FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்: நடிகர் சிவகுமார்

கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிவகுமார் பேச்சு...

12 அக்டோபர் 2026, 11:49 am IST
பகிர்:

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது.

1979 ஆம் ஆண்டு திரைக்கலைஞர் சிவகுமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் நடிகர் சிவகுமாரின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு முதல் 'அகரம் ஃபவுண்டேஷன்' இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. 

இன்று நடைபெற்ற 47-வது ஆண்டு விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

Advertisement

Advertisement

ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது:

கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை:

பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன : 

1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:

திண்டிவனம் ரோசனை பகுதியில் 'தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை' என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி 'தாய் தமிழ் தொடக்கப்பள்ளி'. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 - 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 

 2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:

ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு 'சுடர்'. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜனிடம் வழங்கப்பட்டது. 

 3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த 'வாழை' அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. 

விழாவில் மாணவர்களைப் பாராட்டி, பேசிய திரைக்கலைஞர் சிவகுமார், ”மாணவ - மாணவிகளுக்கு நான் சொல்கிற ஒரே ஒரு விஷயம், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை. நீங்கள் ஏழைப் பெற்றோருக்கு பிறந்தீர்களா, பெற்றோர் இழந்த குழந்தைகளா, கிராமத்தில் பிறந்தீர்களா — எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன, மிகச் சின்ன உதாரணம் நான். 

நாங்கள் படித்த காலத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று கிடையாது, பள்ளிக்கூட கட்டடம் கிடையாது, வாத்தியார்கள் பெரிதாகக் கிடையாது. எல்லாம் தனியார் பள்ளிக்கூடம், தனியார் வாத்தியார். 'கலங்கள்' என்பது எங்க கிராமத்துல இருந்து சரியாக நான்கு ஃபர்லாங் தூரத்தில் இருக்கிறது. அது, ஜி.டி. நாயுடு பிறந்த ஊரு. அந்த ஊருக்கு நடுவில் ஒரு மொட்டை மண்டபம், 30 அடிக்கு 60 அடி நீளத்துல ஒரு மண்டபம். அந்த மண்டபத்துல தரையெல்லாம் தூசி படிந்திருக்கும். நாங்கள் ஊரில் இருந்து வரும்போது வழியில மாடு சாணம் போட்டிருக்கும். அந்த சாணத்தை எல்லாம் எடுத்து வந்து, கூடையில் போட்டு, ஒரு சட்டிக்குள்ள போட்டு நல்லா கரைச்சு, அந்த சாணத்தைத் தரையில மெழுகி குடுப்போம், இல்லையென்றால் உள்ளே புழுதி பறக்கும். அதை மெழுகி விட்டு, அதில்தான் நான் உட்கார்ந்து படித்தோம். பக்கவாட்டில் யாராவது வேடிக்கை பார்ப்பார்கள் என்று மூங்கில் தட்டி அடித்து, மூணு மூங்கில் தட்டிகளைச் சுற்றிலும் மறைத்திருப்போம்.

எங்கள் வாத்தியார் கல்யாணசுவாமி நாயுடு. அவர் 1940-களிலேயே ஸ்டேட் மேத்ஸ்ல (கணித,) மாநிலத்தில் இரண்டாம் இடம் வாங்கினவர். 1940-கள்ல கணக்கில் மிகப்பெரிய ஆள். அவர் தனியார் பள்ளிக்கூடம் வைத்திருந்தார். ஒன்றாம் வகுப்பிற்கு ரூ. 1, இரண்டாம் வகுப்பிற்கு ரூ. 2 , மூன்றாம் வகுப்பிற்கு ரூ. 3, நான்காம் வகுப்பிற்கு ரூ. 4.. இதுதான் மாதக் கட்டணம். நான் இரண்டாவது வகுப்பிலும் என் அக்கா மூன்றாவதிலும் படித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் படித்த காலத்துல ஒரு சவரன் தங்கம் 12 ரூபாய். அப்போ அக்காவுக்கு 3 ரூபாய், எனக்கு 2 ரூபாய்னா 5 ரூபாய், கிட்டத்தட்ட பாதி சவரன் விலை. நான் பிறந்து 10 மாத குழந்தையா இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டார். காலம் பூரா எங்க அம்மா வெள்ளைச் சேலையிலதான் நான் பார்த்திருக்கிறேன். நம்ம காடு கரையில பாடுபட்டு, ஒரு காய்ஞ்சு போன பூமியை எங்க அப்பா விட்டுட்டு போயிருந்தாரு. அதுல பாடுபட்டுதான் எங்க அம்மா படிக்க வச்சாங்க. அதனால 5 ரூபாய் மாசத்துக்கு செலவு பண்ண முடியாதுனு எங்க அக்காவை மூன்றாம் வகுப்போட நிறுத்திட்டாங்க. 

கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்றார். 

Actor Sivakumar offered advice to students at an event organized by his educational trust.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments