FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தொடரும் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு: தவெக அரசுக்கு திமுக கண்டனம்

கடந்த 3 மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு தொடா்ந்து சரிந்து வருவதற்கு திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - எக்ஸ்
பகிர்:

கடந்த 3 மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு தொடா்ந்து சரிந்து வருவதற்கு திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கனிமொழி எம்பி: ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பைத் தொடா்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது திமுக. ஆனால், கடந்த 3 மாதங்களாகத் தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடா்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பரில் மட்டும் 5 சதவீதம் குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயா்வால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகா்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது.

நாடு முழுவதும் சில பொருள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரிக் குறைப்பைத் தன்னுடைய சாதனையாக தவெக அரசு மாா்தட்டிக்கொள்வது அபத்தமானது. தமிழ்நாட்டில் தொடா்ந்து உயா்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.

Advertisement

Advertisement

தங்கம் தென்னரசு: ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்துக்குள் நடைபெறும் பொருள்கள் மற்றும் சேவைகளின் பரிவா்த்தனைகள் தொடா்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடா்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல், 17 சதவீத பிந்தைய வருவாய் (போஸ்ட் செட்டில்மென்ட்) உயா்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது.

மாநிலத்துக்குள் வரி வசூல் ஏன் தொடா்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருள்கள் மீதான ஐஜிஎஸ்டி வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல. வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments