FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடைபெறாது? தில்லியில் போராட ஒதுக்கப்பட்ட இடங்களாக ராம்லீலா உள்பட 3 மைதானங்கள்- காவல் துறை அறிவிப்பு

தலைநகரின் நிர்வாக மையமான புது தில்லி மாவட்டத்தை அண்மைக்கால போராட்டங்கள் முற்றிலுமாக முடக்கியதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் இனி அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களமாக இருக்காது என்று தில்லி காவல் துறை திங்கள்கிழமை அறிவித்தது

13 அக்டோபர் 2026, 4:22 am IST
ஜந்தர் மந்தர். - ANI
பகிர்:

தலைநகரின் நிர்வாக மையமான புது தில்லி மாவட்டத்தை அண்மைக்கால போராட்டங்கள் முற்றிலுமாக முடக்கியதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் இனி அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களமாக இருக்காது என்று தில்லி காவல் துறை திங்கள்கிழமை அறிவித்தது. அதற்கு மாற்றாக, புது தில்லி மாவட்டத்துக்கு வெளியே 3 புதிய இடங்களை போராட்டங்களுக்கான புதிய இடங்களாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நகர காவல் துறை ஆணையர் அனுராக் குமார் அக்.11'ஆம் தேதியிட்டு வெளியிட்ட புதிய உத்தரவின்படி, ராம்லீலா மைதானம் (மத்திய மாவட்டம்), புராரி மைதானம் (வடக்கு மாவட்டம்) மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகியவை புதிய போராட்டக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தரிலிருந்து ராம்லீலா மைதானம் 4 கி.மீ தொலைவிலும், கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் 12 முதல் 13 கி.மீ தொலைவிலும், புராரி மைதானம் சுமார் 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. மக்கள் போராட்டம் நடத்துவதற்கான மாற்று இடங்களை ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இந்த 3 புதிய இடங்களில் போராட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகள் விரைவில் தனியாக வெளியிடப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம், முக்கிய அமைச்சகங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை போன்ற மிக முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ள புது தில்லி பகுதியில் தொடர் போராட்டங்களால் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட களம் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள காவல் துறையின் நடவடிக்கை பேசுபொருளாகியுள்ளது.

அதிக செலவினம்: புது தில்லியில் புதிதாக அறிவிக்கப்பட்ட 3 போராட்டக் களங்களில் ஒன்றான ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவது மிகவும் கடினமானதாகவும், அதிக செலவு மிக்கதாகவும் மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இந்த மைதானத்தில் எந்தத் தேதியும் காலியாக இல்லை. மேலும், ஒரு நாள் முன்பதிவுக்கான கட்டணம் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக உயரக் கூடும்.

ஐம்பதாயிரம் பேர் அமரக் கூடிய 12 ஏக்கர் அளவிலான ராம்லீலா மைதானத்தை இந்த ஆண்டு டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே தற்போது முன்பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய அளவில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்காக மைதானத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போதைக்கு இலவசமாக உள்ளது. அதிலும் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

தில்லி மாநகராட்சியின் தோட்டக்கலைத் துறை மூலமாக இந்த மைதானம் முன்பதிவு செய்யப்படுகிறது. மாநகராட்சி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு தில்லி காவல் துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments