முகப்பு
இணையம் ஸ்பெஷல்

2017-இல் புறப்பட்ட விமானம் 2016-ஆம் ஆண்டில் தரையிறங்கியதா? எங்கே இந்த விநோதம்?

2017ஆம் ஆண்டு புறப்பட்ட விமானம் 2016 ஆம் ஆண்டில் தரையிறங்கியது பற்றிய விவரம்..

Updated On : 24 மார்ச் 2026, 12:25 pm IST
விமானம் - பிரதி படம் - File photo
பகிர்:

டைம் டிராவல் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம், ஆனால், நிஜத்தில் 2017ஆம் ஆண்டு புறப்பட்ட ஒரு விமானம், 2016ஆம் ஆண்டு தரையிறங்கியிருக்கிறது. இந்த விந்தை பற்றிய ஒரு தகவல்.

பொதுவாகவே, விமானப் பயணம் என்பதே பல விந்தைகளும் ஆச்சரியங்களையும் கொடுக்கும். வாரத்தில் செவ்வாயன்று புறப்பட்டு ஒருநாள் முழுக்க பயணம் செய்து அதே செவ்வாயன்று அடுத்த நாட்டில் இறங்குவது, அல்லது ஒரு நாளைக் கடந்து இறங்குவது, இரவில் புறப்பட்டு, அடுத்த நாள் இரவில் அங்குச் சென்றடைவது, இதனால் ஒரு நாள் முழுக்க இரவிலேயே கடந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுவது எல்லாம் வழக்கமானதுதான்.

இதனால்தான், விமானத்தில் பயணித்து வந்தவர்கள், பகல், இரவுக்கு ஏற்ப நேரத்தை வழக்கமாக்கிக் கொள்ள ஒரு சில நாள்கள் ஆகிறது.

Advertisement

அந்த விந்தைகளுக்கு எல்லாம் விந்தையாக..

யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஷாங்காய் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறந்து ஒரு சில மணி நேரத்தில் விமானம் புறப்பட்ட நிலையில், அது சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கும்போது, அந்நாட்டு நேரப்படி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி. அதாவது, சான் பிரான்சிஸ்கோவில் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு விமானத்தில் ஏறியவர்கள், தரையிறங்கியதும் சான் பிரான்சிஸ்கோவில் சென்று மீண்டும் புத்தாண்டைக் கொண்டாடியிருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

உண்மையிலேயே, ஷங்காய் முதல் சான் பிரான்சிஸ்கோ செல்வதுதான் டைம் டிராவல் எனப்படுகிறது. இவ்விரு நகரங்களுக்கும் கிட்டத்தட்ட 23 மணி நேரம் வேறுபாடு இருக்குமாம்.

அதுபோல, புத்தாண்டு பிறப்பன்று நியூ ஸிலாந்து முதல் ஹவாய்க்கு 9 மணி நேர விமானப் பயணத்தை மேற்கொண்டால் அவ்வளவு இனிமையாக இருக்குமாம். ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டம், வான வேடிக்கைகளை காண இயலுமாம்.

ஒரு நாட்டில், புத்தாண்டுக் கொண்டாட்டதைக் காண்பது என்பதே பெரிய விஷயம். அதிலும் வானில் பறந்தபடி பல நாடுகளின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பார்த்தபடி பயணிப்பது என்பது வாழ்நாள் அனுபவமாகவே இருக்கும் என்கிறார்கள் அவ்வாறு பறந்து சென்றவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.