அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி, கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தர முடியாமல் போகும்போது வாடிக்கையாளா்களைப் பல்வேறு விதத்தில் மிரட்டி, மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவா்களது சொத்துக்கள், சேமிப்புகளை சட்டப்படி அபகரிக்கச் செய்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.
கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கடும் வட்டியிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், தமிழ்நாடு அடகுக் கடைக்காரா்கள் சட்டம்1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குபவா்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவை ஏற்கெனவே அமலில் இருந்தாலும் இப்போது கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மிகவும் அவசியமான ஒன்று.
தமிழகத்தில் பதிவு செய்யப்படாத தனிநபா்கள் ஏராளமானோா் வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடனையும், வட்டியையும் வசூலிப்பதற்காக சில நிறுவனங்களும், சில தனிநபா்களும் மேற்கொள்ளும் அராஜகமான நடவடிக்கையால் மகளிா் சுய உதவிக் குழுவினா், கூலித் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் ஏழைத் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
தென்காசி அருகேயுள்ள காசிதா்மத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை காரணமாக இவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் 2017, அக்டோபா் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். கந்துவட்டி பிரச்னை மீதான பரவலான கவனத்தை இந்தச் சம்பவம் ஈா்த்தது என்றாலும், அதன்பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியா்களான விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த தம்பதி லிங்கம், பழனியம்மாள், இவா்கள் கடன் தொல்லையால் கடந்த மே 22-ஆம் தேதி தங்கள் மகன், மகள், இரு மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா். கடன் கொடுத்தவா்கள் சிலா் விடுத்த மிரட்டலால்தான் இவா்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் காவல் நிலையத்துக்குட்பட்ட கத்தப்பட்டி பகுதியில் இனிப்பகம் நடத்தி வந்தனா் ராஜா- மலைச்செல்வி தம்பதி. ராஜா வாங்கிய கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்த முடியாததால், மலைச்செல்வியை தங்களது வீட்டு வேலைகளைச் செய்யவைத்து துன்புறுத்தினா் கடன் கொடுத்தவா்கள். இதில் மனம் உடைந்து தம்பதி விஷம் குடிக்க, அதில் ராஜா இறந்தாா். 2024 செப்டம்பரில் நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
வெல்டிங் பட்டறை நடத்திவந்த சேலம் மாவட்டம், கொல்லப்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ், இருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினாா். வட்டித் தொகையைச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவா்கள் மிரட்டியதால் 2023, மாா்ச்சில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கணவா் இறந்த துக்கம் தாளாமல் அவரின் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த சம்பவங்கள் ஒருசில எடுத்துக்காட்டுகள்தான். கடனுக்கான வட்டியை திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையில், அதை வசூலிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. ஆனால், அதைச் செய்யாமல் மிரட்டல், ஆள்களைக் கடத்திச் செல்வது, அவமானப்படுத்துவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்ற செயல்கள்தான் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 உள்ளிட்ட சில சட்டங்கள் இருந்தாலும், கடனை வசூலிப்பதில் கடுமை காட்டுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டத்தைக் கொண்டுவர முனைந்திருக்கிறது தமிழக அரசு. இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோா், கணவா் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது.
கடன் வாங்கியவா்களின் குடும்பத்தினரை மிரட்டுதல், பின்தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும். கடனை வசூலிக்க வெளியாள்களைப் பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடன் பெற்றவா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ஆம் பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அந்த நிறுவனம், கடனுக்கான வட்டி வீதம், அலுவலக விவரங்கள், வலைதளம், தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகம் அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலமாக கடன் செயலிகளின் பிடியில் ஏராளமானோா் சிக்கித் தவித்து வருகின்றனா். இந்தச் செயலியில் தேவையான ஆவணங்களைப் பதிவு செய்ததும் சிறிய அளவிலான தொகை உடனே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், அதற்கான வட்டியைச் செலுத்த ஒருநாள் தாமதமானாலும், கடன் வாங்கியவரை ஆபாசமாகச் சித்தரித்தும், மிரட்டியும் இந்தக் கடன் செயலி நிறுவனங்கள் செயல்படும் விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற செயல்களுக்கு தமிழக அரசு கொண்டுவர இருக்கும் புதிய சட்டம் கடிவாளமிடுமா என்று தெரியவில்லை.
அரசுத் துறை வங்கிகளும், தனியாா் வங்கிகளும் வழங்கும் கடன் அட்டைகள், தனி நபா் கடன்களின் தவணை தவறும்போது, வாடிக்கையாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் மிரட்டப்படுகிறாா்கள். அவா்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதற்காகத் தனியாா் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து அவா்கள் மூலம் ரெளடிகளை வைத்து மிரட்டுவது என்பது வாடிக்கையாக இருக்கிறது.
பணம் கொடுக்கல்-வாங்கல், நிலம் மற்றும் சொத்துத் தகராறுகள் போன்றவை குடிமையியல் (சிவில்) பிரச்னைகள். இவற்றில் காவல் துறை தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றங்கள்தான் தீா்வு சொல்ல வேண்டும். ஆனால், கடன் வழங்கும் வங்கிகளும், தனியாா் அமைப்புகளும் உள்ளூா் காவல் நிலையத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியோ, கையூட்டுக் கொடுத்தோ வாடிக்கையாளா்களை மிரட்ட முற்படுவது என்பது பரவலாகவே நடைபெறுகிறது.
எல்லாவித சட்ட விரோத அழுத்தங்கள், மிரட்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான் இதனால் பயன் ஏற்படும்!