தஞ்சாவூரில் இருந்த ஹவ்லாக் நூலகம்
தஞ்சாவூரில் சிறப்புடன் உருவாக்கப்பட்டு மறைந்து போன ஒரு நூலகம் உண்டெனில், அது 'ஹவ்லாக் நூலகம்'.
தஞ்சாவூரில் சிறப்புடன் உருவாக்கப்பட்டு மறைந்து போன ஒரு நூலகம் உண்டெனில், அது 'ஹவ்லாக் நூலகம்'. இந்த நூலகத்தின் சிறப்புகள் குறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன் கூறியது:
'1872- ஆம் ஆண்டு செப்டம்பர் 14-இல் 'தி டேஞ்சூர் ரீடிங் அண்டு லைப்ரரி' என்ற பெயரில் தஞ்சாவூரில் வாழ்ந்த ஆங்கிலேயர்களான பி.ஆர். கேடல், எச்.ஜி. ஸ்டோக்ஸ், டாக்டர் ஜெ. மார்ஷ், நம்மவர்களான ராஜா சக்காராம் ராவ், சுப்பிரமணிய ஐயர், கிருஷ்ணசாமி சாகேப், அருணாச்சல ஐயர், சீனிவாசராவ் போன்றோர் இணைந்து அமைத்தனர்.
நூலகம் நகராட்சி அலுவலகத்தில் இரு ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர், பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே கட்டப்பட்ட யூனியன் கிளப் கட்டடத்துக்கு 1874-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. புதிய கட்டடத்தை அன்றைய மாவட்ட ஆட்சியர் தாமஸ், மாவட்ட நீதிபதி பர்னல் ஆகியோர் திறந்து வைத்தனர்.செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய டாக்டர் ஜெ. மார்ஷை சிறப்பிக்கும் வகையில், அவர் பெயரில் 1896-ஆம் ஆண்டில் 'மார்ஷ் ஹால்' என்ற பெயரில் யூனியன் கிளப்பில் மேல் தளம் கட்டப்பட்டது. இன்றும் கூட மார்ஷின் உருவப் படம் அங்குள்ளது.
Advertisement
Advertisement
'ஹவ்லாக் லைப்ரரி' என அழைக்கப்பட்ட இந்த நூலகத்தை தஞ்சாவூர் யூனியன் கிளப் நிர்வாகம் செய்து வந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு ரூபாய் செலுத்துதல் என்றும், மாதம் 50 பைசா கட்டணமாகச் செலுத்துதல் என்றும் இரு வகை உறுப்பினர் முறை இருந்தது.
1902- ஆம் ஆண்டில் ரூ. 1,060 முதலீட்டில் இந்நூலகம் விரிவுபடுத்தப்பட்டது. இங்கிருந்த நூல்களின் அட்டவணை அச்சிடப்பட்டு, சிறு நூலாக 1919- ஆம் ஆண்டு வெளி வந்தது. அன்றைய மதிப்பில் இந்த அட்டவணையின் விலை ஒரு அணா. அட்டவணையை தஞ்சாவூரில் இருந்த 'தி லாலி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ்' என்ற அச்சகம் அச்சிட்டது. 1,084 அரிய நூல்கள் இருந்தன.
அச்சகங்களின் வரலாறு:
இந்த எலக்ட்ரிக் அச்சகத்திலிருந்து பெறப்பட்ட மின்சாரத்தைக் கொண்டே அன்றைய தஞ்சாவூர் ஆட்சியருக்கு மின் விசிறி ஒன்றை இயக்க மின்சாரம் வழங்கப்பட்டது. இன்றைய பனகல் கட்டடம்தான் அன்றைய மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்டது. ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள லாலி ஹாலில்தான் அன்றைய அச்சகம் இருந்தது.
1813-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட லூத்தரன் மிஷன் அச்சகமும், சென்னையில் எஸ்.பி.சி.கே. அச்சகமும் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அச்சகங்களாகும். இந்தியர்கள் அச்சகம் நடத்தக் கூடாது என்ற சட்டம் 1835-ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது.
அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு 'கர்ணாமிருத சாகரம்' என்ற ஒப்பற்ற நூலைப் படைத்த ஆபிரகாம் பண்டிதரால் உருவாக்கப்பட்ட கருணாநிதி வைத்திய சாலை கூடத்தில்தான் 'தி லாலி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ்' செயல்பட்டது.
இந்த நூலகத்தைப் பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டபோது, அந்த நூல்களை தமிழறிஞர் பொ. வேல்சாமி சில காலம் பராமரித்து வந்தார். பின்னர், அந்நூல்கள் தற்போது சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோஜா முத்தையா நூலகத்துக்கு அவரால் ஒப்படைக்கப்பட்டது' என்கிறார் மணி. மாறன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.