மணிப்பூர் மாநிலத்துக்கு இன்னும் ஏன் செல்லாமல் தவிர்க்கிறார் என்கிற கேள்விக்கு விடையளிக்கும் விதத்தில் அமைந்தது பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வார மணிப்பூர் பயணம். கலவர பூமியாக இருந்த அந்த எல்லையோர மாநிலத்துக்குச் செல்லாமல் பிரதமர் தவிர்த்ததற்கு நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத ஏதாவது காரணம் இருந்திருக்கலாம்; நமக்குத் தெரியாது.
குகி பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் சுராசந்த்பூரிலும், மைதேயி சமூகத்தினர் அதிகம் வாழும் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும் பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இரண்டு தரப்பினர் இடையில் தனக்கு எந்தவித பாரபட்சமோ, வேறுபாடோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. இரண்டு இடங்களிலும் நிவாரண முகாம்களுக்கு விஜயம் செய்து, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது, காயம்பட்ட நெஞ்சங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுராசந்த்பூரில் ரூ.7,300 கோடியில் 14 வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களும், இம்பாலில் ரூ.1,200 கோடிக்கான 17 திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் ஆட்சியில் ஓரளவுக்கு அமைதியை ஏற்படுத்திய பிறகு, பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதேகூட தீர்வுக்கான தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
2023 மே மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினரான மைதேயிகள் தங்களைப் பட்டியல் இனத்தில் இணைக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை மணிப்பூர் உயர்நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது.
தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வன்முறை சற்று அடங்கியது. அவ்வப்போது 'பஃபர் ஜோன்' எனப்படும் பொதுப் பகுதியில் கைகலப்பும், தாக்குதலும் நடந்தாலும் அமைதி நிலைநாட்டப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் ஜிர்பாம் மாவட்டத்திலுள்ள நிவாரண முகாமில் இருந்து சில பெண்களும், குழந்தைகளும் கடத்திச் செல்லப்பட்டு, அவர்களில் சிலருடைய உடல்கள் ஆற்றில் மிதந்தபோது, மீண்டும் கலவரம் காட்டுத்தீயாகப் பரவியது.
இம்பால் பள்ளத்தாக்கும் அதைச் சுற்றிலும் மலைகளும் கொண்ட பகுதி மணிப்பூர். பள்ளத்தாக்கில் மைதேயி இனத்தவரும், சுற்றிலும் உள்ள மலைப் பகுதிகளில் குகி ஜோரோ உள்ளிட்ட ஆதிவாசியினரும் வசிக்கின்றனர். மாநிலத்தில் 10% மட்டுமே உள்ள சமவெளிப் பகுதி என்றாலும், அந்த மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 65% எண்ணிக்கையுள்ள மைதேயி இனத்தவர்கள் அங்கே வசிக்கிறார்கள். ஏனைய 90% மலைப் பகுதிகளில் ஆதிவாசிகளான 35% குகி ஜோரோ சமூகத்தினர் வசிக்கிறார்கள்.
மக்களாட்சி என்பது எண்ணிக்கை அடிப்படையிலானது என்பதால் அதிகாரத்திலும், உயர் அரசுப் பதவிகளிலும் பெரும்பான்மை மைதேயியினர்தான் இருக்கிறார்கள். குகி உள்ளிட்ட ஆதிவாசிகளில் பெரும்பாலானோர் மதமாற்றம் காரணமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள். அது மட்டுமல்லாமல், மியான்மர் எல்லையை ஒட்டிய மாநிலம் என்பதால் சர்வ சாதாரணமாக எல்லை கடந்து பயணிப்பதும், தங்களது உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதும் தடையின்றித் தொடர்கிறது.
மணிப்பூர் மலைப் பகுதியிலும், அதனுடன் இணைந்த மியான்மர் மலைப் பகுதியிலும் கஞ்சா உள்ளிட்டவை பயிரிடப்படுவதும், அவை கடத்தப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கின்றன. மத்திய அரசு எல்லையில் கட்டுப்பாடுகளை விதித்துப் பாதுகாப்பை அதிகரிக்க முற்பட்டதும்கூட கலவரம் தொடங்குவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கும் குகி உள்ளிட்ட ஆதிவாசி சமூக அமைப்புகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அமைதி தொடர வேண்டும் என்பதும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு மணிப்பூரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்றும் முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியை யூனியன் பிரதேசமாகவோ அல்லது தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய பகுதியாகவோ அறிவிக்க வேண்டும் என்பதுதான் குகி ஜோரோ இனத்தவரின் கோரிக்கை.
அவர்களது கோரிக்கையை மைதேயிகள் ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். சுராசந்த்பூரில் பிரதமரைச் சந்தித்த ஆதிவாசிக் குழுக்கள், தனி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசக் கோரிக்கையை முன்வைத்தனர். மணிப்பூர் சட்டப் பேரவையின் உறுப்பினர்களாக உள்ள 10 குகி ஜோரோ பிரிவினரில் ஏழு பேர் பாஜகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதும்கூட குகிக்கள் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு வேலைக்காகவோ, கல்விக்காகவோ, மருத்துவத்துக்காகவோ போவதற்குப் பயப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டும்கூட போக்குவரத்து முழுமையாக நடைபெறுவதில்லை.
இதுவரையில் 270-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 60,000 பேர் வீடுகளை இழந்து மணிப்பூரின் நிவாரண முகாம்களில் இரண்டரை ஆண்டுகளாகத் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்ட பிறகு ஓரளவுக்கு அமைதி திரும்பி இருந்தது. ஆனால், நிரந்தர அமைதி திரும்பிவிட்டதாகக் கூறிவிட முடியவில்லை. அவ்வப்போது சிறிய அளவில் கலவரங்கள் வெடிக்கின்றன.
பிரதமரின் விஜயம் புண்ணுக்குத் தடவப்பட்டிருக்கும் மருந்து; காயம் ஆற நாளாகலாம்; தீர்வு எட்டப்படும் வரை அமைதி குலையாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.