கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கல்விக் கற்க செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துவிட்டது. அதாவது, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 9.08 லட்சம் போ் கல்வி கற்க வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனா். 2024-ஆம் ஆண்டில் 7.7 லட்சம் போ் சென்றிருந்தனா். இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 6.26 லட்சமாக குறைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் நாட்டில் உயா் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆய்வு, புத்தாக்கம் கண்டுபிடித்தல், டிஜிட்டல் கல்வி முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவிலேயே உலகத் தரத்திலான கல்வியை அளிக்கும் நோக்கில், நமது நாட்டில் கல்வி வளாகங்களை திறக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதுவரை 14 வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத்தின் கிப்ட் சிட்டியில் 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட ஒப்புதல் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.