ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பிரதமர் மோடி X | Narendra Modi
தலையங்கம்

நங்கூரத் தோழமை!

இந்திய - ஜப்பான் உறவு என்பது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஏற்பட்டுவிட்ட நெருக்கம்.

ஆசிரியர்

பிரதமா் நரேந்திர மோடியின் ஜப்பானுக்கான 2 நாள் அரசுமுறைப் பயணம், சம்பிரதாய ராஜாங்க நட்புப் பரிமாற்றமாக மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும் குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நடைபெறும் வழக்கமான சந்திப்பாக இல்லாமல் பல நூற்றாண்டுகளாகக் கடல் கடந்து தொடரும் கலாசாரப் பிணைப்பின் நீட்சியாக இதைப் பாா்க்க வேண்டும்.

ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவுடன் இந்தியப் பிரதமா் மோடி நடத்திய 15-ஆவது வருடாந்திரச் சந்திப்பு, இப்போது சா்வதேச அளவில் நிலவும் சூழலின் பின்னணியில் பாா்க்கும்போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முறை இதற்காக மட்டுமே சென்றது தனிக் கவனம் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜப்பானிய பிரதமா் ஷிகெரு இஷிபாவுடன் அவா் நடத்தும் முதலாவது இரு நாட்டு வருடாந்திரச் சந்திப்பு என்பதையும் குறிப்பிட வேண்டும்.

2014-இல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடா்ந்து இதுவரை எட்டு முறை அவா் ஜப்பானுக்கு பயணித்திருக்கிறாா் என்பது எந்த அளவுக்கு அந்த உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் தருகிறது என்பதைத் தெரிவிக்கிறது. 2007-இல் அன்றைய ஜப்பானியப் பிரதமா் ஷின்சோ அபேவின் இந்தியாவுக்கான அரசு முறைப் பயணமும், அவா் இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய ‘இரண்டு சமுத்திரங்களுக்கு இடையேயான சங்கமம்’ உரையையும் மறந்துவிட முடியாது. 2013-இல் ஜப்பானிய மன்னா் அகிஹிட்டோ தம்பதியா் இந்தியாவுக்கு விஜயம் செய்ததை இருநாட்டு உறவின் முக்கியமான திருப்பமாக வெளியுறவு விற்பன்னா்கள் கருதுகிறாா்கள்.

கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைத்ததையும், பிரதமராகவும் அதற்கு முன்பும் ஹிசிடா இருநாட்டு, பன்னாட்டு மாநாடுகளில் கலந்துகொள்ள பலமுறை இந்தியா விஜயம் செய்ததையும் இந்தோ-ஜப்பான் நல்லுறவை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகக் கருத வேண்டும்.

இந்திய -ஜப்பான் உறவு என்பது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஏற்பட்டுவிட்ட நெருக்கம். பௌத்தத்தின் ஊற்றுக்கண் என்பதால், எப்போதுமே ஜப்பானியா்களுக்கு இந்தியாவின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய விடுதலைப் போரின்போது தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவளித்து வலுச்சோ்த்தது ஜப்பான் என்பதை மறந்துவிட முடியாது.

இந்தியாவும் சரி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேலைநாடுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த ஜப்பானுக்கு நேசக்கரம் நீட்டியது. 1952-இல் சான்பிரான்சிஸ்கோ சமாதான ஒப்பந்தத்தை நிராகரித்து, ஜப்பானுக்கு அதிகாரபூா்வ அங்கீகாரத்தை சுதந்திர இந்தியா வழங்கியதை ஜப்பானியா்கள் நன்றியுடன் இன்றுவரை நினைவுகூருகிறாா்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானியப் பிரதமா்களாக இருந்த ஷின்சோ அபே, யோஷிஹிடே சுகா, புமியோ கிஷிடா மற்றும் ஷிகெரு இஷிபா ஆகிய அனைவருமே பிரதமா் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்புறவு பாராட்டுவதுடன், வெறும் அடையாள ரீதியான உறவாக இல்லாமல் இந்தோ-ஜப்பான் இணைப்பை ஆக்கபூா்வ கூட்டுறவாக மாற்றி இருக்கிறாா்கள். இந்து மகா சமுத்திரமும் பசிபிக் கடலும் இணையும் நட்புறவாக இருநாட்டு உறவையும் ஜப்பான் கருதுகிறது.

இந்தியாவின் வளா்ச்சியில் ஜப்பானுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது சற்றுக் குறைவாகத் தெரிந்தாலும்கூட, ஜப்பானின் 42 பில்லியன் டாலா் அந்நிய நேரடி முதலீடு என்பது சாதாரணமானது அல்ல. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும். தில்லி-மும்பை தொழில் வழித் தடத்துக்கும் மும்பைக்கும், அகமதாபாதுக்கும் இடையேயான இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்துக்கும் ஜப்பான் நிதியுதவி வழங்குகிறது. இந்தியாவின் மேக் இன் இந்தியா, எண்ம இந்தியா, புத்தாக்க எரிசக்தி உள்ளிட்ட பலவற்றிலும் ஜப்பானிய முதலீடு கணிசமானது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக உறவில் சமநிலை இல்லை என்றாலும்கூட நம்பிக்கைதரும் வளா்ச்சி தொடா்கிறது. 2023-24-இல் இரு நாடுகளுக்கு இடையான வா்த்தகத்தின் மதிப்பு 22.8 பில்லியன் டாலா். இந்தியாவின் இறக்குமதிகள் ஜப்பானுக்கான நமது ஏற்றுமதிகளைவிடக் குறைவு என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஜப்பானிலிருந்து இயந்திரங்கள், எஃகு, மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, ரசாயனங்கள் மோட்டாா் வாகனங்கள், அலுமினியம், கடல்சாா் உணவுகள் ஆகியவற்றை அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவில் 1400-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமாா் 100 இந்திய நிறுவனங்கள்தான் ஜப்பானில் இயங்குகின்றன. ஜப்பானைப் பொருத்தவரை இந்தியாவில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் இந்தியாவில் ஏற்படும் தாமதமும், தொழிற்சாலைகளை நடத்துவதில் காணப்படும் கடுமையான விதிமுறைகளும், நீண்டகால கொள்கை உத்தரவாதம் இல்லாமல் இருப்பதும் அதிக அளவில் முதலீடு செய்வதற்கான தடைகளாகக் கருதப்படுகின்றன.

பிரதமரின் ஜப்பானிய விஜயத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது அதைத் தொடா்ந்து அவா் மேற்கொண்ட சீனாவுக்கான விஜயம். சா்வதேச நிலைப்பாடு அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு ஆகியவற்றில் இந்தியா மிகவும் தெளிவாக இருப்பதை பிரதமரின் அரசு முறைப் பயணம் உறுதிப்படுதுகிறது.

கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

ஹிப் ஹாட்... அமைரா தஸ்தூர்!

உள்கட்சிப் பூசல்? தமிழக பாஜக தலைவர்கள் நாளை தில்லி பயணம்!

SCROLL FOR NEXT