முகப்பு
தமிழ்நாடு

விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டக்கூடிய செயல்: ஆதவ் அர்ஜுனா

தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுசெயலாளர் மற்றும் தவெக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளார் ஆதவ் அர்ஜுனா பேசியவை.

Updated On : 31 மார்ச், 2026 at 6:35 AM
ஆதவ் அர்ஜுனா - X
பகிர்:

விஜய் மீதான வழக்குப்பதிவு அவரை மிரட்டக்கூடிய செயல் என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுசெயலாளரும் தவெக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளாருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்பதாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கினார். தொண்டர்கள் கூட்டம் அதிகமானதால் சில பகுதிகளில் பிரசாரத்தை ரத்து செய்தார்.

பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், பெரவள்ளூர் - செம்பியம் காவல் நிலைய எல்லைகளுக்கு மத்தியில் பிரசாரம் செய்தபோது, இரு இடங்களில் அனுமதி பெற வேண்டிய நிலையில் பெரவள்ளூரில் மட்டும் அனுமதி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி குமார் அளித்த புகாரில், விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி இன்று வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுடன் பேசினார். அதில், “மு.க.ஸ்டாலின் சார் கொளத்தூர் தொகுதியில் ரோடு ஷோ போனபோது கூட்டம் வரவில்லை. ஆனால், எங்கள் தலைவர் அங்கு வந்தவுடன் பெரிய மக்கள் அலை உண்டானது.

காவல்துறையினர் சாலைகளை வரைமுறை படுத்தவில்லையென்றால் மக்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இதைத்தான் கரூர் விவகாரம் சொல்லியது.

இவர்களின் அரசியலுக்காக மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று கரூரில் காவல்துறை எங்களுக்கு உறுதுணையாக இல்லை. அதேபோல, முதல்வர் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு எந்தப் பிரச்னை ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி காவல்துறை அங்கு செயல்படவில்லை. எங்கள் தலைவரின் பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு 10 காவல்துறையினர் கூட அங்கு இல்லை. முதல்வருக்கு 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு தருகின்றனர். ஆனால், அவரைப் பார்க்க மக்கள் வரவில்லை.

எங்களைப் பார்க்க 10,000க்கும் மேல் மக்கள் வருகின்றனர். ஆனால், அங்கு முறையான பாதுகாப்பு இல்லை. மக்களுடைய பாதுகாப்பையும் சாலையை ஒழுங்குபடுத்தக்கூடிய பொறுப்பும் காவல்துறைக்கு மட்டும்தான் உள்ளது. நாங்களும் வேட்பாளர்கள் தான். எல்லா வேட்பாளர்களையும் ஒரே மாதிரி நடத்தவேண்டும்.

எங்கள் தலைவரைக் காண அதிக மக்கள் வருகையில் ஏன் காவல்துறை சரியாக அதனை சரியாக ஒழுங்குப் படுத்தவில்லை. இதுதான் எங்களுடைய கேள்வி. அதற்கு எங்களுடைய கடுமையான கண்டனங்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள். திமுக தலைவர் ஸ்டாலின் சார் அவர்களே. மக்களுடைய உயிரைப் பணயம் வைத்து மற்ற கட்சிகள் மீது பழியைப் போட்டு குறிப்பாக எங்கள் தலைவர் மீது கெட்ட பெயரை உண்டாக்கி நீங்கள் நல்ல பெயர் எடுத்து போலியான ஒரு கருத்தை உருவாக்கும் அரசியலை நிறுத்துங்கள். மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

50 ஆண்டுகால அரசியல்வாதி என்கிறீர்களே? கரூரில் 40 பேர் இறந்த பிறகுமா உங்களுக்கு புரியவில்லை. எதற்காக உங்கள் கொளத்தூர் தொகுதிக்கு நாங்கள் வரும்போது காவல்துறையை முடக்கினீர்கள். இதுதான் எங்களுடைய கேள்வி.

அதுமட்டுமின்றி, எங்கள் தலைவர் விஜய் மீது எஃப்.ஐ,ஆர். பதிவு செய்தது முடக்கக்கூடிய செயலல்ல. மிரட்டக்கூடிய செயல். இதற்கு சட்டரீதியான போராட்டத்தை நடத்துவோம். தேர்தல் ஆணையத்திடம் காவல்துறையின் ஒருதலை பட்சமான நடத்தையைச் சொல்வோம்.

காவல்துறை அதிகாரிகளைக் குறை சொல்வதைவிட அவர்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் . அதை நாங்கள் பதிவு செய்வோம். கூடிய விரைவில் இது மக்களுக்கும் தெரியவரும்.

தலைவர் விஜய் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது அநியாயம். மக்களுக்குத் தெரியும் இது அநியாயம் என்று. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு என்ன அநியாயம் நடந்ததோ அதுவே எங்கள் தலைவர் விஜய்க்கும் நடக்கிறது. இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

summary

Case Registered Against Vijay... A Threatening Act: Adhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.