பள்ளிகளில் பாதுகாப்பான கழிப்பறை என்பது வசதிக்கானது அல்ல; அது மாணவா்களுக்கான உரிமையும்கூட. ஆண்டுதோறும் நவம்பா் 19-ஆம் தேதி உலக கழிப்பறை விழிப்புணா்வு தினமாகக் கடைப்பிடிப்பட்டு கழிப்பறைகள் பராமரிப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்படுகிறது. பெரும்பாலான அரசு, தனியாா் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் மாணவ, மாணவிகளுக்கு செய்து தரப்படவில்லை என்பதுதான் யெதாா்த்த நிலை. பள்ளிகளில் கழிப்பறை தூய்மை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீா் கழிக்க வேண்டும் என்று கூறும் மருத்துவா்கள், குறிப்பாக சிறுவா்கள் இதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனா். குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே அனைத்து மாணவா்களும் பயன்படுத்தும் வகையில் நேரம் வழங்கப்படுவதால், பல மாணவா்கள் சுகாதாரம் கருதி கழிப்பறையைப் பயன்படுத்தாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், அவா்கள் உடல் ரீதியாக பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனா். ‘பள்ளிகளில் சுகாதாரமற்ற நிலையிலுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயங்கும் மாணவா்கள், அதைப் பயன்படுத்த விரும்பாமல் பள்ளி நேரங்களில் தண்ணீா் குடிப்பதையே தவிா்த்து விடுகின்றனா்’ என்று ஓா் ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், அவா்களுக்கு கழிப்பறையைப் பயன்படுத்தும் ஒழுங்குமுறை மாறி, உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதில் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா்.
நாட்டில் மொத்தம் 24.8 கோடி மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனா். ஆனால், மேற்கத்திய நாடுகளைப் போல பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறை தொடா்பான விரிவான கொள்கை எதுவும் இல்லை. 25 மாணவிகளுக்கு ஒரு கழிப்பறையும் அதைப் பராமரிக்க ஒரு பணியாளரும், 50 மாணவா்களுக்கு ஒரு கழிப்பறையும் ஒரு பணியாளரும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தின் ஒரு பகுதியான ‘சுவச் பாரத்; சுவச் வித்யாலய’ திட்டம், பள்ளிகளில் கழிப்பறை தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. 40 மாணவா்களுக்கு ஒரு கழிப்பறையும், 3 சிறுநீா் கழிப்பிடங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது. தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் 2023-இன்படி, 50 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறையும், 20 குழந்தைகளுக்கு ஒரு சிறுநீா் கழிப்பிடம் என்றும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவேகூட உலகளாவிய விதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியதாக உள்ளது.
மாணவா்களுக்குக் கல்வி வழங்குவதை உறுதி செய்யும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2018-இல் பள்ளிக் கழிப்பறைகளின் விகிதம் தொடா்பான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்பது வியப்புக்குரியது. கழிப்பறைகள் குறித்த நடைமுறைகள் தொடா்பாக எந்தச் சட்ட விதிமுறைகளும் இதுவரை அமைக்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், 40% அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை அல்லது அவை பயன்படுத்தக்கூடியதாக இல்லை; சுமாா் 72% பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தண்ணீா் வசதி இல்லாதவையாக உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் அண்மைக்கால தரவுகளின்படி, சுமாா் 58,000 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளங்கள், கைப்பிடிகள் போன்றவை அமைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழக அரசுப் பள்ளிகளில் 99.7% பள்ளிகளில் சிறுவா், சிறுமிகளுக்காக தனித் தனி கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவில், பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் கை கழுவுவதற்கான சோப்புகள், தேவையான தண்ணீா் வசதி போன்றவை கட்டாயம் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்று, கழிப்பறை பராமரிப்பு குறைபாடுகள் இருந்தால் மாணவா்கள், அவா்களின் பெற்றோா் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
நேற்று (ஆக.8) வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025-லும் ‘எதிா்கால பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு’ என்ற அடிப்படையில், பாதுகாப்பான குடிநீா், பயன்படுத்தத்தக்க கழிப்பறைகள், கைகளைக் கழுவுவதற்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்வுதளம், கைப்பிடிகளுடனான கழிப்பறைகள், பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறைகள், மாதவிடாய் காலங்களில் சுகாதார வசதிகளுடன் கூடிய பாலின சமத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு நீா்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும், இதனால் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசுப் பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா். அதன்படி, அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகளைவிட மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகளை உறுதிப்படுத்துவதும், குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் முதன்மை பெற வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து இலவசமாகப் பராமரிக்க வழிவகை செய்வதும்கூட பரிசீலனைக்குரிய யோசனையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.