ஜி.கிருஷ்ணகுமார்
மயிலாடுதுறை தொகுதி நா.த.க. வேட்பாளர் பி. காளியம்மாள் சிறப்பு பேட்டி:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவர். 2019-ஆம் ஆண்டுமுதல் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் களம் கண்டு 60,515 வாக்குகள் (6.33 சதவீதம்) பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 14,283 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் இவரது வாக்கு சதவீதம் 7.16-ஆக உயர்ந்த நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலில் மீண்டும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் தினமணி நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து...
எளிய குடும்பப் பின்னணி, சமூகப் பணி, இப்போது அரசியல் கட்சியின் வேட்பாளர் - இந்தப் பரிணாமம் எப்படி அமைந்தது?
சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் நான். சுனாமி பேரழிவு காலத்தில் 2005-ஆம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனத்திலும், திருமணத்துக்குப் பின்னர் கடலோர சூழலியல் சார்ந்த நிறு வனத்திலும் பணியாற்றினேன். கஜா புயலின்போது மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சரிவர சென்றடையாதது குறித்து எனக்கு அறிமுகமான ஒருவரிடம் பேசினேன். அவர்தான் என்னைசீமானிடம் அறிமுகப்படுத்தினார். ஒரு வாரத்தில் என்னைத் தொடர்பு கொண்டு கடலோர சூழலியல் பிரச் னைகளைப் பேச அரசியல் பங்கேற்பு அவசியம். எனவே மக்களவை தேர்தலில் போட்டியிடுங்கள் என்றார். அதில் தொடங்கி எனது அரசியல் பிரவேசம்.
திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு குறை வதாகத் தெரியவில்லையே?
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. பல்வேறு கட்சிகள் மற்றும் ஜாதி, மத அமைப்பு களுடன் கூட்டணி வைத்துள்ளதில் இருக்கிறது. பத்து பேர் கூட்டணி சேர்ந்துகொண்டு ஒற்றை ஆளாய் தனித்து நிற்கும் என்னி டம் சண்டையிடுகின்றனர். இதில் யார் பலசாலி, யார் செல்வாக்கு மிகுந்தவர் என்பதை மக்களே தீர்மானிப்பர்.
பலம் வாய்ந்த இரு திராவிட கட்சிகள் மற்றும் பாஜக கூட்டணியை மீறி உங்களால் வெற்றி பெற முடியுமா?
திமுக, அதிமுக, பாஜக ஆகியவை பலம் வாய்ந்த கட்சிகள் அல்ல. பணபலம் மிக்கவை. விசுவாசத்துக்கு வேலை செய்பவர்களுக்கும், பணத்துக்காக வேலை பார்ப்பவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறிக்கொள்ளும் கட்சியில்கூட பணம் இல்லாமல் பரப்பு ரைக்கு யாரும் வரமாட்டார்கள். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளன. அரசியல் மாற்றத்தை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வேலை நாடுபவர்கள் எதிர்நோக் குகின்றனர்.
சுய லாப நோக்கத்தோடு அரசியல் கட்சியினர் செயல்படுவது தொடர்பான புரிதல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை சரியாக கையாளுபவரிடம் வாய்ப்பைக் கொடுங்கள் என முன்னிறுத்தி பணியாற்றுகிறோம்.
நாம் தமிழர் கட்சி தேசிய அரசியல் நீரோட்டத்தைத் தவிர்ப்பது, தமிழர் தனி அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சியா?
தமிழன் தனித்த அடையாளம் உடையவன். உலகுக்கே அறிவைக் கடன் கொடுத்த இனம். உலகின் பல பகுதி களில் மேலாடை குறித்து அறியாத காலத்திலேயே கழிப்பறையைப் பயன்படுத்தியவன் தமிழன். தமிழர் நிலத்தில் உள்ள மக்களே தேசிய இனக்
கூட்டம்தான். அதனால்தான் தமிழ் தேசியம் என்கிறோம். நாம் தமிழர் மக்களவைக்குப் போவது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. இத்தனை ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள என் மண்ணின் பிரச்னைகளைத் தீர்க்கவே.
விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டால் நாம் தமிழர் கட் சிக்கு பின்னடைவா?
நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. நாங்களே புலிகள்தான். இந்த அமைப்பு கட்சியாக மாற்றப்பட்டதற்கான காரணமே உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ் கின்றனரோ அவர்களுக்கான இன விடுதலையையும், நில உரிமையையும் மீட்டுத் தருவதுதான். ஒட்டுமொத்த தமிழின தலைவர் பிரபாகரன் என்பதை மக்கள் ஒருநாள் உணர்வார்கள். விடுதலைப் புலிகள் என்றால் நாம்தமிழர், நாம் தமிழர் என்றால் விடுதலைப் புலிகள் என்பதை அனைவரும் அறிவர்.
நாம் தமிழர் கட்சி தேர்தலில் வென்றால் மத்தியில் யாருக்கு ஆதரவளிக்கும்?
எனக்கான தமிழ் தேசியத்தைக் கட்டமைப்பதற்கு எந்தக் கட்சி ஆதரவு தரும்? எங்கள் நிலத்தில் அழிவுகர திட்டங்கள், கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் வரக்கூடாது, காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். ஜிஎஸ்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இங்கு வசிக் கும் ஈழ மக்களுக்கு குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எல்லாம் எந்தக் கட்சி ஆதரவு தரும்? யாராவது கொலையாளியிடம் கத்தியைக் கொடுத்து தன்னையே குத்தக் கோருவார்களா? அதுபோலத்தான் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு ஆதரவு தருவது.
அரசியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறதா?
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத வகையில் சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட 50 சதவீத வாய்ப்பை வழங்கி பெண்களுக்கு சம உரிமையை வழங்கியிருக்கிறது.
நீங்கள் களம் காணும் தொகுதியில் பொதுவாக மீனவர்களின் வாக்குகள் திராவிடகட்சிகளுக்கு சாதகமாகும் என்பார்கள். அவர்களின் நம்பிக்கையை எப்படி வெல்லப்போகிறீர்கள்?
கடலோடி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இதுவரை கொன்று குவித்துள்ளார்கள். இருந்தபோதிலும் இந்த மக்கள் திராவிட கட்சிகளை நம்பி இருக்கின்றனர். இதற்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு, அரசியல் அங்கீகாரம், அதிகாரம் இவற்றைப் பெறமுடியாத சிறுபான்மைக் கூட்டமாக இவர்களை திராவிடக் கட்சிகள் வைத்திருக்கின்றன. மக்களுக்கான அரசியல் அதிகாரம் கிடைக்கும்வரை இது மாறாது.
பணபலம், அதிகார பலத்துக்கு இடையே எதை நம்பி களத்தில் நிற்கிறீர்கள்?
மக்கள் பலத்தையும், மனபலத்தையும் நம்பியே களத்தில் நிற்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.