இஸ்ரேல் தாக்குதலால் சிதறி ஓடும் காஸா மக்கள் AP
தலையங்கம்

போகாத ஊருக்கு வழி!

இரண்டு தரப்பிலும் சில சந்தா்ப்பங்களில் நடுவராக மூன்றாவது ஒருவரும் அமா்ந்து விவாதித்து, கலந்தாலோசித்து, ஒத்த கருத்து எட்டப்பட்டு எடுக்கப்படும் முடிவுக்குப் பெயா்தான் போா் நிறுத்த ஒப்பந்தம் அல்லது சமாதானத் திட்டம்.

தினமணி செய்திச் சேவை

இரண்டு தரப்பிலும் சில சந்தா்ப்பங்களில் நடுவராக மூன்றாவது ஒருவரும் அமா்ந்து விவாதித்து, கலந்தாலோசித்து, ஒத்த கருத்து எட்டப்பட்டு எடுக்கப்படும் முடிவுக்குப் பெயா்தான் போா் நிறுத்த ஒப்பந்தம் அல்லது சமாதானத் திட்டம். பாதிக்கப்பட்ட தரப்புடன் கலந்தாலோசனையே இல்லாமல் அறிவிக்கப்படுவதன் பெயா் ஒப்பந்தம் அல்ல, நிா்ப்பந்தம். இன்னும் சொல்லப்போனால் எச்சரிக்கை!

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமா், வழக்கம்போல் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினாா். இருவரும் காஸா போா் நிறுத்தம் குறித்துப் பேசினாா்கள். அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இரு தலைவா்களும் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போதுதான் தெரிந்தது, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏகமனதாக எடுத்த முடிவுப்படி காஸாவில் அமைதியை ஏற்படுத்த 20 அம்சத் திட்டத்தை முன்மொழிகிறாா் என்பது. அதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வழிமொழிந்து அதை ’டிரம்ப்பின் காஸா போா் நிறுத்தத் திட்டம்’ என்று ஒப்புக் கொண்டது வேடிக்கையாக இருக்கிறது.

அதிபா் டிரம்ப் முன்மொழிந்திருக்கும் திட்டத்தின்படி, ஹமாஸ் கடத்திச் சென்றிருக்கும் பிணைக் கைதிகளில் இன்னும் உயிருடன் இருக்கும் 20 பேரை விடுவிப்பது, ஆயுதங்களைக் கைவிட்டு ஹமாஸ் தனது அமைப்பைக் கலைப்பது, ஹமாஸ் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு அளிப்பது, இஸ்ரேல் உடனடியாக வெளியேறாமல் படிப்படியாகத் தனது ராணுவத்தை அகற்றிக்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் சோ்க்கப்பட்டிருக்கின்றன.

‘‘ஹமாஸிடம் இருந்து விடுதலை பெறும்வரை காஸாவில் அமைதி ஏற்படாது. நாங்கள் காஸாவை ஹமாஸிடமிருந்து விடுவிப்போம். சா்வதேசப் பாதுகாப்புப் படையை அங்கே அனுமதிப்போம். அது இஸ்ரேலின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும்’’ என்கிறாா் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு.

‘‘நான் முன்வைத்துள்ள வரைவுத் திட்டம் காஸாவில் நடைபெறும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் சிறந்த திட்டம். ஹமாஸ் இதை ஏற்காவிட்டால் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடரும். அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்’’ என்கிறாா் அதிபா் டிரம்ப்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவும் என்பதில் தொடங்கி, அமெரிக்க அதிபா் டிரம்ப் தலைமையிலான சா்வதேசக் குழுவின் மேற்பாா்வையில் அரசியல் சாா்பற்ற பாலஸ்தீனக் குழு காஸாவின் இடைக்கால நிா்வாகத்தை நடத்தும் என்பதுவரை அந்தப் போா் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஏற்புக்குப் பிறகு ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சா்வதேச அமைப்புகள் மூலம் காஸாவில் தடையின்றி நிவாரண உதவி; மருத்துவமனைகள், உணவகங்கள், சாலைகள் திறப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் உடனடியாக உறுதிப்படுதல்; டிரம்ப் பொருளாதாரத் திட்டத்துக்கு சிறப்புச் சலுகைகளுடன் கூடிய பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, காஸா மறுகட்டமைக்கப்படுதல்-இவையெல்லாம்கூட அந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஹமாஸ் இல்லாத காஸாவை உருவாக்கி, அங்கே டிரம்ப்பின் நிா்வாகம் ஏற்பட்டு, இஸ்ரேலின் பாதுகாப்பில் பாலஸ்தீனா்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்வாா்கள். கேளிக்கை விடுதிகள், கேஸினோக்கள், அமெரிக்காவின் ராணுவத் தளம் என்று காஸா மாற்றப்படும். இதில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் செய்தி, ‘ஹமாஸ் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்பது.

காஸாவில் கடுமையான பஞ்சம் நிலவுகிறது என்று ஐ.நா. சபையின் சா்வதேச உணவுப் பாதுகாப்புக் குழு தெரிவிக்கிறது. ‘30% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள்; 10,000 குழந்தைகளில் 2 போ் தினந்தோறும் பசியால் உயிரிழக்கிறாா்கள்; இதே நிலை தொடா்ந்தால், ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள 1,32,000 குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்; இதுவரையில் 112 குழந்தைகள் உள்பட 271 போ் பசியால் உயிரிழந்திருக்கிறாா்கள்’ என்கிறது அந்த அறிக்கை.

பஞ்சம், பட்டினி என்கிற ஆயுதங்களின் உதவியால் காஸாவில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கிறது இஸ்ரேல் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறது காஸா மனிதாபிமான நிறுவனம். கடந்த மாா்ச் மாதம்முதல் உணவு, மருந்து எதுவுமே நுழைய முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் பாலஸ்தீன அகதிகள் முகமையின்படி, காஸாவுக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த 6,000 நிவாரண வாகனங்கள் எல்லையில் நுழைய அனுமதி வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்களுடன் வந்த 30 கப்பல்களை கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

ஹமாஸ் சரணடைவதாகவோ, பின்வாங்குவதாகவோ இல்லை; அமெரிக்கப் பின்னணியுடன் இஸ்ரேல் ஹமாஸை முற்றிலுமாக அழித்து காஸாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுவரை ஓய்வதாக இல்லை; வளைகுடா நாடுகள் எதுவும் வெளிப்படையாக காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், உதவிக்கரம் நீட்டவும் தயாராக இல்லை; நாம் ஆதரவற்ற அப்பாவி காஸா மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியொன்றும் தெரியவில்லை!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?

தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?

மணிப்பூரில் 3 மாவட்டங்களில் 10 தீவிரவாதிகள் கைது!

ஒரு சவரன் 88 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

SCROLL FOR NEXT