மறுதேர்வு தீர்வாகாது!
நீட் தேர்வை சிறந்த முறையில் எழுதியுள்ள மாணவர்கள் பலர் மறு தேர்வில் அதேபோன்று சிறப்பாக எழுத முடியும் என்பது என்ன நிச்சயம்?
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் 22 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இந்தத் தேர்வின் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக வெளியாகி வரும் விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. தேர்வு எழுதிய மாணவர்களும் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளில், நீட் தேர்வின் உண்மையான வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் அப்படியே இடம் பெற்றிருந்ததையடுத்து, வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
இதில் தொடர்புடையதாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், சம்பந்தப்பட்ட மாதிரி வினாத்தாளை தனது நண்பர்களுக்கும், சிகாரில் உள்ள விடுதி உரிமையாளர் ஒருவருக்கும் பகிர்ந்துள்ளார். விடுதி உரிமையாளர், தனது விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவர்களுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்குப் பரவியுள்ளது.
இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கர்நார், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மகாராஷ்டிரத்தின் அஹில்யா நகரில் தனஞ்சய் லோகண்டா, புணேயில் மணிஷா வாக்மரே என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் பலர் கைதாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்விலும் வினாத்தாள் கசிவு சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நீண்ட ஆய்வு மேற்கொண்டு நீட் தேர்வை எந்த முறைகேடும் இன்றி நடத்துவதற்காக 101 பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு வழங்கியது. ஆனால், அதில் எந்த முக்கியமான பரிந்துரையையும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அமல்படுத்தவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கு பேனா- காகித முறைக்குப் பதிலாக கணினி வழியில் தேர்வுகளை நடத்துதல்; கணினிவழி தேர்வு சாத்தியமில்லாத இடங்களில் எண்ம (டிஜிட்டல்) முறையில் வினாத்தாள்களை அனுப்பி, தேர்வு மையங்களில் அச்சிட்டு வழங்குதல்; நீட் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் என்ற
முறையில் வழங்காமல், என்டிஏவின் சொந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம்; நீட் தேர்வை ஒரு மாணவர் எத்தனை முறை எழுதுவது என்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வருதல் போன்றவை ராதாகிருஷ்ணன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்.
இந்தப் பரிந்துரைகளில் ஒன்றைக்கூட என்டிஏ நிறைவேற்றவில்லை என்பதிலிருந்தே அந்த அமைப்பின் அலட்சியமான செயல்பாட்டையும், மாணவர்கள் மீதான அக்கறையின்மையையும் புரிந்துகொள்ள முடியும். நீட் வினாத்தாள் கசிவை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் எனக் கூறியுள்ள
அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு, என்டிஏவுக்குப் பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.நிகழாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்டிஏ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் மொத்த நம்பிக்கையையும் உருக்குலைப்பதாக உள்ளது. அதனால், நீட் தேர்வை நடத்துவதற்கு என்டிஏவுக்குப் பதிலாக மேலும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தும் யோசனை நியாயமானது.
நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படாது, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமும் திரும்ப அளிக்கப்படும் என என்டிஏ தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார். இதெல்லாம் மாணவர்களின் மன உளைச்சலுக்கு மருந்தாகாது. இந்த முறை நீட் தேர்வை சிறந்த முறையில் எழுதியுள்ள மாணவர்கள் பலர் மறு தேர்வில் அதேபோன்று சிறப்பாக எழுத முடியும் என்பது என்ன நிச்சயம்?பல மாத கடும் உழைப்பு, யாரோ செய்யும் மோசடியால் சிதைந்து போவது மிகப் பெரிய அநீதி. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வெளியானதையடுத்து, அடுத்த ஆண்டு முதல் கணினிவழியில் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கிறார். இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.