அமெரிக்க அதிபர் டிரம்ப். 
தலையங்கம்

யார் புரிய வைப்பது?

பருவநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது உலக நாடுகளை, குறிப்பாக தெற்குலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதைப் பற்றி...

ஆசிரியர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமர்வு பொது விவாதம் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கியது. அதில் பருவநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது உலக நாடுகளை, குறிப்பாக தெற்குலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பருவநிலை மாற்றக் கணிப்பு என்பது உலகின் மீது இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி என்றும், பருவநிலைக் கொள்கைகளால் ஏற்படும் சுமையை அமெரிக்கா மட்டுமே சுமக்க முடியாது என்றும் ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

"தவறான காரணங்களுக்காகவே பருவநிலை மாற்றம் குறித்த கணிப்புகளை ஐ.நா.வும் மற்றவர்களும் வெளியிட்டுள்ளனர். முட்டாள்தனமான இந்தக் கணிப்புகளைப் பின்பற்றியதால் பல நாடுகளின் செல்வ வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதற்காக தொழிற்சாலைகளை மூட வேண்டியிருந்தது. அதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்' என்பது அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டு. அதிபர் டிரம்ப் இதுபோன்று பேசுவதும் , கருத்துத் தெரிவிப்பதும் முதல்முறையல்ல.

டிரம்ப் முதல் முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் மாநாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2017-இல் அறிவித்தார். அதற்கு அடுத்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபோது, பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றதும், முன்பு போலவே பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2025 ஜனவரியில் அறிவித்தார்.

அத்துடன் நிற்காமல் பருவநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். பருவநிலை மாற்ற சட்டத்துக்கு செலவழிக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டது. பருவநிலை மாற்றத்துக்கு காரணமாகும் நிறுவனங்களைப் பொறுப்புடைமையாக்கும் பைடன் நிர்வாகக் கொள்கை கைவிடப்பட்டது.

அமெரிக்க ஆட்டோ தொழிலைப் பாதுகாப்பதற்காக முந்தைய பைடன் நிர்வாகம் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு மாறுவதற்கான இலக்கை நிர்ணயித்தது. இப்போது டிரம்ப் நிர்வாகம் அதையும் கைவிட்டது. காற்றாலை மின்னுற்பத்திக்கான அனுமதி நிறுத்தப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் தேசிய கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்துக்கான நிதி நிறுத்தப்பட்டது.

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்காக வளர்ந்து வரும் நாடுகளுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதி உதவி நிறுத்தப்பட்டது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவை பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் டிரம்ப் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வருவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். புவி வெப்பமடைதல் என்றால் வெறும் வெப்பம் மட்டும் அதிகரிப்பது என்பதல்ல. பருவம் தவறிய மழை, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அதீத மழை போன்றவை அதிகரித்து வருகின்றன. கோடை வெப்பம் வழக்கத்துக்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்படுவதும், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும் கண்கூடு.

ஆப்பிரிக்க கண்டத்தில் வெள்ளப்பெருக்கும் வெப்ப அலையும் அதிகரித்து வருகின்றன; தெற்கு பிரேசில் வெள்ளத்தில் மிதக்கிறது; அமேசான் காடுகள் தீப்பற்றி எரிகின்றன; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் காணப்படுகிறது.

உலகின் எந்த ஒரு பகுதியும் கடுமையான கோடை அல்லது மழையின் தாக்கத்திலிருந்து தப்பவில்லை. கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடும் கோடை வடதுருவத்தைத் தாக்குகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் அடைமழையால் ஒரு புறம் வெள்ளப்பெருக்கு என்றால்,வேறு சில பகுதிகள் வறட்சியின் பிடியில் தவிக்கின்றன.

உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூன், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகவெடிப்பால் கடந்த செப்.15-ஆம் தேதி விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், நிலச்சரிவுகளால் ஏராளமான சாலைகள், வீடுகள், கடைகள் பலத்த சேதமடைந்தன. இதில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று, ஹிமாசல பிரதேசத்திலும் பலத்த மழை பெய்ததில் நிலச்சரிவு காரணமாக 650 சாலைகள் கடும் சேதமடைந்தன. ஹிமாசலில் கடந்த சில மாதங்களில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகண்ட், ஹிமாசல், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத மழைப் பொழிவு பல்வேறு விதங்களில் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இவை எல்லாம்

பருவநிலை மாற்றத்தின் வெளிப்படையான அறிகுறிகள். இதேபோல, பனிப்பாறைகள் உருகுதல், திடீர் அடைமழைப் பொழிவு, நிலச்சரிவு, கடும் வறட்சி போன்ற பாதிப்புகளை பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன.

உலகின் மொத்த கரியமிலவாயு உமிழ்வில் அமெரிக்காவின் பங்கு 13.49% என்று அந்நாட்டின் தேசிய கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் கரியமில வாயு உமிழும் நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு இதையெல்லாம் யார் புரிய வைப்பது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT