கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியை அதிமுக மூன்றாவது முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புடன் அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
தொகுதியின் சிறப்பு:
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் 1952இல் உருவாக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் இதுவும் ஒன்று. 1977இல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று உளுந்தூர்பேட்டை தனித் தொகுதியானது. மற்றொன்று திருநாவலூர் பொதுத்தொகுதி.
2008இல் மீண்டும் நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது உளுந்தூர்பேட்டை பொதுத்தொகுதி உருவானது. உளுந்தூர்பேட்டை வட்டத்தை மட்டுமே உள்ளடக்கிய பேரவைத் தொகுதி என்ற பெருமை இத்தொகுதிக்கு உண்டு.
நில அமைப்பு:
இத்தொகுதியில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வார்டுகள், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அதையூர், அலங்கிரி, அங்கனூர், ஆசனூர், எ.அத்திப்பாக்கம், தாமல், எல்லை கிராமம், ஏமம், எறையூர், காட்டுஎடையார், காட்டுநெமிலி, காட்டுசெல்லூர், பு.கிள்ளனூர், கிளியூர், எ.கொளத்தூர், பு.கொணலவாடி, குணமங்கலம், கூத்தனூர், கூவாடு, ஏ.குமாரமங்கலம், குஞ்சமரம், எம்.குண்ணத்தூர், எ.மழைவராயனூர், மூலசமூத்திரம், நத்தாமூர், நெடுமானூர், பாலி, பல்லவாடி, பரித்தல், பெருங்குறுக்கை, பிடாகம், புத்தமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், ஏ.சாத்தனூர், சீதேவி, சிக்காடு, சீக்கம்பட்டு, சிறுப்பாக்கம், தானம், வீரமங்கலம் உள்பட 53 ஊராட்சிகள் உள்ளன.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் கீரிமேடு, ஆலங்குப்பம், ஆமூர், ஆணைவாரி, ஆனத்தூர், அரசூர், அரும்பட்டு, இருவேல்பட்டு, கண்ணாரம்பட்டு, காந்தலவாடி, கரடிப்பாக்கம், காரப்பட்டு, டி.குமாரமங்கலம், மேலமங்கலம், மேல்தணியாளம்பட்டு, பேரங்கியூர், பெரியசெவலை, பொய்யரசூர், சரவணம்பாக்கம், சேமங்கலம், செம்மார், சித்தானங்கூர், தென்மங்கலம் உள்பட 24 கிராமங்கள் உள்ளன.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு:
இத்தொகுதியில் அரசுக் கலை கல்லூரி கொண்டுவர வேண்டும் என்பதும், புதிய பேருந்து நிலையம் உருவாக்க வேண்டும், சேலம் திருச்சி மார்க்கங்களை பிரிக்கும் மையப் பகுதியாக உளுந்தூர்பேட்டை இருந்தாலும் அதற்கேற்ப கூடுதல் வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
இத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. ரூ.22 கோடியில் மலட்டாறு தடுப்பணைத் திட்டம் கொண்டுவரப்பட்டு 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற செய்தது. ரூ.75 கோடியில் 850 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம், புதிய நீதிமன்ற வளாகம், புதிய தொழிற்பயிற்சி நிலையம், பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தியது உள்ளிட்டவை மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
சாதி, சமூகம், தொழில்கள்:
இத்தொகுதியில் வன்னியர்கள் 35 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 32 சதவீதம், உடையார்கள் 12 சதவீதம் மற்றும் பிற சமூகத்தினரான முதலியார், செட்டியார், யாதவர், நாயுடு, ரெட்டியார் உள்ளிட்டோர் உள்ளனர்.
இதுவரை வென்றவர்கள்:
இதுவரை இத்தொகுதியில் 1971, 1977, 1980, 1989, 1996, 2006 என திமுக 6 முறையும், 1984, 1991, 2001, 2011, 2016 என அதிமுக 5 முறையும், 1952, 1957, 1967 என காங்கிரஸ் மூன்று முறையும், 1962 இல் சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றிப்பெற்றுள்ளன.
இத்தொகுதியில் 2011, 2016 என இரு முறை தொடர்ந்து இப்போதைய எம்.எல்.ஏ. இரா.குமரகுரு வெற்றிப்பெற்றுள்ளார். 2011இல் அதிமுக-தேமுதிக கூட்டணியில் குமரகுரு 1,14,794 (60.09 சதவீதம்), திமுக-பாமக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் எம்.முகமது யூசுப் 61,286 (32.08 சதவீதம்) வாக்குகளையும் பெற்றனர். அப்போது கிட்டதட்ட 29 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் குமரகுரு வெற்றிப்பெற்றார்.
2016 பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி உருவானது. இதில் அதிமுக சார்பில் தனித்துப் போட்டியிட்டபோது குமரகுரு 81,973 (36.04 சதவீதம்) வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார். திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 (34.21 சதவீதம்) வாக்குகளையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 34,447 (15.14) வாக்குகளையும், பாமக வேட்பாளர் 20,233 (8.89 சதவீதம்) வாக்குகளையும் பெற்றனர். நான்குமுனைப் போட்டியில் குமரகுரு சுமார் 1.80 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிப்பெற்றார்.
கட்சியின் செல்வாக்கு:
இம்முறை அதிமுக, பாமக, தேமுதிக என பலமான கூட்டணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான குமரகுரு போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது. இத்தொகுதியில் திமுகவே களம் இறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. மணிவண்ணன், கடந்த முறை திமுக சார்பில் களம் இறங்கிய வசந்தவேலு, உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலர் வைத்தியநாதன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் யாருக்கு வாய்ப்பு என்பது மார்ச் 10-ஆம் தேதி தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.