கல்வி

3 பொதுத் தேர்வுகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்

DIN

பத்தாம் வகுப்பில் இருந்து மூன்று பொதுத்தேர்வுகளுடன் அகில இந்திய நுழைவுத் தேர்வையும் சந்திக்கும்போது, மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவர் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 1 வகுப்புக்கு இனி பொதுத் தேர்வு என பள்ளிக் கல்வித் துறை ஓர் அரசாணையைத் திடீரென வெளியிட்டுள்ளது.
நேர்மையான முயற்சி இல்லை: கல்வித் தரம் குறைவதற்கும், அகில இந்திய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் தயங்குவதற்கும், பிளஸ் 1 பாடத் திட்டங்களைக் கல்வி நிறுவனங்கள் உரிய முறையில் கற்றுக் கொடுப்பதில்லை என்பது மட்டுமே காரணம் என்பதுபோல சித்திரிக்கப்படுகிறது. இது கல்வித் தரத்தை உயர்த்தும் ஓர் அரசின் நேர்மையான முயற்சி இல்லை.
அதிமுக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கையில் முதல் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழகக் கல்விக்கு முக்கியம் என்று கூறியிருப்பதை வசதியாக மறந்துவிட்டனர்.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்புகளிலும் தொடர்ந்து மாணவர்கள் பொதுத் தேர்வைச் சந்திக்க வேண்டிய கட்டாயம், பிளஸ் 2 வகுப்பு முடித்ததும் அகில இந்தியத் தேர்வுகளுக்குப் போட்டியிட வேண்டிய சூழல் எல்லாம் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும்.
கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கையிலேயே மாணவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடி பற்றி விவாதிக்கப்பட்டு மேல்நிலைக் கல்வி இரண்டு ஆண்டுகளாக வைக்கப்பட்டது.
எதிர்ப்பது ஏன்?: மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தால், அதை வரவேற்க திமுக ஒருபோதும் தயங்காது.
ஆனால், மாணவர்கள், பெற்றோர்களின் சிரமங்களை உணராமலும், கோத்தாரி கல்விக் குழுவே கவலைப்பட்ட பொதுத் தேர்வு பற்றியும் ஆலோசிக்காமல் ஒரு முடிவை எடுக்கும்போது அதை எதிர்க்க வேண்டியுள்ளது.
விவேகமான திட்டங்கள் தேவை: எனவே, கிரேடு முறை, சீருடை மாற்றம், பிளஸ் 1-இல் பொதுத் தேர்வு என்ற விளம்பர நடவடிக்கைகளை எடுப்பதைக் காட்டிலும், முதல் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியின் தரத்தையும் உயர்த்தத் தேவையான பாடத்திட்டங்கள், கல்வி பயிற்றுவிக்கும் முறைகள், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமனம் போன்ற விவேகமான திட்டங்களை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்.
பள்ளிகளின் தரத்தைப் படிப்படியாக தேசிய அளவிலான கல்வித் தரத்துக்கு உயர்த்துவதற்கு என்ன வழி என்பதை சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து சீர்திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT