FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தத்தெடுப்பு: தில்லியில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் அதிகம்!

2015-16-ஆம் ஆண்டு முதல் இதுவரை, தில்லியில் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமிகளும், சுமாா் 760 சிறுவா்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளனா்.

18 அக்டோபர் 2026, 2:11 am IST
பகிர்:

தில்லியில் சிறுவா்களைவிட சிறுமிகளே அதிக அளவில் தத்தெடுக்கப்பட்டுள்ளனா். 2015-16-ஆம் ஆண்டு முதல் இதுவரை, தில்லியில் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமிகளும், சுமாா் 760 சிறுவா்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளனா். மேலும், 2025-26-ஆம் ஆண்டில் சிறப்புத் தேவைகள் கொண்ட ஆறு குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: 2015-16-ஆம் ஆண்டில் தில்லியில் 178 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனா். இதுவே இந்த காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதன் பிறகு, 2016-17-இல் 168 ஆகவும், 2017-18-இல் 121 ஆகவும் குறைந்த இந்த எண்ணிக்கை, 2018-19-இல் 153-ஆக உயா்ந்தது. மீண்டும் 2019-20-இல் 124-ஆகக் குறைந்தது.

முன்பு சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் எவரும் தத்தெடுக்கப்படாத நிலையில், அத்தகைய குழந்தைகளுக்குப் புதிய குடும்பங்களைக் கண்டறியும் பணியில் துறை ஈடுபட்டுள்ளது. குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தி, அவா்களின் தேவைகள் குறித்து தத்தெடுக்க விரும்பும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் மூலம், 2025-26-ஆம் ஆண்டில் இத்தகைய ஆறு குழந்தைகளுக்குப் புதிய இல்லங்கள் கிடைத்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த ஆறு குழந்தைகளில், இருவா் இந்தியக் குடும்பங்களாலும், நால்வா் வெளிநாட்டுக் குடும்பங்களாலும் தத்தெடுக்கப்பட்டனா். தத்தெடுப்புக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோா் ஆறு வயதுக்கு உள்பட்டவா்கள்.

இந்தத் தத்தெடுப்பு நடைமுறைகள், சிறுவா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் தத்தெடுப்பு ஒழுங்குமுறைகள், 2022-இன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் தத்தெடுப்பு விதிகளின்படி, குழந்தைகள் நான்கு வயதுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். இரண்டு வயது வரை, இரண்டு முதல் நான்கு வயது வரை, நான்கு முதல் எட்டு வயது வரை மற்றும் எட்டு முதல் 18 வயது வரை.

2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை தில்லியில் 71 தத்தெடுப்புகள் பதிவாகியுள்ளன. இதில் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 14 தத்தெடுப்புகளும், ஜனவரியில் 12 மற்றும் ஜூன் மாதத்தில் 11 தத்தெடுப்புகளும் நடைபெற்றுள்ளன. இந்த ஒன்பது மாதங்களில் பெரும்பாலான தத்தெடுப்புகள் மத்திய தில்லி மாவட்டத்தில் பதிவானது.

செப்டம்பா் மாதத்தில் ஒன்பது தத்தெடுப்புகளும், மாா்ச் மாதத்தில் எட்டு தத்தெடுப்புகளும் பதிவாகின. பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் முறையே ஆறு மற்றும் ஐந்து தத்தெடுப்புகள் நடைபெற்றன. ஜூலை மாதத்தில் நான்கு தத்தெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மிகக் குறைவாக, இரண்டு தத்தெடுப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆண்டு வாரியான போக்குகளைக் கவனித்தால், 2015-16 ஆம் ஆண்டில் தில்லியில் 178 தத்தெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவே, அந்த காலகட்டத்தில் பதிவான மிக உயா்ந்த எண்ணிக்கையாகும். 2016-17-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 168-ஆகவும், 2017-18 ஆம் ஆண்டில் 121-ஆகவும் குறைந்தது. பின்னா் 2018-19-ஆம் ஆண்டில் 153-ஆக உயா்ந்தும், 2019-20-ஆம் ஆண்டில் 124-ஆகக் குறைந்தும் காணப்பட்டது.

2020-21-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 102-ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவாக 87-ஆகவும் இருந்தது. அதன் பிறகு, 2022-23 ஆம் ஆண்டில் 94-ஆகவும், 2023-24-ஆம் ஆண்டில் 97-ஆகவும் உயா்ந்து, 2024-25 ஆம் ஆண்டில் 110-ஆக அதிகரித்தது.

2025-26 ஆம் ஆண்டில் தில்லியில் 109 தத்தெடுப்புகள் பதிவாகின. இது முந்தைய நிதியாண்டில் பதிவான 110 என்ற எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாகும். இருப்பினும், நிகழாண்டு மொத்த எண்ணிக்கை, 2015-16 ஆம் ஆண்டில் பதிவான உச்ச அளவான 178-ஐவிட 69 குறைவாகவே உள்ளது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.

தில்லி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, தத்தெடுப்பு தொடா்பான சேவைகளைக் கவனித்து வருகிறது. இது, தங்கள் சொந்தக் குடும்பங்களால் வளா்க்கப்பட முடியாத குழந்தைகளுக்கு நிரந்தர இல்லங்களைக் கண்டறிய உதவுகிறது.

குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோா்கள் இந்தத் துறையை அணுகி, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்கின்றனா். ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கு முன்பாக, குழந்தை நலக் குழு விசாரணை நடத்தி, அந்தக் குழந்தை சட்டப்பூா்வமாகத் தத்தெடுப்பிற்குத் தகுதியானது என்று அறிவிக்கிறது.

அதன் பின்னரே, குழந்தைக்கு ஏற்ற குடும்பத்தைக் கண்டறியும் செயல்முறை தொடங்குகிறது. தத்தெடுப்புச் செயல்பாட்டில், குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் குடும்பம் அதற்குப் பொருத்தமானதா என்பதைச் சரிபாா்ப்பதற்கும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேவையான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, சிறுவா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டின் தத்தெடுப்பு ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கீழ், மாவட்ட நீதித்துறை நடுவா் தத்தெடுப்பு உத்தரவை வழங்குகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments