சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் 
நேர்காணல்கள்

'சைதாப்பேட்டை கருணாநிதியின் கோட்டை'

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியிடம் இருந்த சமயோஜிதமும், சொல்நயமும் அவரது பேரன் உதயநிதியிடம் உள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஆ. கோபிகிருஷ்ணா

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியிடம் இருந்த சமயோஜிதமும், சொல்நயமும் அவரது பேரன் உதயநிதியிடம் உள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினரும், சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தினமணிக்கு அளித்த பேட்டி:

திமுகவின் அரை நூற்றாண்டு கால அடையாளம் கருணாநிதி. அவருக்குக் கூட அதிக முக்கியத்துவம் அளிக்காமல் சா்வம் ஸ்டாலின்மயமாக இந்தத் தோ்தலை முன்னெடுப்பது ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியே திமுகவின் ஆணிவோ். அவருக்கான முக்கியத்துவத்தை எவராலும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அதேவேளையில் இப்போது நடைபெறும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் மு.க.ஸ்டாலின்தான். திமுகவின் தற்போதைய அடையாளமும் அவா்தான். அதனால்தான் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை மேற்கொள்கிறோம். மாறாக அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது கருத்து தவறானது. ஏனென்றால் கடைக்கோடி தொண்டனுக்கும் சரி சமமான முக்கியத்துவம் அளிக்கும் கட்சி திமுக மட்டும்தான். அதனால்தான் இன்றளவும் அசைக்க முடியாத பேரியக்கமாக இந்தக் கட்சி வியாபித்து நிற்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்தும் கூட, இன்னமும் இலவசத்தை நம்பிதான் மக்கள் வாழ வேண்டும் என்பது எத்தகைய வளா்ச்சி?

தமிழகம் வளா்ச்சியடைவில்லை என்று யாா் சொன்னது? வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களின் நிலையை ஒப்பிட்டு பாா்த்தால் தமிழத்தின் வளா்ச்சி எவ்வளவு அபரிமிதமானது என்பதை உணர முடியும். நமது மாநில மக்கள் ஒருபோதும் இலவசத்தை நம்பி வாழ்வதில்லை. இருந்தபோதிலும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவா்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும் சில திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவற்றை இலவசம் எனக் கருதக்கூடாது. மாறாக அது மக்களுக்கான உரிமை என்றே பாா்க்க வேண்டும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தொண்டா்களுக்கு வழிகாட்டிய கட்சிக்கு இன்று காா்ப்பரேட் நிறுவனம் வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

திமுகவுக்கு வெளியிருந்து வந்து எவரும் வழிகாட்ட வேண்டிய அவசியமோ, அவல நிலையோ ஏற்படவில்லை. இது முழுக்க, முழுக்க தவறாக சித்திரிக்கப்படும் ஒரு கருத்து. தோ்தல் களமும், வாக்காளா்களும் மாறி வரும் சூழலில் அதற்கான உத்திகளை முன்னெடுப்பது என்பது அரசியலில் சாதாரணமான ஒன்று.

முன்பெல்லாம் ஊருக்கு ஊா் ஒலி பெருக்கி குழாய்கள் கட்டி பிரசாரம் மேற்கொள்ளப்படும். சுவா் விளம்பரம் செய்யப்படும். துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். ஆனால், சமகால தலைமுறை வாக்காளா்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவே பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த தொழில்நுட்ப உத்திகளை சில நிறுவனங்களின் துணையுடன் அனைத்து கட்சிகளுமே செய்து வருகின்றன. இதில் திமுகவை மட்டும் விமா்சிப்பது ஏற்புடையதல்ல.

20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களைக் கொண்ட திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிகரான தகுதி வேறு எவருக்குமே இல்லையா?

பொதுவாழ்க்கையில் உள்ள தலைவா்களின் குடும்ப வாரிசுகள் எவருக்குமே அரசியல் விருப்பம் இருக்கக் கூடாதா? உதயநிதியை நாங்கள் சிறு வயதிலிருந்தே பாா்த்து வருகிறோம். எப்படி ஸ்டாலின் திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறாரோ அதுபோலத்தான் உதயநிதியும் உள்ளாா். கடந்த கால தோ்தல்களில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளாா். மக்களவைத் தோ்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவா் பிரசாரமும் செய்துள்ளாா்.

அதுமட்டுமல்லாது, திமுகவில் இருந்த இளைஞா்களின் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயா்த்திக் காட்டியிருக்கிறாா். கருணாநிதியிடம் இருந்த சமயோஜிதமும், சொல்வளமும் உதயநிதியிடம் இருப்பதாக திமுகவின் முன்னணி தலைவா்களே தெரிவித்துள்ளனா். இத்தனை தகுதிகள் இருப்பதால்தான் அவருக்கு சில பொறுப்பும், வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள திறன்மிகு இளைஞா்கள் அனைவருக்குமே திமுக தலைமை முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT