FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எச்சரிக்கையைப் புறந்தள்ளலாகாது!

வறட்சி, மழை குறைவு, பெருவெள்ளம் எனப் பல்வேறு விதமாக பாதிப்புகள் தொடர்வதால் சிடிஆர்ஐ அமைப்பின் எச்சரிக்கையைப் புறந்தள்ளலாகாது.

50 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் பெய்யக்கூடிய அதீத மழையால் ரூ. 6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை வியாழக்கிழமை (அக்.15) தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்பு கூட்டமைப்பு (சிடிஆர்ஐ - கோயலிஷன் ஃபார் டிசாஸ்டர் ரெசிலியென்ட் இன்ஃப்ராஸ்டி ரக்சர்) என்ற அமைப்பு அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2019-இல் நடைபெற்ற ஐ.நா. காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. ஐ.நா. பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் ஆதரவு அளித்துவரும் இந்த அமைப்பில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளும், பல்வேறு

சர்வதேச அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. பேரிடர் தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்வதுடன், அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த அமைப்பு தமிழகத்தில் அண்மைக்கால மழைப் பதிவுகள், பாதிப்புகள், இப்போதைய காலநிலை போன்றவற்றை ஆய்வு செய்து ஓர் அறிக்கையை கடந்த திங்கள்கிழமை (அக். 12) வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளில் ஒரு முறை நிகழக்கூடியது என்ற அளவில், இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு நாளில் பெய்யக்கூடிய மழையானது, கடந்த 2015-ஆம் ஆண்டு பெருவெள்ளம் சென்னைக்கு ஏற்படுத்திய பாதிப்பை போன்று ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2004 சுனாமியால் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர்; ரூ.380.64 கோடிக்கு சாலைகளும் பாலங்களும் சேதமடைந்தன. கடந்த 2011-இல் வீசிய "தானே' புயலால் 45,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன; ரூ. 2,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. 2015 பெருவெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1.16 லட்சம் வீடுகளும் 500 கி.மீ. தொலைவுக்கு மின்சார கட்டமைப்பும் சேதமடைந்தன. ரூ.14,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

2018 கஜா புயலால் 3.3 லட்சம் மின் கம்பங்களும் 1,655 மின்மாற்றிகளும் சேதமடைந்தன. ரூ.3,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில், இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு நாளில் பெய்யக் கூடிய மழையால் ரூ. 6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று சிடிஆர்ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

காலநிலை மாற்றம் காரணமாக, சென்னை உள்பட பல நகரங்களில் கத்திரி வெயில் போன்று அக்டோபரிலும் வெயில் சுட்டெரித்தது. குளிர்ச்சிக்குப் புகழ்பெற்ற உதகையில்கூட வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவில் இல்லை. நாடு முழுவதும் 12.6 சதவீத பற்றாக்குறையுடன் தென்மேற்குப் பருவமழைக் காலம் நிறைவடைந்துள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் குறைந்தபட்ச மழை பதிவாகும். தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட 24.3 சதவீதம் குறைவாக தென்மேற்குப் பருவ மழை பெய்துள்ளது. இது கடந்த 1901-ஆம் ஆண்டு முதலான காலகட்டத்தில் பதிவான மழை அளவுகளில் 4-ஆவது குறைந்தபட்சமாகும்.

கடுமையான வெப்பம், வறட்சி ஒருபுறம் என்றால் சில பகுதிகளில் பெய்யும் அதீத மழையால் ஏற்படும் சேதங்கள் அளவிட முடியாதவை. நமது அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆக. 26-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். 5,500-க்கும் மேற்பட்டோர் நிலை என்னவென்று

தெரியவில்லை. தாய்லாந்து, ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, பிரேஸில் போன்ற சில நாடுகள் முன்னெப்போதும் இல்லாத மழை வெள்ளத்தை இந்த ஆண்டு சந்தித்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் கடந்த செப். 26-ஆம் தேதி ஒரே நாளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். பாண்டா பகுதியில் 227 மி.மீ., ஃபதேஹ்கரில் 224 மி.மீ., பஹ்ராய்ச்சில் 217 மி.மீ., ஹர்தோயில் 214 மி.மீ., ஃபரூக்காபாத், ஹமிர்பூரில் 210 மீ.மீ., கன்னெüஜில் 204 மி.மீ. என மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தைவிட 130 மடங்கிலிருந்து 200 மடங்கு அதிகமான மழைப் பொழிவாகும்.

இப்போதே, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில், சென்னையில் ரூ.4,000 கோடிக்கு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியபோதும் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது நினைவில் கொள்ளத்தக்கது.

வறட்சி, மழை குறைவு, பெருவெள்ளம் எனப் பல்வேறு விதமாக பாதிப்புகள் தொடர்வதால் சிடிஆர்ஐ அமைப்பின் எச்சரிக்கையைப் புறந்தள்ளலாகாது. கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று தற்போதும் நிகழாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments