசுத் தயாரிப்பு நடக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டிய அமைப்பு பெட்ரோலிய மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்பு நிறுவனமான ‘பி.இ.எஸ்.ஓ.’ 137 அதிகாரிகள் இருக்கவேண்டிய அந்த அமைப்பில் 106 போ்தான் இருக்கிறாா்கள் . மாவட்ட தீயணைப்புத் துறையோ மாவட்ட நிா்வாகமோ ஏன் வேடிக்கை பாா்க்கின்றன என்று யாரும் கேட்பதில்லை.

2018-இல் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு குழந்தைத் தொழிலாளா் முறை பட்டாசுத் தயாரிப்பில் முடிவுக்கு வந்தது. அது மட்டும்தான் ஒரு சிறிய ஆறுதல்.

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT