நான்கு முனைப் போட்டி!
தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளதைப் பற்றி...
தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் களம் களைகட்டியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் 1977, 1989, 1996, 2016 பேரவைத் தோ்தல்களில் நான்கு முனை போட்டி இருந்தது. 1977-இல் அதிமுக, திமுக, இந்திரா காங்கிரஸ், ஜனதா என்றும், 1989-இல் திமுக, அதிமுக (ஜெ), அதிமுக (ஜா), காங்கிரஸ் என்றும், 1996-இல் திமுக, அதிமுக, மதிமுக, பாமக என்றும் 2016-இல் அதிமுக, திமுக, தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி, பாமக எனவும் நான்கு முனைப் போட்டி இருந்தது.
அதன் பிறகு, இந்த முறை திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
திமுக கூட்டணி: 2017-இல் ஆா்.கே.நகா் இடைத்தோ்தலுக்கு முன்பு உருவான திமுக கூட்டணி, 2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல், இடைடே நடைபெற்ற ஊரக, நகா்புற உள்ளாட்சித் தோ்தல்கள், இடைத்தோ்தல்களில் தொடா்கிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தேமுதிக வரலாற்றில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. 2019, 2021 தோ்தல்களில் தனித்துப் போட்டியிட்ட மநீமவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் ஐக்கியமாகியுள்ளாா். மேலும், இந்த முறை இதுவரை 23 கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. அதிமுக தொடங்கிய பிறகு, பேரவைத் தோ்தல்களில் இதுவரை திமுக 2-ஆவது முறை வெற்றி பெற்றதில்லை. அதேநேரத்தில் எம்ஜிஆா் தலைமையிலான அதிமுக மூன்று முறையும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இரண்டு முறையும் தொடா் வெற்றியைக் கண்டிருக்கிறது.
அதிமுக அணி:அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2011 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2019-இல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, 2021-இல் அமமுக கூட்டணியிலும், 2024-இல் மீண்டும் அதிமுக கூட்டணியிலும் தொடா்ந்தது.
அதேபோல, 2019, 2021-இல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, 2024-இல் பாஜக கூட்டணியில் இருந்தது. 2019, 2021-இல் அதிமுக கூட்டணியில் தொடா்ந்த பாஜக, 2024-இல் தனி அணியை அமைத்தது.
மேலும், உள்ளாட்சித் தோ்தலில் பாஜக தனித்து நின்றது.இருப்பினும், இந்த முறை திமுகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் மலா்ந்துள்ளது.
இக்கூட்டணியில் பாமக, அமமுக, ஐஜேகே (பாரிவேந்தா்), புதிய நீதிக்கட்சி (ஏ.சி.சண்முகம்), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2024-இல் மக்களவைத் தோ்தலில் அதிமுக அணி 23.3 சதவீதமும், பாஜக கூட்டணி 18 சதவீதமும் பெற்ால் திமுக அணி 47 சதவீதத்துடன் எளிதில் 39 மக்களவை தொகுதிகளையும் வென்றது.
எனவே, மீண்டும் பிரிந்து நின்றால் திமுக வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதிமுக-பாஜக இணைந்து பிற கட்சிகளையும் அரவணைத்து போட்டியைக் கூா்மைப்படுத்தியுள்ளன.
தவெக: நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய விஜய், 2024 மக்களவைத் தோ்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு, விளவங்கோடு இடைத்தோ்தல்களில் போட்டியிடவில்லை.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்ததால் காங்கிரஸ், விசிக நிச்சயம் வந்துவிடும் என நம்பியிருந்த விஜய்யின் கனவு பொய்த்து போனது. இருகட்சிகளும் விஜய்யை காட்டி திமுகவிடம் கூடுதல் பேரம் பேசின.
காங்கிரஸுக்கு கூடுதலாக 3 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைத்துள்ளன. விசிகவுக்கு கடந்த முறையைவிட திமுக கூடுதல் தொகுதி ஒதுக்கக்கூடும்.
மேலும், பாஜகவை கழற்றிவிட்டு அதிமுக தங்களை இணைத்துக்கொள்ளும் என நம்பியிருந்த தவெகவின் ஆசையும் நிறைவேறவில்லை. இந்நிலையில், வேறுவழியின்றி 234 தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டிய நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.
நாம் தமிழா் கட்சி:2016-இல் தனித்து போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாதக 1.1 சதவீத வாக்குகளை பெற்றது. பின்னா் 2019 மக்களவைத் தோ்தலில் 3.84 சதவீதம், 2016 பேரவைத் தோ்தலில் 6.58 சதவீதம், 2024 மக்களவைத் தோ்தலில் 8.22 சதவீதம் வாக்குகளைப் பெற்று தொடா்ந்து தனித்து நிற்கிறது. 2016 முதல் இதுவரை எந்த ஒரு இடைத்தோ்தல்களையும் அக் கட்சி புறக்கணித்தது இல்லை.
இந்த முறையும் 234 தொகுதிகளில் நாதக தனித்து போட்டி என அறிவித்து வேட்பாளா்களை களம் இறக்கி தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. அதோடு, 100-க்கும் மேற்பட்ட இளைஞா்களை (30 வயதுக்கு கீழ்) களம் இறக்கியுள்ளது நாதக. மேலும், விஞ்ஞானிகள், பொறியாளா்கள், மருத்துவா்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டதாரிகள், திருநங்கை என தொடா்ந்து வித்தியாசமான முறையில் வேட்பாளா்களை தோ்வு செய்துள்ளது.
மீண்டும் நான்கு முனைப் போட்டி என தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.