பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை நிறுத்த மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக 2,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகர், நேருநகர், சிங்கநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்களான டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் அல்லது பிற வான்வெளி ஊர்திகளைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, விமான நிலையச் சாலை மற்றும் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையப் பகுதிக்குள் தனியார் வாகனங்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி கோவை மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விமான நிலையம், சிட்ரா, கொடிசியா மைதானம் ஆகிய பகுதிகள் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Security arrangements have been intensified for Prime Minister Modi's visit to Coimbatore.