மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 இடங்களில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐஐடி) செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம்- திருச்சி செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) வளாகத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், தற்போது திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதுராப்பட்டியில் 48 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகத்தில் இயங்குகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குநராக உஷா நடேசன், பதிவாளராக டாக்டர் என். ரேணுகா தேவி ஆகியோர் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ப்ளே, திருச்சி ஐஐஐடி-யின் நிர்வாகக் குழுத் தலைவராக 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்.
வழங்கப்படும் படிப்புகள்
திருச்சி ஐஐஐடியில் பிடெக், எம்டெக், பிஹெச்டி (முழுநேரம், பகுதிநேரம்) ஆகிய படிப்புகள் உள்ளன.
4 ஆண்டு படிப்புகளாக...
பிடெக் (கணினி அறிவியல் - பொறியியல்), பிடெக் (மின்னணுவியல் -தகவல் தொடர்பு பொறியியல்)
முதுநிலையில்...
கணினி அறிவியல், கணினி அறிவியல் பொறியியல், விஎல்எஸ்ஐ சிஸ்டம்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் விஎல்எஸ்ஐ டிசைன்
பிஎச்டியில்...
கணினி அறிவியல் பொறியியல் (தரவு பகுப்பாய்வு, இயந்திர கற்றல், ஆழமான கற்றல், ஐஓடி, கிளவுட் கம்ப்யூட்டிங், மருத்துவ பட செயலாக்கம், தொடர்புடைய பகுதிகள்)
மின்னணுவியல் தகவல் தொடர்பியல்
(விஎல்எஸ்ஐ டிசைன், வயர்லெஸ் கம்யூனிகேஷன், மைக்ரோ அண்ட் நானோ எலெக்ட்ரானிக்ஸ், காம்பாக்ட் மாடலிங் அண்ட் சிமுலேஷன், அதனுடன் தொடர்புடைய பகுதிகள்)
இயந்திர பொறியியல்
(சேர்க்கை உற்பத்தி, தூள் உலோகம், ஸ்மார்ட் பொருள்கள், ஆற்றல் சேமிப்பு பொருள்கள்)
அறிவியல் - மனிதநேயம் பிரிவில்
இயற்பியல் (ஆப்டோ எலக்ட்ரானிக் பொருள்கள், சாதனங்கள், ஃபைபர் ஆப்டிக்ஸ், பிளாஸ்மோனிக்ஸ், செமிகண்டக்டர் ஹெட்டோரோ ஸ்ட்ரக்சர்ஸ்)
கணிதம் (திரவ இயக்கவியல்)
பொருளாதாரம்
(சுகாதார பொருளாதாரம், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு, சுகாதாரம், மேம்பாட்டில் உலகளாவிய பிரச்னைகள்)
ஆங்கிலம்
(பயன்பாட்டு மொழியியல், ஆங்கிலத்தில் இந்திய எழுத்து) உள்ளிட்ட பிரிவுகளில் முனைவர் பட்டம் பெறலாம்.
மாணவர் சேர்க்கை
பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை ஜேஇஇ மெயின் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிடெக் பிரிவில் ஆண்டுக்கு 150 மாணவர்களும், எம்டெக் பிரிவில் ஆண்டுக்கு 46 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
சிறப்பு வசதிகள்
இங்கு சேரும் மாணவர்கள், மத்திய அரசின் அனைத்து கல்வி உதவித் தொகைகளையும் பெற முடியும். சர்வதேச இதழ்கள், சர்வதேச மாநாடுகள், தேசிய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட மாணவர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கல்வி பரிமாற்றத்துக்கான வாய்ப்பையும் அளிக்கிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், இன்ஃபோசிஸ் , ராம்கோ சிஸ்டம்ஸ், எல்காட் மற்றும் நவிதாஸ் (டேக் சொல்யூஷன்ஸ்) ஆகியவை ஐஐஐடி-திருச்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
மெய்நிகர் கற்றல் அகாதெமி
ஆன்லைன் கற்பித்தல் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மெய் நிகர் கற்றல் அகாதெமி இங்கு இயங்கி வருகிறது. இந்த அகாதெமியானது ஆன்லைன் மூலம் விரிவுரைகளை வழங்குவது, மாணவர்களுக்கு பொருத்தமான புதுமையான மதிப்பீட்டு முறைகளை உருவாக்குவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு ஜி.சீதாராமன், தலைவர்- மாணவர் சேர்க்கை, ஐஐஐடி- திருச்சி- 620012 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம்: admissions@iiitt.ac.in
-ஆர்.முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.